நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சவாலை சமாளிக்குமா ஆம் ஆத்மி?

கட்சி ஆரம்பித்த 14 மாதங்களிலேயே தேர்தலில் மகத்தான வெற்றியுடன் ஆட்சி அமைக்கக் காத்திருக்கும் "ஆம் ஆத்மி'யின் வளர்ச்சி ஒருபுறம் பிரமிப்பை ஏற்படுத்தினாலும்,மறுபுறும் அக்கட்சி மக்களிடம் முன்வைத்துள்ள 18 வாக்குறுதிகள் அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் சவால்களாக அமைந்துள்ளன.

News image
Updated On :24 டிசம்பர் 2013, 6:48 pm

வே.சுந்தரேஸ்வரன்

கட்சி ஆரம்பித்த 14 மாதங்களிலேயே தேர்தலில் மகத்தான வெற்றியுடன் ஆட்சி அமைக்கக் காத்திருக்கும் "ஆம் ஆத்மி'யின் வளர்ச்சி ஒருபுறம் பிரமிப்பை ஏற்படுத்தினாலும்,மறுபுறும் அக்கட்சி மக்களிடம் முன்வைத்துள்ள 18 வாக்குறுதிகள் அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் சவால்களாக அமைந்துள்ளன.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் காங்கிரஸýக்கு அதிர்ச்சித் தோல்வி தர முக்கிய காரணியாக ஆம் ஆத்மி கட்சி இருந்தது என்றால் அது மிகையல்ல.

ஏதோ சிறு கட்சியாக, அரசியல் சூறாவளிக் காற்றில் அடித்துச் செல்லப்படும் கட்சியாக பிரதானக் கட்சிகளான காங்கிரஸýம், பாஜகவும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் பூதாகரமாகத் தோன்றி அவற்றுக்கு கிலியை ஏற்படுத்தும் கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 28 இடங்களைக் கைப்பற்றி பாஜகவுக்கு அடுத்த நிலையில் இருந்தாலும், குறைந்த காலத்தில் மக்கள் செல்வாக்குப் பெற்ற கட்சியாக உயர்ந்திருக்கிறது ஆம் ஆத்மி.

தேர்தலுக்குப் பிறகு, "ஆட்சி அமைக்க காங்கிரஸிடமோ, பாஜகவிடமோ ஆதரவைப் பெற மாட்டோம், நாங்களும் அக் கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம்' என்று அறிவித்த ஆம் ஆத்மி, தற்போது "கை'யுடன் கை கோக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளது.

சுமார் 7 லட்சம் மக்களிடம் பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில், ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜரிவால் கூறுகிறார். ஆம் ஆத்மி முன்வைத்த 18 நிபந்தனைகளில் பதினாறுக்கு ஆட்சேபம் இல்லை என்று காங்கிரஸ் அளித்த பதிலால் தற்போது இரண்டும் கூட்டணியில் சங்கமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

"ஆம் ஆத்மி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. எனினும், நாங்கள் மக்களுக்காக அக் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவுக் கரம் நீட்டுகிறோம்' என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முன்வந்துள்ள காங்கிரஸ் எப்போது "கை'விடும் என்ற அச்சம் ஒருபுறம்; எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ள பாஜக எழுப்பும் பிரச்னைகள் மறுபுறம் என இருந்தாலும், ஆம் ஆத்மிக்கு இருக்கப்போகும் மிகப் பெரிய சவால்கள் அதன் வாக்குறுதிகளாகத்தான் இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஆட்சி அமைத்த பிறகு, "எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், அதிகாரிகளின் வாகனங்களில் சிவப்பு விளக்கு பொருத்த அனுமதி கிடையாது. அமைச்சர்கள், அதிகாரிகள், சாமானிய மக்களைப் போல வாழ வேண்டும். அதனால், அரசு பங்களாக்கள் ஒதுக்கப்படமாட்டாது; சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்படாது' என்பன போன்ற வாக்குறுதிகளை அமல்படுத்துவது ஆம் ஆத்மிக்கு பெரும் சிரமமாக இருக்கப் போவதில்லை. சொல்லப்போனால் அதை அமல்படுத்துவதன் மூலம் அக் கட்சிக்கு மக்களிடம் பெரிய அளவில் வரவேற்புதான் கிடைக்கும்.

ஆனால், "அனைத்து அரசு ஊழியர்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரச் செய்யும் ஜன லோக்பால் மசோதா ஆட்சிக்கு வந்த 15 தினங்களில் நிறைவேற்றப்படும்; பொதுமக்கள் பங்களிப்புடன் 3 ஆயிரம் மொஹல்லா சபாக்களை அமைத்து அதன்மூலம் திட்டங்கள் நிறைவேற்ற வளர்ச்சி நிதி அளிக்கப்படும்; தில்லி காவல் துறை, தில்லி வளர்ச்சி மேம்பாட்டு ஆணையம், மாநகராட்சிகள் ஆகியவை தில்லி பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்' ஆகிய வாக்குறுதிகள் அக் கட்சிக்கு சவாலாக அமையும்.

ஏனெனில், "டிசம்பர் 16' சம்பவத்திற்குப் பிறகு தில்லியில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தபோதும், தில்லியில் காங்கிரஸ் அரசின் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் தொடர்ந்து வற்புறுத்தியபோதும் காவல்துறையை பிரதேச அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் கோரிக்கைக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு செவிசாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாஜக வசம் உள்ள மாநகராட்சிகள் நிர்வாகத்தை தில்லி அரசின் கீழ் கொண்டு வர அக் கட்சி எந்த வகையில் ஒத்துழைப்பு அளிக்கும் என்பதும் கேள்விக்குறியே.

அதேபோன்று, வீடுதோறும் 700 லிட்டர் குடிநீரை இலவசமாக வழங்குவது, மின் கட்டணத்தை பாதியாகக் குறைப்பதற்கான வாக்குறுதிகள் மக்களாலும், ஆம் ஆத்மி ஆதரவாளர்களாலும் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளானவை. ஆனால், இவற்றுக்கான திட்டங்கள் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள

அடுத்த சில மாதங்களிலேயே சாத்தியமாகுமா என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறி.

இவை மீதான செயல்பாடுகள், வரும் மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் மத்தியில் அக் கட்சிக்கு அளிக்கும் தேர்வு மதிப்பெண்களாகவே அமையும்.

இச் சவால்களை எல்லாம் எதிர்கொண்டு சமாளிக்கும்பட்சத்தில் தில்லி மட்டுமன்றி, தேசம் முழுமைக்கும் ஒரு முன்மாதிரி கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. அது, அக்கட்சியின் வெற்றி மகுடத்தில் மேலும் பல முத்துகளைப் பதிக்க உதவிடும். ஆனால், இச் சவால்களை சமாளிக்குமா? என்பதுதான் ஆம் ஆத்மி முன் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.