வாராணசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை தேசியச் சின்னமாக்க குடும்பத்தினர் ஒப்புதல்
உத்தரப்பிரதேச மாநிலம், வாராணசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டின் ஒரு பகுதியை "தேசியப் பாரம்பரிய நினைவுச் சின்னம்' ஆக மாற்ற அவரது குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.


உத்தரப்பிரதேச மாநிலம், வாராணசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டின் ஒரு பகுதியை "தேசியப் பாரம்பரிய நினைவுச் சின்னம்' ஆக மாற்ற அவரது குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இத்தகவலை வாராணசியில் வசித்து வரும் பாரதியாரின் சகோதரி லக்ஷ்மியம்மாளின் மகன் கே.வி. கிருஷ்ணனையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசிய பிறகு உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.
தேச விடுதலை, சமூக சீர்திருத்தம், பெண்ணுரிமை, தமிழ் மொழி வளர்ச்சி ஆகியவற்றுக்காக குரல் கொடுத்த மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டை தேசியப் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தருண் விஜய் வலியுறுத்தி வருகிறார்.
தமிழ் மொழி மீது கொண்ட ஈர்ப்பால் அவர் தொடர்ந்து பல்வேறு தமிழ் சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், வாராணசியில் ஹனுமன் காட் பகுதியில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீட்டுக்கு உள்ளூர் பாஜகவினர், வாராணசி தமிழ் சங்க நிர்வாகிகள் ஆகியோரின் உதவியுடன் தருண் விஜய் புதன்கிழமை சென்றார். அங்கு வசித்து வரும் பாரதியாரின் சகோதரி லக்ஷ்மியம்மாளின் மகன் கே.வி. கிருஷ்ணனையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்தார்.
"நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே தமிழுக்காகக் குரல் கொடுத்து தமிழர்களின் நெஞ்சங்களில் இன்றும் வாழும் பாரதியின் புகழை எதிர்கால சமூகத்துக்கு விளக்கும் வகையில் அவர் வாராணசியில் வாழ்ந்த வீட்டை தேசியப் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேணடும்' என்ற தனது விருப்பத்தை கிருஷ்ணனின் குடும்பத்தாரிடம் தருண் விஜய் வெளிப்படுத்தினார். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அவர்கள் "சிவ மடம்' என்ற பெயரில் தாங்கள் வாழும் வீட்டில் பாரதி தங்கியிருந்த அறைகள், அவர் பயன்படுத்திய பொருள்கள், புகைப்படங்கள், விடியோ பதிவுகள் ஆகியவற்றை வழங்க விருப்பம் தெரிவித்தனர்' என்று தருண் விஜய் தெரிவித்தார்.
முன்னதாக, தருண் விஜய், அவரது மனைவி வந்தனா, வாராணசி தமிழ் சங்கத் தலைவர் வி.எஸ். சுப்பிரமணியன், பொருளாளர் ஆர். சிவா, மணிவடியார் உள்ளிட்டோர் பாரதியார் வீட்டைப் பார்வையிட்டனர்.
பாரதியாரின் சகோதரி லக்ஷ்மியம்மாளின் மகன் கிருஷ்ணன், அவரது பேத்தி ஜோதி, உறவினர் ஹேமலதா உள்ளிட்ட குடும்பத்தினர் "ஓடி விளையாடு பாப்பா' என்ற பாரதியாரின் பாடலைப் பாடி விருந்தினர்களை வரவேற்றனர். பின்னர் பாரதியார் சிலைக்கு தருண் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி முதல்வர் டாக்டர் ஹரேந்திர ராய், வாராணசி பாஜக பொதுச் செயலர் சந்திரசேகர், தலைவர் துளசி சுப்பிரமணியன் தோஷி, பிரமுகர் அசோக் குமார், வாராணசி தமிழ்ச் சங்க தலைவர் சுப்பிரமணியன், உள்ளூர் கவுன்சிலர் ராஜேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடும்பத்தினர் ஆதரவு: தன்னை தருண் விஜய் சந்தித்தது குறித்து கிருஷ்ணன் கூறுகையில், "வழக்கமாக எங்கள் வீட்டுக்கு தேர்தல் காலங்களில் ஓட்டுக் கேட்கவும், வாராணசியில் வாழும் தமிழர்களின் ஆதரவைப் பெறவும் அரசியல்வாதிகள் வருவர். ஆனால், முதல் முறையாகப் பாரதியாருக்காக குரல் கொடுக்க உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வந்துள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது. அவரது முயற்சிக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு' என்றார்.
"பிரதமரிடம் விரைவில் அறிக்கை'
வாராணசியில் பாரதியார் வாழ்ந்த இடத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரைவில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து அறிக்கை அளிக்க உள்ளேன் என்று எம்.பி. தருண் விஜய் தெரிவித்தார். இது குறித்து "தினமணி' நிருபரிடம் அவர் கூறியதாவது:
பாரதியார் பயன்படுத்திய பொருள்கள், விடியோ பதிவுகள், புகைப்படங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதை அறிந்து வேதனைப்படுகிறேன். அவர் வாழ்ந்த இடத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தில்லி திரும்பியதும் எனது வாராணசி பயணம் பற்றியும், பாரதியாரின் வாழ்விடத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அறிக்கை தயாரிக்கவுள்ளேன். மத்திய சுற்றுலா, கலாசாரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத நாயக்கை இங்கு அழைத்து வந்து காட்டுவேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அறிக்கையை அளிப்பேன்.
பாரதியார் வசித்த வீட்டில் அவரது குடும்பத்தினர் பாதிக்கப்படாதவாறு அவர் வாழ்ந்த அறைகள், பொருள்கள், அவரது படைப்புகளைப் பராமரிக்கவும், அதைப் பற்றி பார்வையாளர்களிடம் விளக்கவும் ஒரு வழிகாட்டியை நியமிக்க வேண்டும். பாரதியாரின் வாழ்க்கையை சித்திரிக்கும் குறும்படம், அவரது வாழ்காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்சிக்கு வைக்க வேண்டும். வாராணசியில் பாரதி என்ற வரலாற்று நாயகன் சுதந்திரத்துக்கு முன்பு வாழ்ந்ததை வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் விளம்பரப்படுத்த வேண்டும். இந்த இடத்தை தேசிய ஒருமைப்பாடுக்கு வித்திடும் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைக்கவுள்ளேன். இம்முயற்சிக்கு அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆகியவை ஆதரவளிக்க வேண்டும் என்றார் தருண் விஜய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...