ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நரேந்திர மோடி பிரிவினையை ஏற்படுத்துபவர் - ப.சிதம்பரம்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரிவினையை ஏற்படுத்துபவர் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

News image
Updated On :1 ஜூலை 2013, 8:00 pm

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரிவினையை ஏற்படுத்துபவர் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பது: பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே இல்லை. அவர்களது நோக்கம் மதச்சார்பின்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. எனவே அடுத்த மக்களவைத் தேர்தலிலும் மக்கள் அக்கட்சியை நிராகரிப்பார்கள்.

 பொது சிவில் சட்டம், அயோத்தி விவகாரம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்சாசன சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவது என்பது போன்ற பிரிவினைவாத பிரச்னைகளை பாஜக தொடர்ந்து எழுப்பி வருகிறது என்று சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

பாஜக நிராகரிக்கப்படும்: மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதா?  என்ற கேள்விக்கு, "இது பொருத்தமில்லாத கேள்வி. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்றால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும். மக்கள் சரியான முடிவை அளிப்பார்கள்.

காங்கிரஸ் எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் போராடப் போவது இல்லை. 2004, 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக நிராகரிக்கப்பட்டது போல், அடுத்த ஆண்டு தேர்தலிலும் நிராகரிக்கப்படும்' என்று சிதம்பரம் பதிலளித்தார்.

மோடி, பாஜக தேர்தல் பிரசாரக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், "மோடி பிரிவினையை ஏற்படுத்துபவர். பாஜகவின் உயர் நிலை தலைவர்களில் பலர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவரால் பாஜகவிலேயே பிரிவினை ஏற்பட்டுள்ளது' என்றார். மோடியை எதிர்த்து எல்.கே. அத்வானி பதவி விலகியதை சிதம்பரம் இவ்வாறு குறிப்பிட்டார்.

யார் இரும்பு மனிதர்? மோடி இரும்பு மனிதர், பலம் வாய்ந்த தலைவர் என்று வர்ணிக்கப்படுவது குறித்த கேள்விக்கு, "இரும்புத் தலைவர் என்று வர்ணிக்கப்படுபவர் (அத்வானி) தலைமையில்தான் 2009-ம் ஆண்டு தேர்தலை பாஜக சந்தித்தது. ஆனால் தேர்தலில் முன்பைவிட குறைவான இடங்களையே அவர்கள் பெற முடிந்தது. வலுவானவர், பலவீனமானவர் என்று ஊடகங்களே ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றன' என்று பதிலளித்தார்.

குஜராத் வளர்ச்சி ஒரு மாயை: குஜராத் மாநிலத்தை மோடி வளர்ச்சி பெறச் செய்துள்ளார் என்பது  உண்மைக்குப் புறம்பாக மிகைப்படுத்தப்பட்ட தவறான தகவல். குஜராத்தில் அவர்கள் காட்டும் வளர்ச்சி, ஒருங்கிணைந்த வளர்ச்சியல்ல. பெரும்பான்மையான குஜராத் மக்களை பின்னுக்குத் தள்ளி ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சி. அது ஒரு மாயை. குஜராத் போன்ற மாநிலத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு வேண்டுமானால் பொருந்துவதாக இருக்கலாம். ஆனால் நாடு முழுவதற்கும் இந்த வளர்ச்சித் திட்டம் பொருந்தாது.

மோடியின் கட்டுக்கதை: உத்தரகண்ட் வெள்ளத்தில் குஜராத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பேரை மோடி மீட்டதாகக் கூறுகிறார்கள். அது கட்டுக்கதை. அவரது மேலாளர்களும், பணியாளர்களும் ஒன்றரை லட்சம் பேரைக் காப்பாற்றியதாகக் கூட கூறுவார்கள். அவர்கள் கொண்டு வந்ததாகக் கூறும் 80 கார்கள், 4 விமானங்களில் அதிகபட்சமாக 2,300 பேரை வேண்டுமானால் அழைத்துச் செல்ல முடியும் என்று சிதம்பரம் கூறினார்.

பிரதமர் வேட்பாளராக... பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை தொடர்ந்து அதே துறையில் சிறந்த நீங்களும் பிரதமராக முடியுமல்லவா என்ற கேள்விக்கு, "எனது குறைபாடுகள் என்ன என்பது எனக்குத் தெரியும். அதற்கு உள்பட்டுதான் நான் பணியாற்ற முடியும். எனது குறைபாடுகளால் பிரச்னை ஏற்படும் நிலையில், எழுத்து, வாசிப்பு, பயணம் என மாறிவிடுவேன்' என்றார் சிதம்பரம்.

உலக வங்கியில் கடன்: உத்தரகண்ட் மறுநிர்மாணப் பணிகளுக்கு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து கடனுதவி கேட்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளார்.  இதில் ரூ.145 கோடி உடனடியாக அளிக்கப்பட்டுள்ளது. மறுநிர்மாணப் பணிகள் தொடர்பாக மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் ஆகியவை அம்மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் சிதம்பரம் தெரிவித்தார்.

 சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை ஏமாற்று வேலை என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி விமர்சித்திருப்பது முதிர்ச்சியற்ற பேச்சு என்று சிதம்பரம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.