ரயில்வே பட்ஜெட்: தமிழகம் அரவணைக்கப்படுமா?
சென்னை, ஜன. 7: 2010}11 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தின் ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா என்பது இன்னமும் கேள்விக் குறியாக உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் வெளியான


சென்னை, ஜன. 7: 2010}11 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தின் ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா என்பது இன்னமும் கேள்விக் குறியாக உள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் வெளியான ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாக இருந்தது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்துதல், வேளச்சேரி- பரங்கிமலை மேம்பால ரயில்வே திட்டம், ரயில்வே மேம்பாலம்- சுரங்கப் பாலங்கள் கட்டும் பணிகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை.
சென்னை புறநகர் வழித்தடங்களில் நெரிசலுக்கு, நிரந்தரத் தீர்வு காணும் திட்டம் ஏதும் இல்லை.
"சால்ட் கோட்டர்ஸ்' 2-வது டெர்மினல் ரயில் நிலையம்: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் ரயில்களின் சேவையும், நெரிசலும் அதிகரித்துள்ளது.
இதனால், 100 ஏக்கர் இடவசதியுள்ள "சால்ட்கோட்டர்ஸ் சரக்கு ரயில் நிலையத்தை, 2-வது டெர்மினல் ரயில்நிலையமாக ரூ. 200 கோடியில் மேம்படுத்தும் திட்டம் ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதுவும், இப்போது "குளத்தில் போட்ட கல்லாக' உள்ளது.
இரண்டாவது, 3-வது அகலப் பாதை திட்டங்கள்: தமிழகத்தில் ரயில் போக்குவரத்தின் "முதுகெலும்பு' வழித்தடமாக சென்னை எழும்பூர் -நாகர்கோவில் -கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி இடையே நெரிசலைக் குறைக்க 2-வது அகலப் பாதை திட்டங்களை பகுதி பகுதியாக நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவைகளை அதிகரிப்பதன் மூலம் தெற்கு ரயில்வேக்கு 35 சதவீதம் வரை கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் எனத் தெரியவந்துள்ளது.
இதன்படி விழுப்புரத்தில் இருந்து மதுரை வரையிலான 2-வது அகலப் பாதை திட்டத்துக்கு ரூ. 820 கோடி ஒதுக்கப்பட்டது.
இதில் இதுவரை மதுரை - கொடைரோடு - திண்டுக்கல் இடையே மட்டும் 2--வது அகலப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் - மதுரை - கன்னியாகுமரி 2-வது அகலப் பாதை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால், பயணிகளுக்கான சேவை மட்டுமன்றி தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் "திறவு கோலாக' அமையும்.
இந்த வழித்தடத்தில் விழுப்புரம்-திருச்சி தவிர இதர அகலப் பாதை மின்மயமாக்கும் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
ஏட்டுச் சுரைக்காயாக மாறும் திட்டங்கள்: கொருக்குப்பேட்டை- அத்திப்பட்டு இடையேயான 3 மற்றும் 4-வது அகலப் பாதை; கடற்கரை - கொருக்குப்பேட்டை 3-வது பாதை, திருவள்ளூர் - அரக்கோணம் 4-வது பாதை உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், இத்திட்டங்கள் "ஏட்டுச் சுரைக்காயாக' மாறியுள்ளன.
சென்னை - ஸ்ரீபெரும்புதூர் - புதுச்சேரியை இணைக்கும் கடலோர ரயில் பாதை திட்டம், கரூர்-சேலம், திண்டிவனம்-நகரி, ஈரோடு-பழனி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அகலப் பாதை திட்டங்களும் நீங்காத "நித்திரையில்' உள்ளன.
புறக்கணிக்கப்படும் டெல்டா மாவட்டங்கள்: தமிழக முதல்வரின் சொந்த ஊரான திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டி- திருவாரூர் இடையே அகலப் பாதை அமைக்கும் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்படுகின்றன.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், தமிழகத்தின் பெரும்பாலான ரயில்வே வளர்ச்சிப் பணிகள் "ஆமை' வேகத்தில் நடைபெறுகின்றன.
எனவே, வரும் ரயில்வே பட்ஜெட்டிலாவது தமிழகத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...