டிசம்பருக்குள் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்
தில்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பருக்குள் முடிவடையும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தெரிவித்தார்.


தில்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பருக்குள் முடிவடையும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தெரிவித்தார்.
ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆûணையர் வி.எஸ். சம்பத் அண்மையில் ஆலோசனை நடத்தினார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கையிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
இந் நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து "தினமணி' செய்தியாளரிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அளித்த சிறப்புப் பேட்டி:
தில்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம்கள் சில மாதங்களாக நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அந்தந்த மாநிலத் தேர்தல் அதிகாரிகள் மூலம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பதற்றம் நிறைந்த தொகுதிகளில் வாக்குரிமை செலுத்தாமல் வாக்காளர்களைத் தடுக்கும் முயற்சிகள் நடைபெறலாம் என சில பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்போர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 107-இன் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கைக்குப் பிறகு இது நடைமுறைப்படுத்தப்படும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் உதவிச் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவுவதற்காக செலவுக் கணக்கிடும் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தலின் போது வேட்பாளர்கள் செய்யும் செலவுகள் குறித்து விடியோ பதிவு செய்வது, கண்காணிப்பு மேற்கொள்வது ஆகியவற்றை இக் குழு மேற்கொள்ளும்.
பெய்டு நியூஸ்: பத்திரிகைளுக்குப் பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்யும் (பெய்டு நியூஸ்) நடைமுறையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊடக கண்காணிப்புக் குழுக்கள் (ஙங்க்ண்ஹ இங்ழ்ற்ண்ச்ஹ்ண்ய்ஞ் பங்ஹம்ள்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெய்டு நியூஸ் தொடர்பான புகார்களை இக் குழு விசாரித்து, விதிமீறும் நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். இக் குழு தேர்தல் நேரத்தில் 24 மணி நேரமும் இயங்கும். பயிற்சி பெற்று வரும் இக் குழுவினர், தேர்தல் தேதி அறிவிக்கைக்குப் பிறகு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மாவட்ட அளவிலான குழுக்கள் தவிர மாநில அளவில் மேல்முறையீடு செய்வதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்புப் பணியில்...: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தலை மேற்பார்வையிடுவதற்காக பொதுப் பார்வையாளர்களில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும், செலவினப் பார்வையாளர்களாக வருமான வரித் துறை ஆணையர்கள் போன்றோரும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
வாக்குச்சாவடிகளில்...: வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், வாக்குச்சாவடிகளில் மின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல சாய்வு தளம் ஆகியவற்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார்: தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்களிக்கத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை தேவையான அளவு கையிருப்பில் உள்ளன. முதல்கட்டமாக, அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் முன்னிலையில் இந்த இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணிகள் முடிந்துள்ளன.
வாக்காளர்களிடம் விழிப்புணர்வு: தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு ஊடகங்கள், தெருக்கூத்துகள், வானொலி ஆகியவை மூலம் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். ஐந்து மாநிலத் தேர்தல்களும் வரும் டிசம்பருக்குள் முடிந்துவிடும்.
மக்களவைத் தேர்தலைப் பொருத்தமட்டில் எப்போது நடக்குமோ, அப்போது நடக்கும்.
தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகள் குறித்து வழிகாட்டு நெறிகளை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது என்றார் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத்.
விவிபிடி முறையை பயன்படுத்த உத்தேசம்
வாக்குப்பதிவின் போது வாக்காளர் செலுத்தும் வாக்கு, உரிய வேட்பாளருக்கும், அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துக்கும் செல்கிறதா என்பதை உறுதிப்படுத்த வாக்காளர் சரிபார்ப்புச் சீட்டு-விவிபிடி (யர்ற்ங்ழ் யங்ழ்ண்ச்ண்ஹக்ஷப்ங் டஹல்ங்ழ் பழ்ஹண்ப்) இணைக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நாகாலாந்து மாநிலம், நாக்சென் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நடைமுறை படிப்படியாக மற்ற தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்த உத்தேசித்து வருகிறோம் என்றார் சம்பத்.
பணப் பட்டுவாடாவைத் தடுக்க தீவிர கண்காணிப்பு
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு மதுபானம் வழங்குவது, பணம் கொடுப்பது ஆகியவற்றைத் தடுக்க பறக்கும் படைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைப்படும் வாக்குச்சாவடிகளில் "வெப் கேமரா' பொருத்தப்படும். அதன் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் அலுவலகத்தில் இருந்தவாறு வாக்குப்பதிவு நடவடிக்கையைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். தேவைப்படும் மாநிலங்களில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் கூடுதல் வீரர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக ஏற்கெனவே மத்திய உள்துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என்றார் சம்பத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...