குவாஹாட்டி,ஜன.8: அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் மாநில வளர்ச்சியை மையப்படுத்தித்தான் தேர்தல் அறிக்கை, பிரசாரம், மக்களிடம் அணுகுவது ஆகியவை இருக்கும் என்றார் பாரதிய ஜனதா கட்சியின் அசாம் பொறுப்பாளரான மக்களவை உறுப்பினர் வருண் காந்தி.
"மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிதான் எங்களுடைய நோக்கம். மக்களை மக்களாகத்தான் அணுகுவோம்; பெரும்பான்மை மதம், சிறுபான்மை மதம் என்று பேதம் பிரித்து அணுகமாட்டோம்.
வேட்பாளர் பட்டியல் தயார்:
அசாம் சட்டப் பேரவைக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. ஜனவரி இறுதியில் கட்சித் தலைமை ஒரு முறை பரிசீலித்து சில மாற்றங்களைச் செய்து ஒப்புதல் தந்தவுடன் வெளியிடப்படும்.
தகுதிகள் என்ன? மாநில வளர்ச்சிக்காக பாடுபடும் லட்சியம் உள்ளவராகவும் அதற்கான தகுதிகள், திறமைகள் பெற்றவராகவும் ஊழலுக்குத் துணை போகாதவராகவும் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்பவராகவும் உள்ளவர்களையே கட்சியின் வேட்பாளர்களாகத் தேர்வு செய்திருக்கிறோம்.
எத்தனை இடங்களில் போட்டி என்பதை கட்சித் தலைமை பின்னர் தெரிவிக்கும். கடந்த தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் பாஜக தன்னுடைய வலுவை பெருக்கிக் கொள்வதுடன் தான் ஒரு முக்கியமான அரசியல் சக்தி என்பதை பதிவு செய்யும்.
எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றெல்லாம் இப்போதே ஆரூடம் கூற முடியாது. எங்களுடைய தேர்தல் அறிக்கையை மக்களிடம் தெரிவிப்போம், அவர்களுக்காக உழைக்கக்கூடிய வேட்பாளர்களை அறிமுகம் செய்வோம். வாக்காளர்கள்தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும். அவர்கள் எங்களுக்கு கணிசமான ஆதரவை இந்த முறை தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நல்ல பள்ளிக்கூடத்தில் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும், மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும், வேலைவாய்ப்பு பெருக வேண்டும், விலைவாசி குறைய வேண்டும், சட்டம் - ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும், மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் மக்களுடைய எதிர்பார்ப்பு. அதை நாங்கள் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் எங்களுக்கு வாக்களிக்கப் போகிறார்கள், எனவே ஹிந்துக்களுக்காக தனி அணுகுமுறை முஸ்லிம்களுக்காக தனி அணுகுமுறை என்று தேவையில்லை என்பதே கட்சியின் கருத்து' என்றார் வருண் காந்தி.