கர்நாடகத்தில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுவதால், எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.
Updated on
2 min read

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுவதால், எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.

பாஜகவில் நடைபெற்று வந்த கோஷ்டி பூசலைக் கருத்தில் கொண்டு, மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல், மே 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

காங்கிரஸ், பாஜக, மஜத, கஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பார்வர்ட் பிளாக், அதிமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, கர்நாடகத் தமிழர் கட்சி உள்ளிட்ட ஏராளமான கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 224 தொகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

எனினும், காங்கிரஸ், பாஜக, மஜத, கஜக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுவதால், நான்குமுனைப் போட்டி உருவாகியுள்ளது.

யாருக்கு செல்வாக்கு: கர்நாடகம் வட கர்நாடகம், ஹைதராபாத்-கர்நாடகம், மும்பை- கர்நாடகம், தென் கர்நாடகம், கடலோரக் கர்நாடகம், மலையோரக் கர்நாடகம் என்று பிரிக்கப்படுகிறது. கடலோரக் கர்நாடகம், வட கர்நாடகத்தில் பாஜகவின் செல்வாக்கு ஓங்கி காணப்படுகிறது.

ஹைதராபாத்-கர்நாடகம், மும்பை- கர்நாடகம் பகுதியில் காங்கிரஸ் கை ஓங்கியுள்ளது. தென் கர்நாடகத்தில் மஜத பலம் வாய்ந்தக் கட்சியாக உள்ளது. மலையோரக் கர்நாடகம் பகுதியில் கஜக செல்வாக்கு பெற்ற கட்சியாக விளங்குகிறது.

தலைவர்களின் பிரசாரம்: காங்கிரஸ், பாஜக சார்பில், தேசியத் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மஜத, கஜக சார்பாக அந்தக் கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் விறுவிறுப்பாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங்கின் பிரசாரம் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்ப்பதைப் போல, எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், நரேந்திர மோடியின் பிரசாரம் பாஜகவுக்கு பலம் சேர்த்து வருகிறது.

மோசமான ஆட்சி நிர்வாகத்தால் மக்கள் செல்வாக்கை இழந்துள்ள நிலையில், தேசியத் தலைவர்களின் பிரசாரம் கைகொடுக்கும் என்று பாஜக கருதுகிறது.

நரேந்திர மோடி, அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழல்களை முன்வைத்து பிரசாரம் செய்து வரும் நிலையில், மாநில பாஜக அரசின் ஊழல்களை முன்வைத்து காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதனிடையே, காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசியக் கட்சிகளை தோற்கடிக்கும் நோக்கில் மஜத, கஜக தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெல்வது யார்: மக்களின் கருத்துகளை அலசி ஆராய்ந்து பார்த்தால், 2004-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்டது போல, யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.

2004 தேர்தலில், பாஜகவுக்கு 79, காங்கிரஸýக்கு 64, மஜதவுக்கு 58 இடங்கள் கிடைத்தன. 2008 தேர்தலில் பாஜகவுக்கு 110, காங்கிரஸýக்கு 80, மஜதவுக்கு 28 இடங்கள் கிடைத்தன.

எனினும், கர்நாடகத்தில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று பரவலான கருத்து நிலவுவதை அரசியல் நோக்கர்கள் உறுதி செய்கின்றனர்.

எடியூரப்பாவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும், பாஜகவின் வெற்றி வாய்ப்பை சீர்குலைப்பார் எனத் தெரிகிறது.

இளைஞர்களிடையே குமாரசாமிக்கு காணப்படும் செல்வாக்கு, முதல்வராக இருந்த போது அவர் செயல்படுத்திய திட்டங்கள் மஜதவுக்கு கைகொடுக்கும். கடந்த முறை 28 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற மஜதவுக்கு இந்த முறை கணிசமான இடங்கள் கிடைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com