கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

யார் பெறுவார் அந்த அரியாசனம்-4: அத்தைக்கு மீசை முளைத்தால்...

அணிச் சேர்க்கையும் சரி, முழுமையானதாகவும், அந்த அணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதாகவும் இருக்கிறதா என்றால் இல்லை. ஓர் அணி போட்டியிடும் இடங்கள் என்பது, அந்த அணியில் இருக்கும் கட்சியில் ஏதாவது ஒன்று வெற்றி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:38 am

விக்கிரமசிங்கன்



அணிச் சேர்க்கையும் சரி, முழுமையானதாகவும், அந்த அணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதாகவும் இருக்கிறதா என்றால் இல்லை. ஓர் அணி போட்டியிடும் இடங்கள் என்பது, அந்த அணியில் இருக்கும் கட்சியில் ஏதாவது ஒன்று வெற்றி பெற்ற அல்லது இரண்டாவதாக வந்த இடங்களாக இருப்பதுதான் வழக்கம். அணி சேர்வதன் நோக்கமே போட்டியிடும் இடங்களில் எல்லாம் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான்.

2009 மக்களவைத் தேர்தலில் களத்தில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் அமைத்திருக்கும் மூன்றாவது அணி ஆகிய மூன்றுமே முழுமையான கூட்டணியை அமைத்துக் கொள்ளவில்லை என்பதுதான் வேடிக்கை. எப்படி என்று கேட்கிறீர்களா?

முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எடுத்துக் கொள்வோம். கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையில் அமைந்த இந்த அணி, 434 தொகுதிகளில் போட்டியிட்டது. அதாவது 271 இடங்களில் பாரதிய ஜனதாவும் 163 இடங்களில் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்டன.

இந்த முறை பாரதிய ஜனதா பல முக்கியமான கூட்டணிக் கட்சிகளை இழந்திருக்கிறது. மேற்கு வங்காளத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், ஒரிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழகத்தில் அண்ணா திமுக என்று கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் பல இந்த முறை பாரதிய ஜனதாவுடன் இல்லை. அதற்குப் பதிலாக, அசாமில் அசாம் கண பரிஷத், உத்தரப் பிரதேசத்தில் அஜீத் சிங்கின் ராஷ்டீரிய லோகதளம், ஹரியாணாவில் இந்திய தேசிய லோகதளம் என்று ஒரு சில சிறிய கட்சிகள் அந்தக் கூட்டணியில் இந்த முறை இணைந்திருக்கின்றன.

இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் இடங்கள் 442. அதில் 86 இடங்களில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த அணி போட்டியிடும் இடங்களில் குறைந்தது 60 சதவீத இடங்களில் வெற்றி பெற்றால்தான் இந்த அணியால் ஆட்சி அமைக்க முடியும். அல்லது கடந்த தேர்தலில் முதல் இரண்டு இடங்களில் வராத பல தொகுதிகளில் இந்த அணி வெற்றி பெற்றாக வேண்டும்.

திரிணாமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், அண்ணா திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளான பாமக, மதிமுக போன்ற கட்சிகளும் தேர்தலுக்குப் பிறகு தங்களது அணியில் இணைந்து விடும் என்று பாரதிய ஜனதாக் கட்சி எதிர்பார்க்கிறது. இது ஒரு நம்பிக்கைதானே தவிர நடக்கும் என்று எப்படி சொல்வது? தேர்தலுக்குப் பிறகு இந்தக் கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் என்று என்ன உத்தரவாதம்?

காங்கிரஸýம் அதன் இப்போதைய கூட்டணிக் கட்சிகளும் 2004 தேர்தலில் 425 இடங்களில் முதல் இரண்டு இடங்களில் வந்தன. அதில் 110 இடங்களில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் தனது கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் நிஜமாகவே நினைத்திருந்தால் மாநிலத்துக்கு மாநிலம் கூட்டணி என்று அறிவிக்காமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாகத் தேர்தலை சந்தித்திருக்க வேண்டும்.

திரிணாமூல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, மதச் சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகளையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைத்து, ஆளும் கூட்டணியின் ஐந்து வருட சாதனைப் பட்டியலுடன் தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும். அப்போது சுமார் 500 இடங்களில் அந்தக் கூட்டணியின் வாய்ப்பு முதல் இரண்டு இடங்களாக இருந்திருக்கும்.

அதை விட்டுவிட்டு, பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாமக போன்ற கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் இழந்துவிட்டது. திரிணாமூல் காங்கிரஸýடனான கூட்டு என்பது இந்த நஷ்டத்தை ஈடுகட்டுமா என்பது சந்தேகமே!

இந்தத் தேர்தலில் காங்கிரஸýம் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடும் இடங்கள் 390தான். 390 இடங்களில் போட்டியிட்டு 272 இடங்களில் வெற்றி பெற்றுவிட முடியும் என்பது சவாலாகத்தான் இருக்கும். உத்தரப்பிரதேசத்தில் சமாஜவாதிக் கட்சி, பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜன சக்தி கட்சி, கர்நாடகாவில் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சாதுர்யமாகத் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் இணைத்திருந்தால் அந்தக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அடித்துச் சொல்லி விடலாம். அந்த வாய்ப்பைக் காங்கிரஸ் தெரிந்தே நழுவவிட்டு விட்டது.

மூன்றாவது அணியின் நிலைமை பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. இந்த அணியில் இருக்கும் எந்தக் கட்சி எந்த அணிக்குத் தேர்தலுக்குப் பிறகு மாறும் என்று கடவுளுக்குக்கூடத் தெரியுமா என்பது சந்தேகமே. ஆனால் இந்த மூன்றாவது அணியை சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

2004 தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளும், வேட்பாளர்களும் 50% அதிகமான வாக்குகளைப் பெற்றனர் என்பது தெரியுமா? அவர்களின் மொத்த எண்ணிக்கை பெரும்பான்மையை விட சற்றுதான் குறைவு. காங்கிரஸýம், பாரதிய ஜனதாவும் அல்லாத கட்சிகள் அனைத்தும் கைகோர்க்குமேயானால், அவர்கள்தான் தனிப்பெரும் அணியாக மக்களவையில் இருந்தார்கள், இருப்பார்கள்.

அப்படியானால் காங்கிரஸýம், பாரதிய ஜனதாவும் அல்லாத கட்சிகள் எல்லாம் கைகோர்த்து ஒரு மூன்றாவது அணி அரசு அமைய வாய்ப்பிருக்கிறதா? அப்படி அத்தனை கட்சிகளும் தேர்தலுக்குப் பிறகு கைகோர்த்து அரசு அமைக்கும் என்பதும் சந்தேகம்தான். திமுகவும் அதிமுகவும், சமாஜவாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும், இடதுசாரிகளும் மமதா பானர்ஜியும் கைகோர்த்து ஆட்சி அமைத்து விட்டால் பிரளயமே அல்லவா ஏற்பட்டு விடும். அத்தைக்கு மீசை முளைத்த பிறகுதானே சித்தப்பன் என்று கூப்பிடுவதா வேண்டாமா என்று யோசிக்க வேண்டும்.

ஒருவேளை இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் சேர்ந்து 200 இடங்களில்கூட வெற்றி பெறாத சூழ்நிலை ஏற்படுமானால், மூன்றாவது அணி தனித்து ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பம் ஏற்படலாம். இல்லையென்றால், காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதாவின் தலைமையிலோ அல்லது ஆதரவுடனோ மட்டும்தான் ஆட்சி அமையும்.

இரண்டு பெரிய தேசியக் கட்சிகள் அமைத்திருக்கும் கூட்டணிகளுமே பலவீனப்பட்டதன் காரணம் என்ன என்பதை இனி பார்ப்போம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.