தில்லி உயிரியல் பூங்காவில் வண்ண நாரைகள் வருகை அதிகரிப்பு!
குளிர்கால சீசனில் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும் வண்ண நாரைகள் (பெயிண்டட் ஸ்டார்க்) தில்லி


குளிர்கால சீசனில் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும் வண்ண நாரைகள் (பெயிண்டட் ஸ்டார்க்) தில்லி தேசிய உயிரியல் பூங்காவுக்கு விருந்தாளிகளாக வருவது அதிகரித்துள்ளது.
முன் எப்போதும் இல்லாத வகையில், இப்போது முன்கூட்டியே வரத் தொடங்கியுள்ள இவை, பார்வையாளர்களைக் வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.
பூமியில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய இருந்தாலும், இயற்கையின் வெகுமதிகளான வண்ண, வண்ணப் பறவைகளையும், விலங்குகளையும் பார்ப்பதற்கு ஈடாகாது. தில்லி புராண கிலா கோட்டையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் காட்டு விலங்குகள், பறவைகள் ஆகிய அனைத்தும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு நாள்தோறும் விருந்து படைத்து வருகின்றன.
இங்கு சுமார் 150 வகையான பறவைகள், விலங்குகள் உள்பட ஏறக்குறைய 1,750 வன உயிரினங்கள் பராமரித்து வரப்படுகின்றன. இவற்றைக் காண்பதற்காக தினமும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
தற்போது கோடைக் காலம் முடிந்து குளிர் காலம் தொடங்க உள்ளது. இந்நிலையில், பூங்காவில் தற்போது வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வண்ண நாரைகள் வரத் தொடங்கியுள்ளன. ஆண்டுதோறும் அக்டோபரில்தான் அதிகளவில் வரும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்திலேயே அதிகளவில் வரத் தொடங்கிவிட்டன.
மரக்கழுத்து நாரை, வெள்ளை நாரை, கருங்கழுத்து நாரை என பல பெயர்களில் அழைக்கப்படும் இவை, பூங்கா மரங்களில் அமர்ந்து பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. பூங்காவின் குளத்தில் உள்ள நீரில் இறக்கையால் அடித்துக் குளியலிடும் வெள்ளநிறைப் பெலிகன் பறவைகள், தண்ணீருக்குள் தலையை மூழ்கியவாறு வேகமாகச் சென்று மீனைக் கொத்திச் சென்று உண்ணும் கருப்பு நிறப் பறவைகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு. அதேபோன்று, வானில் வட்டமடித்து, சிறகடித்துப் பறந்தவாறு காணப்படும் வண்ண நாரைகள் திடீரென தண்ணீரை நோக்கி வேகமாகப் பறந்து சென்று மீனை லாவகமாகக் கொத்திச் செல்லும் அழகைப் பார்ப்பதே அலாதியானது. இந்த ஆண்டு வண்ண நாரைகள் கூட்டம் கூட்டமாக பூங்காவில் உள்ள மரங்களில் அமர்ந்து தங்களுக்கான கூடுகளைத் கட்டுவதற்கு ஆயத்தமாகி வருகின்றன. அவற்றின் குரலோசை சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இதுகுறித்து உயிரியல் பூங்காவின் வனவிலங்கு மூத்த மருத்துவர் ந. பன்னீர்செல்வம் "தினமணி' செய்தியாளரிடம் கூறியதாவது:
இந்த ஆண்டு குளிர்கால சீசனை ஒட்டி முன்கூட்டியே வண்ண நாரைகள் வரத் தொடங்கியுள்ளன. இங்குள்ள நீர்குட்டைகளில் தண்ணீர் போதுமான அளவுக்கு உள்ளதால், பறவைகளின் வருகையும் அதிகரித்துள்ளது. வழக்கமாக பூங்காவில் மரங்களில் உள்ள பறவைகளுக்கு உணவாக நாள்தோறும் 40 -50 கிலோ சிறிய மீன்கள் வழங்கப்படும். இப்போது வண்ண நாரைகளின் வருகையால் 40 கிலோ சிறிய மீன்கள் கூடுதலாக வழங்கப்படுகின்றன. நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் கூடுதலாக மேலும் 40 கிலோ வழங்கப்படும். செப்டம்பர், அக்டோபரில் கூடு கட்டி, முட்டையிடும் வண்ண நாரைகள், ஜனவரி, பிப்ரவரியில் குஞ்சு பொறிக்கும். மார்ச், ஏப்ரலில் மீண்டும் தங்களது வாழிடங்களுக்குச் சென்றுவிடும்.
பறவைகளுக்கு உணவு இயற்கையாகக் கிடைக்கும் வகையில், பூங்காவில் உள்ள குளங்களில் மீன் குஞ்சுகளை வளர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள நான்கு குளங்களைச் சுற்றியுள்ள மரங்களில் தற்போது வண்ண நாரைகள் அதிகம் காணப்படுகின்றன. இவை தவிர, சிறிய வாத்துகள், பின் டெய்ல்டு டக்ஸ், ஷெலாவர் உள்ளிட்ட இடம்பெயரும் வேறு சில பறவைகளும், வெளிநாட்டுப் பறவைகளும் பூங்காவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் அதிகமாக வருவது வழக்கம்.
கோடையில் விலங்குகள் சுறுசுறுப்பாக இருக்காது என்பதால், குளிர் காலத்தில் துள்ளி விளையாடும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இந்த ஆண்டும் பயணிகள் வருகை அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
சுற்றிப் பார்க்க சிறப்பு ஏற்பாடு
தில்லி உயிரியல் பூங்காவில் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க பேட்டரி கார்கள் மூலம் செல்லும் போது, முன்பு அவை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நிறுத்தப்பட்டு வந்தன.
இதனால், குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவே விலங்குகளைப் பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இப்போது அதுபோன்று அல்லாமல், பேட்டரி கார்கள் தொடர்ந்து சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒரு பேட்டரி காரில் செல்லும் பயணி, தனது இஷ்டம்போல விலங்குகளைப் பார்த்த பிறகு, அந்த இடத்திற்கு வரும் வேறு ஒரு பேட்டரி காரில் ஏறிச் செல்ல முடியும்.
மேலும், முன்பெல்லாம் பேட்டரி கார் இடதுபுறம் ஆரம்பித்து வலது புறம் முடியும் வகையில் இருந்தது. இப்போது வலது புறத்தில் இருந்து புறப்பட்டு இடது புறத்தில் முடியும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. புலி, சிங்கம் உள்ளிட்ட அனைத்து வகை விலங்குகளையும் விடுபடாமல் கண்டுகளிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பூங்கா வட்டாரங்கள் தெரிவித்தன.
படங்கள்: டி.ராமகிருஷ்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...