யார் பெறுவார் இந்த அரியாசனம்-2: மாநிலங்கள் கையில் முடிவு!
ஆளுக்கு ஆள் அணி சேர்ந்தாலும், தேர்தல் களத்தில் இருக்கும் அணிகளில் ஆட்சி அமைக்கும் சாத்தியம் உள்ள அணிகள் மூன்றுதான். காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பாரதிய ஜனதா


ஆளுக்கு ஆள் அணி சேர்ந்தாலும், தேர்தல் களத்தில் இருக்கும் அணிகளில் ஆட்சி அமைக்கும் சாத்தியம் உள்ள அணிகள் மூன்றுதான். காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இடதுசாரிகளும் இன்னபிற மாநிலக் கட்சிகளும் கைகோர்த்துக் கொண்டு அமைத்திருக்கும் மூன்றாவது அணியும்தான் அவை.
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டாலும், அது ஒரு மாயத் தோற்றமாகவும் இருக்கக்கூடும். கடந்த மக்களவைத் தேர்தலைப் பற்றி சிந்தித்துப் பார்த்தால் இது தெரியும். நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும் என்று கட்டியம் கூறியவர்கள்தான் பலர். ஆனால் சிறு சறுக்கல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, பாரதிய ஜனதாவை எதிர்க்கட்சியாக்கிவிட்டது.
அதேபோல, "மூன்றாவது அணியா? அது மூன்றாவதாக வரப்போகும் அணியல்லவா?' என்று காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதாவும் ஏளனம் செய்தாலும் அந்த அணியின் முக்கியத்துவத்தைக் குறைத்து எடை போட்டு விட முடியாது. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பில்லாத நிலையில், இந்த மூன்றாவது அணியோ அல்லது அந்த அணியில் இருக்கும் சில கட்சிகளோ ஆதரவு அளித்தால் மட்டுமே ஒரு ஆட்சி அமையும் என்கிற நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஒரு வகையில் பார்த்தால் 1996-ல் நிலவிய அதே சூழ்நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதில்லை.
அப்படியானால், எந்த அணிக்கும் பெரும்பான்மை இல்லாத தொங்கு நாடாளுமன்றம் ஏற்படப் போகிறதா? குதிரை பேரங்களும், பதவிக்கான பேரங்களும் நடைபெறப் போகின்றனவா? இதென்ன நமக்குப் புதிய விஷயமா? 1984-க்குப் பிறகு தொடர்ந்து தனிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலைமைதானே தொடர்கிறது? 70-களிலும், 80-களிலும் இருந்ததுபோல நாடு தழுவிய அலைகள் எதுவும் இல்லாத தேர்தல்கள்தானே கடந்த இருபது வருடங்களாக நடந்து வருகின்றன.
இந்தத் தேர்தலுக்கென்று சில தனித் தன்மைகள் காணப்படுகின்றன. அதில் முக்கியமான விஷயம், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை மாநிலப் பிரச்னைகளும், மாநில முடிவுகளும் தேசிய அளவிலான இந்தத் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும். அதுமட்டுமல்ல. கடந்த 1999 மற்றும் 2004 தேர்தல்களைப் போல, தேர்தலை எதிர்கொள்ளும் எந்தக் கூட்டணியும் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப் போவதில்லை.
காங்கிரஸ் கட்சியின் மக்களவை பலம் பெரிய அளவில் குறைவதற்கான வாய்ப்பு காணப்படவில்லை. பாரதிய ஜனதாவின் எண்ணிக்கையும் அதிக அளவில் அதிகரிக்கும் என்றும் தோன்றவில்லை. சரி, இடதுசாரிகளின் நிலைமை எப்படி இருக்கும்? அவர்களது எண்ணிக்கை 15-வது மக்களவையில் கணிசமாகக் குறையும் என்பது நன்றாகவே தெரிகிறது. அதேசமயம், இடதுசாரிகள் அமைத்திருக்கும் மூன்றாவது அணியிலுள்ள மாநிலக் கட்சிகளின் பலம் அதிகரிக்கும் என்று துணிந்து ஆரூடம் சொல்லலாம்.
இவ்வளவெல்லாம் சொல்ல முடிகிறதே தவிர, இன்னின்ன கட்சிகளின் ஆதரவுடன் இன்னார்தான் ஆட்சி அமைப்பார் என்று சொல்லிவிட முடியுமா என்றால், முடியாது. காரணம், சுமார் 20 அல்லது 30 இடங்கள் ஒரு அணியிலிருந்து இன்னொரு அணிக்குக் கை மாறினால்கூட மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விடக்கூடும். கடந்த 2004-ல் கூட பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எண்ணிக்கையில் பெரிய அளவு வித்தியாசம் இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
முன்பே குறிப்பிட்டபடி, இந்தத் தேர்தலில் மாநிலங்களும், மாநிலக் கட்சிகளும் பெரிய பங்கு வகிக்கப் போகின்றன. தேசிய அளவிலான தேர்தலாக இது இருந்தாலும், மாநில அளவிலான வாக்காளர்களின் தேர்வுதான் தேசிய தடத்தில் பிரதிபலிக்க இருக்கிறது. தமிழகத்தையேகூட எடுத்துக் கொண்டால், வாக்காளர்கள் இந்தத் தேர்தலை ஆளும் திமுகவுக்கும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இடையேயான போட்டியாகக் கருதுகிறார்களே தவிர, காங்கிரஸýக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையிலான தேர்வாகக் கருதவில்லை.
மாநிலங்களை முன்னிறுத்திய தேர்தல் என்பதால், மாநிலங்களின் நிலைமையைக் கூர்ந்து ஆராய வேண்டி வருகிறது. ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி என்கிற வாதம் இந்தத் தேர்தலில் எடுபடாது. என்ன காரணம் என்கிறீர்களா? கடந்த ஓராண்டுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் பல மாநிலங்களில் இருக்கின்றன. இந்த மாநிலங்களில் மட்டும் 116 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. வேடிக்கை என்னவென்றால், அந்த 116 தொகுதிகளில் 72 தொகுதிகள் பாரதிய ஜனதா வசம் இருப்பவை. இந்தத் தொகுதிகளில் அதிருப்தி அலைக்குப் பதிலாக ஆதரவு அலை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அடுத்தபடியாக, மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் இருக்கின்றன. இந்த மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ வாக்காளர்கள் மத்தியில் காணப்படும் மனநிலை, மக்களவை முடிவுகளை பாதிக்கக்கூடும். கடந்த சில ஆண்டுகளாக, ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை என்பது கணிசமாகக் குறைந்து வருகிறது என்றாலும், இந்த மாநிலங்களில் எப்படி இருக்கும் என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது. 137 தொகுதிகள் இந்த மாநிலங்களில் இருக்கின்றன.
பெரும்பான்மையான தொகுதிகள், சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து இரண்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட மாநிலங்களில்தான் இருக்கின்றன. மாநில அரசின் மீதான அதிருப்தி அல்லது மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியைத் தோற்கடித்து மாநில ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டுவது அல்லது பயமுறுத்தி வைப்பது போன்ற நினைப்பு ஆகியவை இந்த மாநிலங்களில் இருக்க வாய்ப்புண்டு.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுகள் அமைந்த மாநிலங்களில் 55 தொகுதிகளும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் 84 தொகுதிகளும், மூன்றாவது அணியினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் 142 தொகுதிகளும் அரைக் கிணறு தாண்டிய சட்டப்பேரவைகள் உள்ள மாநிலங்களில் அமைகின்றன. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலைமை வேறு மாதிரி. இந்த மக்களவைத் தேர்தலில் மாநிலங்களின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கப் போகிறது? வாக்காளர்களால் எந்த அளவுக்கு, எப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்துவிட முடியும்?
தொடரும்....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...