ஏர்செல் பங்குகள் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை முடிப்பதில் மெத்தனம் காட்டக்கூடாது என்று மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) கண்டிப்புடன் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ சார்பில் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பான விசாரணை நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சிபிஐ சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், "ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக இந்தியாவில் சிபிஐ மேற்கொண்டு வந்த அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் முடிந்து விட்டன.
மலேசிய நாட்டில் சிபிஐ விசாரணை நடத்த மேற்கொண்ட முயற்சிகள் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை.
மேக்சிஸ் நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவதிலும், முக்கிய ஆவணங்களைப் பெறுவதிலும் முன்னேற்றம் இல்லை.
இந்தியாவில் சில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியை சிபிஐ கேட்டுள்ளது' என்று கூறினார்.
அதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்ற கருத்தைத்தான் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த அறிக்கையிலும், முந்தைய காலங்களிலும் சிபிஐ குறிப்பிட்டு வருகிறது. இவ்வாறு கூறி தனது பொறுப்பில் இருந்து சிபிஐ ஒதுங்கிக் கொள்ளவோ, மெத்தனமாகச் செயல்படவோ கூடாது.
வெளிநாட்டில் உள்ள அரசுத் துறைகள், நிறுவனங்கள் ஆகியவை ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் அதைப் பெறுவதற்கு இந்திய தூதரகம் மூலம் சிபிஐ எடுத்த நடவடிக்கை என்னவாயிற்று?
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதா?
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக இந்தியாவில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
அரசுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டிருந்தால், அதை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சிபிஐ பெற வேண்டும்.
அதைத் தொடர்ந்து, மூன்றாவது வாரத்தில் வழக்கின் விசாரணை நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும்' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
சுப்பிரமணியன் சுவாமி வாதம்: அதையடுத்து, ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி முன்வைத்த வாதம்:
இந்தியாவின் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் 2005-ஆம் ஆண்டில் வாங்கியது. பின்னரும் ஏர்செல் நிறுவனத்தின் இதரப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனமே வாங்கியுள்ளது.
இந்த விவரத்தை மேக்சிஸ் நிறுவனர் அனந்தகிருஷ்ணனே மலேசிய நாட்டு பங்குச் சந்தை வாரியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சட்ட விதிகளின்படி, இந்திய நிறுவனத்தில் 74 சதவீதப் பங்குகளுக்கு மேல் வெளிநாட்டு நிறுவனம் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.
ஆனால், மேக்சிஸ் நிறுவனம் சட்டவிரோதமாக வாங்கிய கூடுதல் பங்குகளுக்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எஃப்ஐபிபி) அனுமதி வழங்கியது.
அந்த வாரியத்துக்கு அப்போதைய நிதி அமைச்சரான சிதம்பரம்தான் தலைவராக இருந்துள்ளார். இது தொடர்பாக நான் தாக்கல் செய்த மனு மீது சிபிஐ இதுவரை நடத்திய விசாரணை நிலை என்ன?' என்று சுப்பிரமணியன் சுவாமி கோரினார்.
அப்போது நீதிபதிகள், "ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் விசாரணையின் போது, சிபிஐயின் நிலை என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம். அதன் பிறகு உங்கள் மனு தொடர்பாக விசாரிக்கப்படும்' என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
பின்னணி: 2004-இல் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, பல்வேறு வட்டங்களில் தொலைத்தொடர்பு சேவை வழங்க உரிமங்கள் கேட்டு ஏர்செல் நிறுவனம் விண்ணப்பம் செய்தது.
ஆனால், போதிய விவரங்களை அளிக்கவில்லை என்று கூறி அந்த விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீதப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் 2005-இல் வாங்கியதும் ஏர்செல் நிறுவனம் கோரிய உரிமங்கள் வழங்கப்பட்டன.
அதையடுத்து, ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் சிவசங்கரன் 2010-ல் ஆண்டில் சிபிஐயிடம் புகார் அளித்தார்.
"தயாநிதி மாறன் கொடுத்த நெருக்கடியால்தான் ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றேன்' என்று புகாரில் அவர் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர்.
அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2ஜி அலைக்கற்றை வழக்கை விசாரிக்கும் சிபிஐ, ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


