வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளில் தனியார் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்

ஆராய்ச்சிகளில் தனியார் துறையினர் அதிகம் ஈடுபட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

News image
Updated On :11 ஜூலை 2013, 8:13 pm

ஆராய்ச்சிகளில் தனியார் துறையினர் அதிகம் ஈடுபட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்ப மையத்தின் 8-வது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று முகர்ஜி பேசியது:

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடு வெறும் 0.9 சதவீதம் மட்டுமே. இது மற்ற நாடுகளான சீனா, பிரிட்டன், இஸ்ரேலுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க இத்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதில் தனியார் துறையினர் அதிக அளவில் முன்வர வேண்டும்.

இப்போது தனியார்துறையினரின் ஒட்டுமொத்த செலவில் நான்கில் ஒரு பகுதிதான் ஆராய்ச்சிப் பணிக்கு செல்கிறது. ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளில் தனியார் துறையினர் ஆராய்ச்சிக்கு செலவிடுவது அதிகமாக உள்ளது. அதைப்போல இந்திய நிறுவனங்களும் ஆராய்ச்சிக்கு அதிகம் செலவிட வேண்டும்.

பல்கலைக் கழகங்களும், தொழில்நுட்பக் கல்லூரிகளும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான களமாகும். ஆனால் இங்கிருந்து புதிய கண்டுபிடிப்புகள் அதிகம் வெளிவராததற்குக் காரணம் போதிய நிதி வசதி இல்லாததுதான். மேலும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகாத நிலைக்கு முக்கியக் காரணமாகும். மேலும் திறமையானவர்களை நாம் தக்க வைத்துக் கொள்வதில்லை. இதனாலேயே பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். இதுபோன்ற திறமையானவர்களை நிறுவனங்களும் தக்க வைத்துக்கொள்வதில்லை. இந்த நிலை முற்றிலுமாக மாற வேண்டும். ஆராய்ச்சிகளில் இளம் தலைமுறையினர் அதிகம் ஈடுபட வேண்டும்.

புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய கொள்கை ஒன்று உருவாக்கப்படுகிறது. 2010-20-ம் ஆண்டுகளை புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அறிவியல், தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்க (எஸ்டிஐ) கொள்கை ஒன்று இந்த ஆண்டு வகுக்கப்பட உள்ளது. இதனால் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் புதிய கண்டுபிடிப்புகள் அமையும் வகையில் புதிய கொள்கை இருக்கும். நமது சூழலுக்கு ஏற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை உள்ளடக்கியதாக இது அமையும். இதன் மூலம் ஆராய்ச்சிகள் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ள வழியேற்படும்.

இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், குறுகிய கால அடிப்படையில் இந்தியாவுக்கு வந்து ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரணாப் அழைப்பு விடுத்தார்.

மிகவும் ஏழ்மையான நாடுகள் கூட அறிவியில் தொழில்நுட்பத்தின் உதவியால் முன்னேறியுள்ளன. இதைப் பார்க்கும்போது இந்தியாவும் ஏன் முன்னேற முடியாது என்ற ஆதங்கம் பிறக்கிறது என்றார் பிரணாப் முகர்ஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.