ஹரியாணா மாநிலத்தில் கிராமம் ஒன்றில் ஆசிரமம் தொடங்குவதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் இருவர் உயிரிழந்தனர். போலீஸார் உள்பட பலர் காயமடைந்தனர்.
இச்சம்பவம், ரோதக்குக்கு அருகே உள்ள கரோந்தா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அப்பகுதியில், சத்லோக் ஆசிரமம் தொடங்குவதற்கு ஆர்ய பிரதிநிதிகள் சபையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். "ஆசிரமம் அமையவுள்ள இடம் சட்டத்துக்குப் புறம்பானது. ஆசிரமம் அமைந்தால் இப்பகுதியில் உள்ள அமைதி சீர்குலைந்து விடும்' என்று ஆர்ய பிரதிநிதிகள் அமைப்பினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆசிரமத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.
இதனால், ஆசிரமத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆசிரமத்துக்கு எதிரான மக்கள், ஆர்ய சபையினர் உள்ளிட்டோர் கரோந்தா கிராமத்தில் ஒன்று கூடினர். ஆசிரமத்தை நோக்கி அவர்கள் பேரணி சென்றனர். போலீஸ் பாதுகாப்பினால் அவர்களால் ஆசிரமத்துக்குள் நுழைய முடியவில்லை. அப்போது அங்கிருந்த ஆசிரம ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தினால் 30 போலீஸார் உள்பட பலர் காயமடைந்தனர். கலவரத்தில் இருவர் உயிரிழந்து விட்டதாக போலீஸ் உயர் அதிகாரி அனில் ராவ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







