சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சங்மாவின் பலவீனமும், பிரணாபின் பலமும் !

புதுடில்லி, ஜூலை 29: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் வெற்றி என்பது ஏறத்தாழ நிர்ணயிக்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:29 am

விக்கிரமசிங்கன்

புதுடில்லி, ஜூலை 29: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் வெற்றி என்பது ஏறத்தாழ நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. எதிர்க்கட்சி வேட்பாளர் பூர்ணோ சங்மா எதிர்பார்ப்பதுபோல, எதிர்பாராத, அதிசய மாற்றங்கள் ஏற்பட்டால் ஒழிய, பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறுவது உறுதியாகிவிட்டது.

 ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் வெற்றிபெற முடியுமா, காங்கிரசால் தனது வேட்பாளரை நிறுத்தி, அவருக்குக் கூட்டணியின் முழு ஆதரவு இருந்தாலும் வெற்றிபெற முடியுமா என்பது போன்ற ஆரம்பநிலைக் கேள்விகள் இப்போது அர்த்தமற்றவையாகிவிட்டன. திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், சமாஜவாதி கட்சியும் கடைசிவரை கைகோத்துச் செயல்பட்டிருந்தால், பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் வேட்பாளராவதில் சிக்கல் எழுந்திருக்கும்.

 சமாஜவாதி கட்சியிடம் பிரணாப் முகர்ஜி ஏற்கெனவே ஆதரவு திரட்டியிருந்தார் என்கிற திடுக்கிடும் உண்மை, காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவியும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கும் தெரியவந்தபோது, அவர் ஏற்கெனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தார். முலாயம்சிங் யாதவிடம் மட்டுமல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமான ஐக்கிய ஜனதாதளத்துடனும் பிரணாப் முகர்ஜி ஏற்கெனவே தொடர்புகொண்டு ஆதரவு திரட்டி இருந்தார் என்று தெரிகிறது. ஒருவேளை அப்படி அவர் சுதாரித்துக் கொள்ளாமல் இருந்திருந்தால், காங்கிரஸ் தலைமை அவரை வேட்பாளராக அறிவித்திருக்காது என்று விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 ""பிரணாப் முகர்ஜியைத் தங்களது வேட்பாளராக அறிவிக்கும் திட்டம் காங்கிரஸýக்கு இருக்கவில்லை என்பதுதான் நிஜம். அப்படி முன்கூட்டியே தீர்மானித்திருந்தால், அவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு, பிரணாப் முகர்ஜியைப் போட்டி இன்றித் தேர்ந்தெடுத்திருக்க முடியும். அவரை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னால் இடதுசாரிக் கட்சிகளையும், ஏன், பாரதிய ஜனதா கட்சியையே கூட அழைத்துக் கலந்து பேசியிருந்தால் எல்லாருமே ஒருமனதாகப் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளித்திருப்பார்கள். காங்கிரஸýக்கு சில நிர்ப்பந்தங்களால் பிரணாப் முகர்ஜியின் பெயரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால்தான், அறிவிப்புக்குப் பிறகு ஆதரவு கோரினார்கள். அதை பாரதிய ஜனதா ஏற்றுக்கொள்ள முடியவில்லை'' என்று மனம் திறந்தார் பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர் ஒருவர்.

 காங்கிரஸ் தலைமைக்கு அப்படி என்ன நிர்ப்பந்தம் ஏற்பட்டது? குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பெயரை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் முன்மொழிந்து அதை ஊடகங்களும் இணைய தளங்களும் மக்கள் மன்றத்தில் முன்னிலைப்படுத்தி ஆதரவு தேடத் தொடங்கியிருந்தன. மேலும், ஆந்திர இடைத்தேர்தலில் வரலாறு காணாத பின்னடைவை ஆளும் காங்கிரஸ் கட்சி சந்தித்திருந்தது. இதெல்லாம் போதாதென்று, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, மம்தா பானர்ஜியிடம் தங்களது உத்தேச வேட்பாளர்களாக பிரணாப் முகர்ஜியும் குடியரசு துணைத் தலைவர் ஹமீத்அன்சாரியும் இருப்பதாகத் தெரிவித்தது பிரணாபை மிகவும் காயப்படுத்தி இருந்தது. தன்னை ஒருமனதாகக் காங்கிரஸ் தலைமை முன்னிலைப்படுத்தாமல் இருப்பதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

 இப்படிப்பட்ட சூழ்நிலையில் உடனடியாக ஒரு வேட்பாளரைக் காங்கிரஸ் அறிவித்தால் மட்டுமே இடைத்தேர்தல் தோல்வியையும் அப்துல் கலாமுக்குப் பெருகிவரும் ஆதரவையும் பிரணாப் முகர்ஜியின் கோபத்தையும் எதிர்கொள்ள முடியும் என்கிற நிலைமை. பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக அறிவிப்பதாக இருந்தால், தாங்கள் ஆதரிப்பதாக சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், தெரிவித்தபோது சோனியா காந்திக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

 ""பூர்ணோ சங்மாவை வேட்பாளராக அறிவித்த அதிமுகவும், பிஜு ஜனதா தளமும் அடுத்த கட்ட முயற்சியில் இறங்காததும், பிரணாப் முகர்ஜிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது'' என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் கருத்து.

 ""சங்மாவை குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராக முன்மொழிந்த ஜெயலலிதாவும், நவீன் பட்நாயக்கும் தில்லிக்கு வந்து, அவருக்கு ஆதரவு திரட்டியிருக்க வேண்டும். சங்மா தங்களது வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து, இடதுசாரிக் கட்சிகளையும், பாரதிய ஜனதா கட்சியையும், சமாஜவாதிக் கட்சி, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அதாலிதளம், தெலுங்கு தேசம் என்று எல்லோரையும் அழைத்திருந்தால், சங்மாவுக்கு ஆதரவாக அனைவரும் அணி திரண்டிருப்பார்கள். சங்மா இப்போது பாஜகவின் வேட்பாளராகத் தெரிகிறாரே தவிர அதிமுக, பிஜு ஜனதாதள வேட்பாளராகத் தெரியவில்லை. அப்படி இருக்கும்போது அவரை நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும்? அதனால்தான் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்று முடிவு எடுத்தோம்'' என்பது இடதுசாரிகளின் வாதம்.

 திரிணமூல் காங்கிரஸ் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியிலேயே பலர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும் என்று தெரிகிறது. சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகத் திருப்பிய, பிரணாப் முகர்ஜிக்கு இப்போது சூழ்நிலையும் சாதகமாகத் திரும்பி எதிர்பாராத வெற்றியைக் கொடுக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

 பிரணாப் முகர்ஜியைத் தங்களது

 வேட்பாளராக அறிவிக்கும் திட்டம்

 காங்கிரஸுக்கு இருக்கவில்லை என்பதுதான் நிஜம். அப்படி முன்கூட்டியே தீர்மானித்திருந்தால்,

 அவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு,

 பிரணாப் முகர்ஜியைப் போட்டி இன்றி

 தேர்ந்தெடுத்திருக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.