பிரதமர் திடீரெனப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும் என்று பிரதமர் அலுவலகத்தில் விசாரித்ததிலிருந்து தெரிய வருகிறது. முதலாவது காரணம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த பல்வேறு ஆக்கப்பூர்வமான முடிவுகளும், வளர்ச்சித் திட்டங்களும் முறையாக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை என்கிற கருத்து காங்கிரஸார் மத்தியில் பரவலாகவே காணப்படுகிறது. இதற்குக் காரணம், பிரதமர் அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்திக்காததும் அரசின் செயல்பாடுகளை விளக்காததும்தான் என்று காங்கிரஸ் தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் தலைநகர் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரவலாகவே காணப்படுகிறது. இந்த திடீர் பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் அதை நிவர்த்தி செய்யலாம் என்பதுதான் அந்த முதல் காரணம்.