விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மன அழுத்தப் பிரச்னையா? மீண்டு வர என்ன செய்யலாம்?

என்ன வாழ்க்கை இது என்று சில சமயம் நாம் மனச் சோர்வு அடைந்து செயலற்றுப்

News image
Updated On :5 செப்டம்பர் 2017, 9:48 am

என்ன வாழ்க்கை இது என்று சில சமயம் நாம் மனச் சோர்வு அடைந்து செயலற்றுப் போய்விடுவோம். நாம் மிகவும் நம்பியவர்கள் நம்மை விட்டு விலகியிருக்கலாம். நாம் நேசித்த ஒருவர் பிரிந்து போயிருக்கலாம். அல்லது பொருளாதாரப் பிரச்னை, வாழ்வியல் சிக்கல், தீர்க்கமுடியாத வியாதி என்று ஏதேனும் ஒன்றால் நாம் நிலைகுலைந்து தடுமாறி நின்றிருக்கலாம். எந்த வழியிலும் திரும்பிப் போக முடியாத அளவுக்கு ஒருவழிப்பாதையில் சிக்கி  சூழல் கைதியாகியிருக்கலாம். தாங்கவே இயலாத துயர் நம்மை அல்லும் பகலும் சிறிது சிறிதாக கொன்றொழித்துக் கொண்டிருக்கலாம். இன்னும் இன்னும் எத்தனையோ பேரிடர்கள்..பெரும் பிரச்னைகள்...புதிக்கட்டங்கள் என எதுவொன்றிலோ நாம் சிக்கியிருக்கலாம். அதிலிருந்து மீள்வது எப்படி? புறச் சூழல்களின் அழுத்தத்தால் நம்மை தொலைத்துவிடாமல் விரைவில் மீண்டு எழுவது எப்படி?

தனிமையில் இருக்காதீர்கள்

தோல்வியிலும் துயரிலும் மனம் வாடியிருந்தீர்கள் என்றால் நிச்சயம் தனிமையில் இருக்கக் கூடாது. உங்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அல்லது உறவினர்கள் என்று யாரேனும் ஒருவரின் உதவியை நாடுங்கள். வயதும் அனுபவமும் உள்ள முதியோரிடம் பிரச்னைளைச் சொல்லிப் பாருங்கள்.  உங்களுடைய பிரச்னையை முதலில் சொல்லத் தயங்கினாலும், சும்மாவேனும் எதாவது பேசிக் கொண்டிருங்கள். நீங்கள் சொல்லாவிட்டாலும் கூட உங்களுக்கு நெருக்கமானவர்களால் நிச்சயம் உங்கள் பிரச்னையை புரிந்துணர முடியும். எனவே இனி எல்லாம் முடிந்தது என்று நினைத்து உங்களை நீங்களே வருத்திக் கொண்டு தனிமையை தேடிச் செல்ல வேண்டாம்.  

Story image

தனிமை ஒரு போதும் தீர்வு தராது. சமுக உறவுகளை பேணுவது இத்தகைய மன அழுத்தத்தை போக்கும். உலகத்துடன் வாழ்க்கையுடன் தொடர்பில் இருங்கள். தவிர இச்சமயங்களில் தான் நண்பர் யார் துரோகி யார் என்றும் தெளிவாகத் தெரிந்து விடும். உங்கள் நண்பர்களில், சரியானவர் யார், தீங்கு செய்பவர் யார் எனக் கண்டறிந்து கொள்ளுங்கள். அனுபவம் தான் சிறந்த ஆசான். சில சமயம் மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து நாம் பாடம் படிக்க முடியும்.

Story image

வெளிச்சம் எந்தத் திசையிலிருந்து எந்தக் கணத்தில் வரும் என்று உங்களுக்குத் தெரியாது. எனவே காத்திருங்கள். நம்பிக்கை என்பது வெளியில் இல்லை. அது உங்களுக்குள் தான் பொதிந்து கிடக்கிறது. எது நேரினும் அழியாத ஒரு மனம் நம்மிடம் தான் உள்ளது.  

நேர்மறை எண்ணங்கள்

எனக்கு எப்படி துரோகம் செய்யலாம் என்று ஆத்திரத்தில் மனக் கொந்தளிப்பில் இருக்கிறீர்கள் என்றால் அது துரோகம் செய்து உங்களை விட்டு நீங்கியவர்களை பாதிக்காது. உங்களைத்தான் பாதிக்கும். உங்கள் உடல்நிலை இதனால் தளர்ந்துவிடும். நம்பிக்கை துரோகம் மகா பாதகச் செயல்தான். ஆனால் அதற்காக உங்கள் மனத்தை ஏன் சித்திரவதைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்? உணர்வுகளின் உச்ச நிலைக்கும் கோபத்துக்கும் உள்ளாவது ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தும். அத்தகைய நிலை பழி வாங்கத் தூண்டும் செயல்களுக்கு இட்டுச் செல்லும்.

Story image

பழி வாங்குவதில் ஒருவித குரூர திருப்தியை சிலர் அடைவார்கள். ரத்தத்துக்கு ரத்தம், கண்ணுக்கு கண் என்பதாக தன்னை துன்பத்துக்கு உட்படுத்தியவர்களை உடல்ரீதியாகவோ உளவியல் ரீதியாகவோ அச்சுறுத்துவது ஒரு பழிவாங்கும் செயலாகக் கருதப்படுகிறது. சமயம் வரும் வரை காத்திருந்து முன்பு எனக்கு செய்தாயே அப்போது இப்படித்தான் வலித்தது என்பதை எதிரியை உணரச் செய்வதும் இன்னொரு வகைப் பழிவாங்குதல். பழிவாங்கும் குணமே ஒருவரின் நிம்மதியை குலைத்து சதா சர்வ காலமும் பகை உணர்வைச் சுமந்து எதிர்மறை எண்ணங்களால் மன அழுத்தத்துடன் வாழச் செய்துவிடும்.

Story image

உண்மையில் மன்னிப்பது தான் ஆகச் சிறந்த பழிவாங்குதல் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒருவர் செய்த தீங்கினை மறந்து மன்னித்துவிட்டால் அதைவிடவும் நேர்மறையான விஷயம் எதுவும் இருக்க முடியாது. அவர்களின் குற்றவுணர்வு தான் அவர்களுக்கான தண்டனை என்பது உண்மை. எனவே மனத்தை தூய்மையாக, நிம்மதியாக வைத்துக் கொள்ள நேர்மறை எண்ணங்களுடன் வாழ்தல் வேண்டும். 

உன்னை அறிந்தால்..உண்மை அறிந்தால் பிரச்னை தீரும்

உங்களிடம் உள்ள பலம் மற்றும் பலவீனங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பலவீனத்தை பலமாக மாற்றும் கலை எளிது. அது தொடர் முயற்சியால் சாத்தியப்படும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாதது மாற்றம். அது தவிர்க்க முடியாத ஒரு விஷயம். எனவே வாழ்க்கை மாற்றத்தை ஏற்று அதன் நிறை குறைகளை அறிந்து செயல்படுகையில் மன அழுத்தம் குறையும்.

Story image

உங்கள் பாதை மற்றும் பயணத்தில் உறுதியாக இருங்கள். மற்றவர்களின் மனம் நோகாமல், அன்போடு வாழுங்கள். நல்ல பழக்க வழக்கங்களை சிறந்த பண்பு நலன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மனத்தை லகுவாக்குங்கள்

மனத்தை லேசாக்குவதில் இசை முக்கிய பங்கு வகிக்கும். மனத்தில் வலி இருந்தால் வேறு எந்த வேலைகளையும் திறம்படச் செய்ய முடியாது. உங்களுக்கு மிகவும் பிடித்த இசையை கேளுங்கள். உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் தொடர்ந்து இசை கேட்பது உங்கள் மனத்தை லகுவாக்கும். இசை கேட்கப் பிடிக்கவில்லை என்றால் திரைப்படம் செல்லுங்கள். அல்லது இயற்கை காட்சியை ரசியுங்கள். தினமும் பீச் அல்லது பார்க் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது புதிய ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள்.

Story image

வேறு ஒரு விஷயத்தில் கவனத்தை திசை திருப்புவது உங்களை மீட்டெடுக்க வைக்கும் எளிய வழி. பிரச்னையை நேர்வழியில் எதிர் கொள்ளுங்கள். தவறு உங்கள் மீது இருந்தால் அதை தைரியமாக ஒப்புக் கொள்ளுங்கள். குற்றவுணர்வு உங்களை சிறுக சிறுக அழித்துவிடும். மன்னிப்பு கோருதல் ஒரு நல்ல பண்பு. இந்த உலகில் தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லை. எனவே அதிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குங்கள்.

Story image

மனச் சோர்விலிருந்து விடுபட நிச்சயம் உங்களுக்கு ஓய்வு தேவை. சிலருக்கு மன அழுத்தப் பிரச்னையால் உறக்கம் வராது. ஆனால் போதிய ஓய்வு எடுப்பதால் மூளை மற்றும் உடம்பு புத்துணர்ச்சி பெறும். முயற்சி செய்து ஓய்வு எடுத்து மன அழுத்தத்தை குறைத்துவிடுங்கள். இவைத் தவிர வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை செய்து பாருங்கள். நல்ல சத்தான உணவு, போதிய உறக்கம், தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி ஆகியவை சிறப்பான வாழ்க்கை முறைக்கு மிகவும் தேவை. இதை சரியாகச் செய்தால் மன அழுத்தத்தை மிக விரைவில் குறைக்கலாம். 

பயணம் செய்யுங்கள்

'உலகைச் சுற்றிப்பார் விழித் தெழுந்து,
மறுமுறையும் மனிதப் பிறப்பு வாய்க்குமா உனக்கு?
மனிதப் பிறப்பு தொடர்ந்தாலும்
மறுமுறையும் இளமை கிடைக்குமா உனக்கு?’
 

வெளி ஊருக்கு அல்லது வாய்ப்பு இருப்பவர்கள் வெளிநாட்டுக்கு பயணம் செய்யுங்கள். ஒரே இடம், ஒரே மனிதர்கள், ஒரே ஊரில் இருப்பது மனத்தை மேலும் இறுக்கமாக்கும். பயணம் உங்களை முற்றிலும் வேறொரு மனிதராக உணரச் செய்யும் அளவுக்கு நன்மை தரும். நாம் நம்பும் வாழ்க்கை அல்லது நாம் பார்க்கும் விஷயங்கள் மட்டுமல்ல வாழ்க்கை. அது மிகப் பெரியது. மிகவும் பிரம்மாண்டமானது என்பதை உணர்வுபூர்வமாகத் தெரிந்து கொள்வீர்கள்.

Story image

அனுபவங்கள் பெருகப் பெருகத் தான் மனம் விலாசமாகும். மனம் விலாசமானால் குப்பை கூளங்கள் தேங்காது. எவ்வித பிரச்னையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கை மிகவும் எளிமையானது. சிக்கலற்றது அதை சிக்கலாக்குவது வேறு யாரும் இல்லை. சாட்சாத் நீங்களே தான் என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி வாழ்க்கையை வாழ முடிவெடுப்பீர்கள். இதற்கு பயணம் மட்டுமே ஆகச் சிறந்த வழி.

புத்தகம் படிக்கலாமே

புத்தகம் படிப்பதில் விருப்பமுள்ளவர்களாக இருந்தால் அதிக நேரம் படிப்பதில் செலவழியுங்கள். தன்னம்பிக்கை புத்தகங்களை இந்தச் சமயம் தேர்ந்தெடுக்க வேண்டாம். உங்கள் மனநிலைக்கு அது அதிக எரிச்சலை ஊட்டும் விதமாக அமைந்துவிடும். ஃபேண்டஸி கதைகள், அல்லது பயோகிராபி அல்லது காமிக்ஸ் போன்றவற்றை தேர்ந்தெடுங்கள். அது உங்கள் மனத்தை லேசாக்கும். புனைவினைப் படிப்பதால் இது போன்ற சமயங்களில் கடினமான வாழ்நிலைச் சூழலிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க முடியும்.

Story image

எழுத்தின் வழியே உங்களை நீங்கள் மறக்க முடியும். எழுத்து தரும் சிந்தனையால் உங்களை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும். உலகத் தரமிக்க புதினங்களை படிக்க படிக்க நம்முடைய பிரச்னைகளை எதிர்கொள்ள மனப்பக்குவம் கிடைக்கும். குறைந்தபட்சம் மனம் கலக்கத்திலிருந்து மீண்டு தெளிவாகச் சிந்திக்க முடியும்.

Story image

வாசிப்பு எப்போதும் ஒரு புதிய சாளரத்தை திறந்து விடும் என்பதை புத்தகப் பிரியர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால் தான் அவர்களுடைய அந்த பிரத்யேக உலகத்தில் தன்னை மறந்து பல மணி நேரம் அவர்களால் வசிக்க முடிகிறது. 

தியானம் பழகுங்கள்

யோகா தியானம் என்றெல்லாம் அடிக்கடி படிக்கிறோம், கேட்கிறோம். இதெல்லாம் மற்றவர்களுக்கானது என்று நினைத்து அதுபற்றி தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறீர்களா? நமக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் நம் உடல். ஒவ்வொரு நாளும் புதியதாகப் பிறக்கிறோம். எவ்வளவோ பாடுகளுக்கு இடையேயும் ஒரு சிறு துளி தேன் போன்று தித்திக்கும் வாழ்க்கையை அனுபவிக்க இந்த உடலையே சார்ந்திருக்கிறோம் அல்லவா? அத்தகைய உடலை போற்றுவதற்கான ஒரே சிறந்த வழி யோகா. எளிய யோகப் பயிற்சியை தினமும் 15 லிருந்து 30 நிமிடம் செய்தால் கூடப் போதும். அது உங்களிடம் செய்விக்கும் மாற்றத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். போலவே தியானம். தியானம் நம்மை யார் என்று நமக்கு புரிய வைக்கும் ஒரு கருவி.

Story image

இந்த உலகில் நாம் பிறந்தது இன்ப துன்பங்களை அனுபவித்து இறந்து போவதற்காக மட்டுமல்ல என்ற பேருண்மையை விளங்கச் செய்யும் ஒன்று. எல்லாவித மாயைகளிலிருந்து மனத்தை தூய்மைப்படுத்தி நாம் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கச் செய்யும் மந்திரச் சாவி அது. தேடுவதிலும் கூட ஒரு அகங்காரம் உள்ளது, எனவே சும்மாயிருப்பது எப்படி என்ற சூட்சுமத்தை உணர்த்தும். அடுத்தடுத்த படிநிலைகளுக்கு நம்மை உயர்த்திச் செல்லும் ஒரே விஷயம் தியானம் தான். அஞ்ஞானச் சேற்றிலிருந்து நம்மை விடுவித்து ஞானத்தின் பாதையில் நடக்கச் செய்வதும் தியானம் தான்.

Story image

ஒரே வரியில் சொல்வதெனில் எவ்வித சுமையும் இல்லாமல் எடையற்று மிதப்பது போல நம்மை உணரச் செய்வது தியானம் தான். அதை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அனுபவத்தில் ஒருவர் உணர்ந்தால் மட்டுமே அதன் பலன்களை அறிவது சாத்தியம்.

பயம் வேண்டாம்

மரணம் என்பது இறுதி அல்ல. பிறப்பு என்றால் இறப்பு என்பது நிச்சயம். குழந்தைப் பருவம் இறந்து தான் பதின் வருத்துக்குள் நுழைகிறோம். அதுவும் முடிந்த நிலையில் இளமை. இளமையின் இறப்பு முதுமை. முதுமையின் இறப்பு உயிர் நீத்தல். நன்றாக வாழ்வது தான் மரணத்தை வரவேற்கும் ஒரு எளிய வழி. பிறப்பு, வாழ்வு, இறப்பு இந்த மூன்றே அத்தியாயங்களைக் கொண்டது தான் வாழ்க்கை. கருக்கதவைத் தட்டுவதில் தொடங்கி, மரணக் கதவை தட்டி இறக்கும் இவ்வாழ்க்கையில் இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்தோம் என்பதில் தான் முக்கியத்துவம் ஆகிறது மற்ற இரண்டும் என்பது உண்மைதானே? நன்றாக வாழ்வதென்பது மனத்தை பரிபக்குவ நிலையில் வைத்திருப்பது. இன்ப துன்பங்களுக்கு உட்படாமல் மனத்தை ஒருநிலையில் வைத்திருக்க பழக்குவது. அதெப்படி சாத்தியம் என்று நினைத்தால் ஒருபோதும் அற்புதங்கள் நடக்காது. எதுவும் சாத்தியம்.  

Story image

பிரச்னைகளைப் பார்த்து பயந்து கொண்டிருந்தால் ஒடுங்கிப் போய்விடுவோம். அதை எதிர்த்து நின்று போராடினாலும் அது மேலும் மேலும் புதிய வடிவத்தில் உருக்கொண்டு நம்மை உருக்குலைக்க முயற்சி செய்யும்.

Story image

பிரச்னையையும் அதன் தீவிரத்தையும் அலசி ஆராய்ந்து சமன் நிலை குலையாமல் தீர்ப்பவரே இவ்வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுடைய பெயர்கள் சரித்திரத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் சற்று நிமிர்ந்து பார்த்தால் உங்கள் தலைக்கு மேலே ஒளிரும் நட்சத்திரங்கள் யாவும் அவர்களாக நிறைந்திருக்கிறார்கள். நீங்களும் நானும் கூட நட்சத்திரமாகலாம்.

இறுதியாக, இந்த சுலோகத்தை ஒரு முறை படித்துப் பாருங்கள். 

க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த
நைதத் த்வய்யுபபத்யதே |
ஷுத்ரம் ஹ்ருதயதெளர்பல்யம்
த்யக்த்வோத்திஷ்ட பரந்தப ||

அர்ஜுனா! பேடித்தனத்திற்கு இடம் தராதே. இது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே! அற்பமான இந்த மனத்தளர்ச்சியை உதறித் தள்ளிவிட்டு எழுந்திரு! (2:3)

இந்த ஒரு சுலோகத்தை ஒருவன் படித்தால் அவன் கீதை முழுவதையும் படித்த பயனைப் பெறுகிறான். ஏனெனில் இந்த ஒரு சுலோகத்தில் கீதையின் முழுச் செய்தியும் அடங்கியுள்ளது. எழுந்து நின்று போர் செய். ஓரடி கூடப் பின்வாங்கக் கூடாது. அது தான் கருத்து. எது வந்தாலும் சரி, போராடு. உலகம் முழுவதும் நம்மை எதிர்த்து நிற்கட்டும்! அதனால் என்ன? கோழைகளாவதால் ஒரு பயனையும் அடைய முடியாது. ஓரடி பின்வாங்குவதால் நீங்கள் எந்தத் தீமையையும் கடந்துவிட முடியாது. - சுவாமி விவேகானந்தர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.