நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

"சார்க்' மாணவர்களைக் கவரும் தெற்காசியப் பல்கலை.!

ஆராய்ச்சிகளில் புதிய மேற்படிப்புகளை வழங்கி வருவதால், தில்லியில் அமைந்துள்ள தெற்கு ஆசியப் பல்கலைக்கழகம் (எஸ்ஏயு) "சார்க்' நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

News image
Updated On :19 அக்டோபர் 2014, 11:29 pm

வே.சுந்தரேஸ்வரன்

ஆராய்ச்சிகளில் புதிய மேற்படிப்புகளை வழங்கி வருவதால், தில்லியில் அமைந்துள்ள தெற்கு ஆசியப் பல்கலைக்கழகம் (எஸ்ஏயு) "சார்க்' நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

உலக மக்கள் தொகையில் ஐந்தில் இரு பங்கைக் கொண்டுள்ள தெற்கு ஆசியா, இன்றைக்கு உலகின் முக்கியமான பிராந்தியங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இப்பிராந்தியத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, பூடான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய எட்டு நாடுகள் "சார்க்' நாடுகள் என அழைக்கப்படுகின்றன.

சார்க் நாடுகள் மக்களிடையே பொதுவான புரிந்துணர்வு, பரஸ்பர மரியாதை, வளர்ச்சிக்கான தொடர்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கில் தெற்காசியப் பல்கலைக்கழகம் எனும் சர்வதேச பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பாக 2005-ஆம் ஆண்டில் தாகாவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சார்க் நாடுகள் மூலம் தெற்காசியப் பல்கலைக்கழகம் தில்லியில் 2010-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனத் தலைவராக பேராசிரியர் ஜிகே சதா பொறுப்பேற்றார். ஆரம்பத்தில் வகுப்புகள் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்டு, தற்போது சாணக்கியபுரியில் உள்ள அக்பர் பவனில் நவீன வசதிகளுடன் பல்வேறு படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

50 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இப்பல்கலைகலை.யில் தற்போது சார்க் நாடுகளைச் சேர்ந்த சுமார் 450 மாணவ, மாணவிகள் பல்வேறு மேற்படிப்புகளைப் பயின்று வருகின்றனர். இந்திய அரசு 100 மாணவர்களுக்கு கல்வி உதவிகளையும் வழங்கி வருகிறது.

இது குறித்து பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி அஹீபம் பிரகலாத் கூறியதாவது:

2010-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் தொடங்கின. ஆரம்பத்தில் எம்.சி.ஏ., எம்.ஏ. (வளர்ச்சிப் பொருளாதாரம்) ஆகிய இரு முதுகலைப் படிப்புகள் மட்டும் வழங்கப்பட்டன. இப்படிப்புகளில் 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

2011-இல் சட்டப் படிப்பு எல்.எல்.எம். எம்.எஸ்ஸி. (உயிரி தொழில்நுட்பம்), எம்.ஏ. (சமூகவியல்), எம்.ஏ. (சர்வதேச உறவுகள்), எம்.எஸ்ஸி. (கணினி அறிவியல்) ஆகிய ஐந்து படிப்புகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன. 2012-இல் எம்.எஸ்ஸி. (பயன்பாட்டு கணிதம்) படிப்பும், 2013-இல் எம்.பில்., பிஎச்.டி. படிப்புகளும் தொடங்கப்பட்டன. தற்போது முதுகலையில் 7 படிப்புகளும், எம்.பில்., பிஎச்.டி. ஆகியவற்றில் 7 படிப்புகளும் அளிக்கப்படுகின்றன.

இடஒதுக்கீடு: பல்கலை.யில் உள்ள மொத்தமுள்ள சேர்க்கை இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீதம், பாகிஸ்தான், வங்கதேசத்திற்கு தலா 10 சதவீதம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு தலா 4 சதவீதம் என ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. சார்க் நாடுகள் அல்லாத பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

கல்வி உதவி: முதுகலைப் படிப்புகளில் சேரும் மாணவர்களில் குறைந்த பொருளாதார வளர்ச்சியுடைய ஆப்கானிஸ்தான், பூடான், இலங்கை, மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு விடுதி, கல்வி உதவித் தொகை (ரூ.7,000), கல்விக் கட்டணம் ஆகியவையும், பிஎச்.டி. படிப்பில் சேருவோருக்கு ரூ.12 ஆயிரம் கல்வி உதவித் தொகையையும் இந்திய அரசு வழங்கி வருகிறது. மேலும், பல்வேறு படிப்புகளில் சேரும் மாணவர்களில் 90 சதவீதம் பேருக்கு பல்கலைக்கழகம் சார்பிலும் கல்வி உதவிகள் வழங்கப்படுகின்றன.

நவீன வசதிகள்: மாணவர்களுக்கு நவீன ஆய்வகங்கள், நூலகங்கள், மருத்துவக் காப்பீட்டுடன் கூடிய மருத்துவ வசதிகள் ஆகியவை அளிக்கப்படுகின்றன.

கல்வி பயிலும் போது நூலக கணினி ஆய்வகம் உள்ளிட்டவற்றில் பகுதிநேரமாக வேலை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பல்கலை.யின் கல்விப் புலங்களில் 60 பேராசிரியர்கள் மற்றும் கௌரவ ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

பல்கலை.யின் நிறுவனத் தலைவர் ஜி.கே. சதா கடந்த மார்ச் மாதம் காலமானார். அதைத் தொடர்ந்து, துணைத் தலைவராக உள்ள ராஜீவ் கே. சாக்ஷேனா, தலைவர் பொறுப்பை கவனித்து வருகிறார்.

100 ஏக்கரில் புதிய வளாகம்: தெற்காசியப் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை அமைக்க தெற்கு தில்லியில் உள்ள மைதான்கடியில் சுமார் 100 ஏக்கர் நிலத்தை இந்திய அரசு தேர்வு செய்துள்ளது. இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளது.

இங்கு நவீன ஆய்வுக் கூடங்கள், நூலக அரங்கம், உறைவிட வசதி, ஊழியர்களுக்கான அத்தியாவசியமான நிர்வாக ஆதரவு, சுகாதார மையம், ஷாப்பிங் மையம், கருத்தரங்கு கூடம், விளையாட்டு மைதானம், பொழுதுபோக்கு வசதி, கலாசார அரங்கம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. சார்க் நாடுகள் பிராந்திய உணர்வை ஏற்படுத்துவதும், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதும் பல்கலை.யின் முக்கியமான நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ள்ஹன்.ஹஸ்ரீ.ண்ய் எனும் இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

சேர்க்கை விதிமுறை

தேற்காசிய பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.

அதன்பிறகு, விண்ணப்பம் விநியோகம் நடைபெறும். மார்ச் அல்லது ஏப்ரலில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு சார்க் நாடுகளில் நடத்தப்படும். வகுப்புகள் மே, ஜூனில் தொடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.