காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா?

வாழைப்பழங்கள் எல்லாப் பழங்களையும் போலவே இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டவை. எனவே அவற்றை வெறும் வயிற்றில் உண்ணும் போது குடல் சம்மந்தமான பிரச்னைகள் வரக்கூடும்.
காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா?
Published on
Updated on
2 min read

வாழைப்பழம் மிகச் சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழ வகைகளில் ஒன்று என அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்காக சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, சாப்பிடும் போது பழத்தைக் கழுவத் தேவையில்லை, கடித்து, அரைத்து விழுங்கத் தேவையில்லை, வெறுமே மென்றாலே தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு இறங்கும் என்று காரணம் காட்டி வேறு சத்தான காலை உணவுகளைச் சாப்பிட சோம்பல் பட்டுக் கொண்டு அன்றாடம் காலை உணவாக வெறும் வயிற்றில் வாழைப்பழங்களை மட்டுமே சாப்பிட்டு விட்டு பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்வது தவறு. ஏனெனில் வாழைப்பழங்களில் நிறைந்திருக்கும் மைக்ரோ நியூட்ரியன்டுகளான பொட்டாசியம், மக்னீசியம், மற்றும் ஃபைபர் எனும் மூன்று சத்துக்களுமே வெறும் வயிற்றில் வாழைப்பழங்களைச் சாப்பிடும் போது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என உணவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

  • வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய இயற்கைச் சர்க்கரையின் அளவு அதை உண்டதும் ஆற்றலைத் தூண்டி மனிதர்களைச் சுறுசுறுப்பானவர்களாக உணரச் செய்வதாக இருந்தாலும் கூட நேரமாக, ஆக அப்படியே எதிர்மறையாகி மிக, மிகச்சோர்வான உணர்வைத் தரக்கூடியதாக மாற்றி விடக்கூடியதாம்.
  • தற்காலிகமான பசியை அடக்க வாழைப்பழங்களை உண்டால் சற்று நேரத்தில் தூக்கக் கலக்கமாக உணர்வீர்கள். அதோடு உடல் எடையையும் உடனடியாக அதிகரிக்கக் கூடிய தன்மை வாழைப்பழங்களுக்கு உண்டு என்கிறது உணவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்று.
  • வாழைப்பழங்கள் எல்லாப் பழங்களையும் போலவே இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டவை. எனவே அவற்றை வெறும் வயிற்றில் உண்ணும் போது குடல் சம்மந்தமான பிரச்னைகள் வரக்கூடும்.

அதெல்லாம் சரி தான். ஆனால், அதற்காக காலை நேரத்தில் வாழைப்பழங்களே சாப்பிடக்கூடாது என்பதில்லை. ஆனால் எப்படிச் சாப்பிடுவது? என்பதில் சில விதிமுறைகள் உள்ளன. வாழைப்பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து ஒரு நாளின் காலைப்பொழுதைத் துவக்க மிகச்சிறந்த உற்சாக டானிக்காகச் செயல்படக்கூடும், எப்போது தெரியுமா? வாழைப்பழங்களை நாம் பிற பழங்கள் மற்றும் நட்ஸ்களுடன் இணைத்துச் சாப்பிடும் போது பொட்டாசியம் மிகச்சிறந்த விளைவைத் தரும். வாழைப்பழத்திலுள்ள மெக்னீசியம் சத்து, வெறும் வயிற்றில் சாப்பிடுகையில் ரத்தத்தில் உள்ள கால்சியம், மெக்னீசியம் அளவுகளில் பற்றாக்குறையை ஏற்படுத்தி கார்டியோ வாஸ்குலர் பிரச்னைகளில் கொண்டு விடக்கூடும், ஆனால், அதே பழத்தை பிற பழங்கள், நட்ஸ்கள், பிரெட் அல்லது சப்பாத்தி உள்ளிட்ட எளிய உணவுகளுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் அதன் அமிலத்தன்மை குறைக்கப்பட்டு ஆரோக்யமான விளைவுகளைத் தரும். 

இதைப் பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்;

ஆயுர்வேதம் வாழைப்பழங்களை மட்டுமல்ல, எந்த ஒரு பழமுமே காலை வேலையில் வெறும் வயிற்றில் உண்ணத்தக்கது அல்ல என்று வகுத்துள்ளது. ஏனெனில் எல்லாப் பழங்களுமே அமிலத்தன்மை கொண்டவை தான். அது மட்டுமல்ல இன்று நாம் உண்ணக்கூடிய எல்லாப் பழங்களுமே இயற்கையாக விளைந்தவை அல்ல, பல்வேறு விதமான ரசாயண உரங்கள் இட்டு வளர்க்கப் பட்டவை தான். எனவே அவற்றில் முன்னதாகவே ரசாயனங்களால் விளையும் விஷத்தன்மை இருக்கும். அவற்றை வெறும் வயிற்றில் தனித்தனியே சாப்பிட்டு வயிற்றைப் புண்ணாக்கிக் கொள்வதைக் காட்டிலும் பிற சத்தான உணவுகளோடு கலந்து சாப்பிட்டால் கொஞ்சமாவது ஆரோக்யமாக இருக்கும். எனவே வாழைப்பழங்கள் மட்டுமல்ல, எல்லா வகைப் பழங்களையுமே நட்ஸ்களோடு கலந்து உண்பதே சிறந்தது என்கிறது ஆயுர்வேதம்.

ஆகவே இனிமேல் காலையில் அலுவலகமோ, பள்ளியோ எங்கு செல்வதாக இருந்தாலும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட விரும்பினீர்கள் என்றால் அவற்றோடு சேர்த்து பாதாம், முந்திரிப்பருப்பு, பிஸ்தா, வால்நட் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, அன்னாசி, கொய்யா, திராட்சை, மாதுளை என எல்லாவற்றையும் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com