அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டதை திமுக நினைவில் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகி சந்தீப் தீட்ஷித் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின், திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ், தவெகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.
இதன்பிறகு, இந்தியா கூட்டணியிலிருந்து விலகுவதாக திமுக அறிவித்தது. தொடர்ந்து இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது.
இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சந்தீப் தீட்ஷித்திடம், ராகுல் காந்திக்கு எதிராக திமுகவின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சந்தீப் தீட்ஷித் பேசியதாவது:
”அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டதையும், மதச்சார்பற்ற சக்திகளுடன் மட்டுமே அவர்கள் எப்போதும் இருந்ததில்லை என்பதையும் திமுக நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஒரே வகையான கூட்டணி முறை மட்டுமே இருந்ததில்லை.
காங்கிரஸ் மீது விமர்சனத்தை முன்வைக்க விரும்பினால், தாராளமாக முன்வைக்கலாம். ஆனால் பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், தமிழ்நாட்டைப் பொருத்தவரை காலப்போக்கில் கூட்டணிகள் மாறி வருகின்றன. காங்கிரஸை பலமுறை திமுக விமர்சித்துள்ளது, ஆனால், எங்களுடன் கூட்டணியிலும் இருந்துள்ளது. அரசியலில் இவையெல்லாம் இயல்பானவை.
ராகுல் காந்தி தாராள மனப்பான்மையையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் பார்வையாளர்களின் கருத்துப்படி, மாநிலக் கட்சிகள் தங்கள் குறுகிய மனப்பான்மையைக் கடந்து செயல்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலி முடக்கப்பட்டது குறித்து பேசிய அவர்,
“நீட் விவகாரம் அரசின் முழுமையான தோல்வியாகும். வாட்ஸ்ஆப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் போலவே, டெலிகிராமும் என்கிரிப்ட் தொழில்நுட்பத்தில் இயங்கும் தளமாகும். அப்படி இருக்கையில், டெலிகிராமுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை ஏன்?
மோசடியில் ஈடுபட நினைப்பவர்கள் தங்களின் அடையாளத்தை மறைக்கவோ அல்லது ரகசியமாக செயல்படவோ பல வழிகள் உள்ளன. டெலிகிராம் மீதான தடை, அதைச் சாதாரண உரையாடல்களுக்காகப் பயன்படுத்தும் மக்களவை மட்டுமே பாதிக்கும்” எனத் தெரிவித்தார்.
Summary
DMK should not forget its alliance with Vajpayee! Congress criticizes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









