நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

"விருது கிடைத்தது எனக்குத் தாமதம், நாவலுக்கு சரியான நேரம்'

தோலினால் உருவாக்கப்பட்ட பொருள்கள் நம்மில் பலருக்கும் பிடித்தமானவை. மென்மையானது என்பதே அதை விரும்புவதற்குக் காரணம்.

News image
Updated On :18 பிப்ரவரி 2013, 9:06 pm

வே.சுந்தரேஸ்வரன்

தோலினால் உருவாக்கப்பட்ட பொருள்கள் நம்மில் பலருக்கும் பிடித்தமானவை. மென்மையானது என்பதே அதை விரும்புவதற்குக் காரணம்.

ஆனால் தோல், தயாரிப்பு நிலையை எட்டுவதற்கு முன்பு அது பதப்படுத்தப்படும் தொழில் எத்தகையது, அதில் ஈடுபடுவோரின் வேதனைகள் எப்படிப்பட்டவை என்பது பலருக்கும் தெரிவதில்லை. 

தோலை பதனிடுவதற்காக, சுண்ணாம்பு நீரில் இறங்கி வேலை செய்வது உள்பட பல பிரச்னைகளுக்கு தொழிலாளிகள் உள்ளாக நேரிடுகிறது.

அவற்றை, "தோல்' எனும் 695 பக்க நாவல் மூலம் உலகம் அறியச் செய்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் டி. செல்வராஜ் (74).

இந்த நாவலுக்கு 2012-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது கிடைக்கப் பெற்றுள்ளது. விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தில்லி வந்துள்ளார் பொதுவுடமை இயக்க எழுத்தாளரான டி. செல்வராஜ்.

ஒருபுறம் சட்டப் பணி, மறுபுறம் சமூக நலனுக்கான எழுத்துப் பணி என இரண்டையும் தனது இரு கண்களாகக் கொண்டு களப்பணி ஆற்றிவருபவர் செல்வராஜ். "தினமணி' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:

தினமணி: "தோல்' நாவல் பற்றிக் கூறுங்களேன்?

செல்வராஜ்: இந்த நாவலை ஒரு தலித் இலக்கியம் என்றோ, வர்க்க இலக்கியம் என்றோ கூறினாலும், சோஷலிச யதார்த்தவாதம் என்ற விஞ்ஞானத்தின் இலக்கிய கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி இருக்கிறேன்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக என்னுள் ஊறிக் கிடந்த கருவுக்கு இந்தப் படைப்பின் வாயிலாக உருவமும், உயிரும் கொடுத்துள்ளேன்.

காலம் காலமாக சமூக விளிம்பில் தள்ளப்பட்டிருக்கும் கடையர்களின் கதைதான் இந்த நாவல்.

பரம்பரை பரம்பரையாக சமூகத்தில் வஞ்சிக்கப்பட்ட உழைப்பாளிகளாக, தீண்டப்படாதவர்களாக அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட அவல நிலையை உலத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளேன்.

"தோல்' நாவல் 2010-ம் ஆண்டில் வெளிவந்தது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பான "தேநீர்' நாவல் உள்பட 10 நாவல்கள் எழுதியுள்ளேன். சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளேன்.

தினமணி: உங்கள் படைப்புகளில் உங்களுக்குப் பிடித்த நாவல் என நீங்கள் கருதுவது....?

செல்வராஜ்: ஒரு தாயைப் பார்த்து "உங்கள் குழந்தைகளில் சிறந்த குழந்தை எது?' என்று யாராவது கேட்டால், "இந்தக் குழந்தைதான் எனக்குப் பிடித்தது' என்று ஒரு தாயால் எப்படிக் கூற முடியாதோ, அதுபோலத்தான் இதுவும்.

தாய்க்கு எப்படி தன்னுடைய அனைத்துக் குழந்தைகளும் பிடிக்குமோ அதுபோல் என்னுடைய நாவல்கள் அனைத்தும் எனக்குப் பிடித்தவையே.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னை, அவலங்களை ஆராய்ந்து "தேநீர்' நாவல்  எழுதப்பட்டது.  திண்டுக்கல் பகுதியில் தொழிலாளர்களுக்காக வழக்குரைஞராக பணியாற்றியபோது அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் அவர்கள் பட்ட கஷ்டத்தை உணர முடிந்தது.

தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டவர்களின் நிலையை நேரில் கண்டு அவர்கள் படும் துயரை, அவர்கள் நிலையில் இருந்து அனுபவித்து உணர்ந்து "தோல்' நாவல் எழுதினேன். இதற்கு 10 ஆண்டுகாலம் தேவைப்பட்டது.

தினமணி: சாகித்ய அகாதெமி விருது தாமதமாகக் கிடைத்ததாக நினைக்கிறீர்களா?

செல்வராஜ்: இந்த விருது எனக்குக் கிடைத்தாக நினைக்கவில்லை.

1930-ம் ஆண்டில் இருந்து 1958-ம் ஆண்டு வரை தமிழகத்தில் நடைபெற்றுவரும் இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி.  "தோல்' நாவலுக்கு உரிய காலத்தில் கிடைத்தது. செல்வராஜ் என்கிற எழுத்தாளருக்கு மிக தாமதாகவே கிடைத்துள்ளது.  45 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன். தமிழ் மக்களிடம் எனது எழுத்துக்கு அங்கீகாரம் உண்டு. அதனால், இந்த விருதை நான் ஆச்சரியமான ஒன்றாகவே பார்க்கிறேன்.

தினமணி: நீங்கள் எழுத்துப் பணியைத் தொடங்கியது எப்போது?

செல்வராஜ்: எனது பூர்விகம் நெல்லை மாவட்டம், மாவடி கிராமம். தேயிலைத் தோட்டத்தில் எனது தாத்தா "கங்காணி' ஆக இருந்தார்.

பள்ளிப் படிப்பை மூணாறில் முடித்தேன். நெல்லை ஹிந்து கல்லூரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்தபோது எழுதத் தொடங்கினேன்.

தி.க.சி., தொ.மு.சி. ரகுநாதன், பேராசிரியர் வானமாமலை, அண்ணாச்சி சண்முகம் பிள்ளை ஆகியோரது நட்பு கிடைத்தது.  அதனால், இலக்கியங்களுடன் நெருங்கிய உறவும் கிடைத்தது. எனது இலக்கியப் பார்வை அழுத்தமாக இருக்க அவர்கள்தான் காரணம். 

தினமணி: உங்கள் எழுத்துப் பணி தொடர்கிறதா?

செல்வராஜ்: எனது வழக்குரைஞர் பணி எப்படி தொடர்ந்து கொண்டு இருக்கிறதோ, அதே போன்று எழுத்துப் பணியும் எனது உயிர் உள்ளவரை தொடரும்.

தினமணி: இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

செல்வராஜ்: அவர்களுக்கு புத்தி சொல்லும் நிலையில் நான் இல்லை. இளைஞர்கள் தாங்களாகவே சிந்தித்து, அனுபவம் பெற்று, அதன் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். பல கலாசாரங்கள் உடைய நம் தேசத்தை ஒரே கலாசார தேசமாக மாற்ற அமெரிக்கா நினைக்கிறது. அதை எதிர்த்து நாம் பாடுபட வேண்டும்.

 இந்திய கலாசாரத்தை காப்பாற்றியவர்கள் பெண்கள்தான். மதுரையிலே மீனாட்சியும், காஞ்சியிலே காமாட்சியும் இன்றைக்கும் தாய் தெய்வங்களாக உள்ளனர். இது தொடரும் வரை, அமெரிக்காவின் ஒரே கலாசாரத் தாக்கம் இங்கே எடுபடாது.

படம்: கே.டி. ராமகிருஷ்ணன்

மனைவி பாரதி புத்ரியுடன் நாவலாசிரியர் டி. செல்வராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.