நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும் பதவி விலக வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
நிலக்கரி ஊழல் விவகாரத்தில் பிரதமரைக் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்த சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அப்படியானால், மன்மோகன் சிங்கும் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி சனிக்கிழமை கூறுகையில், ""பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற அத்வானியின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஊழலைப் பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு தகுதி இல்லை.
பாஜக தலைமையிலான அரசின் ஊழல் காரணமாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்துள்ளதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்'' என்றார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் ஆகியோரும் பிரதமர் பதவி விலகல் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








