மன அழுத்தத்திற்கு இசை(வான) தீர்வு!
மன அழுத்தத்துக்கு இசைதான் தீர்வு என்று ராஜலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் தங்கம் மேகநாதன் வலியுறுத்தினார்.


மன அழுத்தத்துக்கு இசைதான் தீர்வு என்று ராஜலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் தங்கம் மேகநாதன் வலியுறுத்தினார்.
சென்னை தியாகராய நகர், ஸ்ரீ தியாகப்பிரம்ம கான சபாவில் 7-ஆவது ஸ்ரீ ஜெயந்தி இசைத் திருவிழா மற்றும் ரூ.1.60 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட மஹா சுவாமிகள் அரங்கையும் சனிக்கிழமை திறந்துவைத்து அவர் பேசியதாவது:
அதர்மத்தை அழிப்பதற்காக கிருஷ்ணர் பூலோகத்தில் அவதரித்த நாளை 'கிருஷ்ண ஜெயந்தி'யாகக் கொண்டாடுகிறோம். இதையொட்டி இசை விழா நடைபெறுவது பொருத்தமானது.
இதிகாசங்களை நினைவுக்கூர்ந்தால் கிருஷ்ணர், ராவணன் ஆகிய இருவர் முக்கியமானவர்கள். ராவணன் தனது இசையால் சிவனையே எதிரில் கொண்டு வந்தான். ஸ்ரீ கிருஷ்ணர் தனது இனிமையான கானத்தின் மூலம் மனிதர்களை மட்டுமில்லாமல், விலங்குகளையும் கட்டிப்போட்டவர்.
இசையும், கதையும் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும். ஆனால், ஏனோ குழந்தைகள் இப்போதெல்லாம் அதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆன்ட்ராய்டு போனில் பேசுவதிலும், கார்ட்டூன் தொலைக்காட்சி பார்ப்பதிலும் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இசையை கற்பித்து புராணக் கதைகளைச் சொல்லிக்கொடுக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் தங்கள் கற்பனைத்திறனை வளர்த்துக்கொண்டு முன்னேற முடியும். மேலும் இன்றைய அவசர யுகத்தில் மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ள இசை சிறந்த தீர்வாக இருக்கும்.
இசை விழாவை ஒருங்கிணைத்து நடத்துவதும், சிறந்த கலைஞர்களை ஊக்குவித்து விருது வழங்கி கௌரவிப்பதும் எளிதான காரியமல்ல. இதுபோன்ற பணிகளை தியாகப் பிரம்மகான சபை செய்து வருவது பாராட்டுக்குரியது என்றார் தங்கம் மேகநாதன்.
முன்னதாக சபாவின் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். கர்நாடக இசைப் பாடகி எஸ்.மஹதி, வயலின் இசைக் கலைஞர் ஆர்.பிரேமலதா, கடம் இசைக் கலைஞர் சுகன்யா ராம்கோபால், பரதநாட்டிய இசைக்கலைஞர் அர்ச்சனா நாராயணமூர்த்தி, நாடக இசைக்கலைஞர் வி.பிருந்தா ஆகியோருக்கு "வாணி கலா நிபுணா' விருது, பொற்கிழி, ரொக்கப் பரிசை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், ராஜலட்சுமி கல்வி குழுமத்தின் தலைவர் தங்கம் மேகநாதன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
விருது பெற்ற கலைஞர்களை பாராட்டி இசை, கவின்கலை வேல்ஸ் பல்கலைக்கழக பள்ளியின் (school of music and fine arts vels university) தலைவர் பிரமீளா குருமூர்த்தி பேசினார்.
மொழி அழிந்தால் இசை அழிந்துவிடும்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
மொழி அழிந்தால் இசை அழிந்துவிடும். இசையை நாம் காப்பாற்ற வேண்டுமானால் அதற்கு அடிப்படையான மொழியை குழந்தைகள் அறிந்திருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
சென்னை, தியாகராய நகர் ஸ்ரீ தியாகப் பிரம்மகான சபா சார்பில் நடைபெற்ற ஸ்ரீஜெயந்தி இசைத் திருவிழாவில் அவர் ஆற்றிய தலைமை உரை:
விழாவில் பேசிய தங்கம் மேகநாதன் இன்றைய குழந்தைகள் இசையை கற்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
குழந்தைகளிடம் அதிக மதிப்பெண் பெறவேண்டும், நன்கு படித்து வேலைக்குச் சென்று பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கும் பெற்றோர் அவர்களிடம் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துரைப்பதில்லை. குழந்தைகளுக்கு இசையைச் சொல்லிக் கொடுக்காவிட்டால் அதனால் ஏற்படும் நஷ்டம் என்ன என்பதை அவர்களுக்கு நாம் உணர்த்தியாக வேண்டும். மொழி அழிந்து விட்டால், பண்பாடும், நமது அடிப்படையும் அழிந்து விடும். குழந்தைகளுக்குத் தாய்மொழியில் எழுத, படிக்க பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
மொழியை இழந்து விட்டு, கர்நாடக சங்கீதத்தைக் காப்பாற்றிவிட முடியும் என்று நினைத்தால், நிச்சயமாக அது முடியாது. நமது இசை, பண்பாட்டுக் கூறுகளை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால், முதலில் நாம் நமது மொழியைக் காப்பாற்றியாக வேண்டும். ஆகவே நமது குழந்தைகள் தாய்மொழியைத் தெரிந்து இருப்பதை பெற்றோர் உறுதி செய்தாக வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...