பிரம்மச்சாரி வாழ்க்கை வாழ்பவர்களைக் கேட்டுப் பாருங்கள்... அவர்கள் அதிகம் நேசிக்கும் பொருள்களின் பட்டியலில் "மேகி' நூடுல்ஸ் நிச்சயமாக இடம் பிடித்திருக்கும். இன்றைய பல நவநாகரிகப் பெண்களுக்கு, சுடுநீருக்கு அடுத்து சமைக்கத் தெரிந்த ஒன்றே ஒன்று "மேகி' மட்டுமே. இந்தியர்களின் வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ள "மேகி' நூடுல்ஸ் ஆண்டுதோறும் ஏறத்தாழ
ரூ. 1,500 கோடி வருமானத்தை தனது தாய் நிறுவனமான "நெஸ்லே இந்தியா'வுக்குப் பெற்றுக் கொடுக்கிறது என்பதில் இருந்தே இதன் பிரமாண்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், புது தில்லி, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் "மேகி' நூடுல்ஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. தவிர, நாடு முழுவதிலும் 9 வகையான "மேகி' நூடுல்ஸ்களை திரும்பப் பெறுமாறு, "நெஸ்லே' நிறுவனத்துக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேகியை விளம்பரம் செய்தவர்கள் என்பதற்காக அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களை தேவைப்பட்டால் கைது செய்யலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஏறத்தாழ 30 வருடங்களாக கொடி நாட்டிய "மேகி'யின் இன்றைய நிலைக்கு அரசு அனுமதித்த அளவை விட, எம்.எஸ்.ஜி.யின் அளவு அதில் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் இன்று அதிகம் உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்றாக எம்.எஸ்.ஜி (மோனோ சோடியம் குளுட்டாமேட்) உள்ளது. இந்தப் பெயர் புதிதாக இருக்கிறதே என யோசிக்கிறீர்களா? புகழ்பெற்ற சுவையூட்டியான "அஜினோமோட்டோ'வின் ரசாயனப் பெயர்தான் "எம்.எஸ்.ஜி' என்கிற "மோனோ சோடியம் குளுடாமேட்' ஆகும்.
இது உணவில் சுவைக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான சுவையூட்டியாகும். இது மூளையின் செல்களை ஊடுருவி, அவற்றை குஷிப்படுத்தும் எக்ûஸடோ டாக்ஸின்கள். கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்களும் கூட மூளையை ஊடுருவி குஷிப்படுத்துபவைதான்.
இந்த உப்பைச் சேர்க்கும்போது உணவுக்கு "உமாமி' என்கிற புதியதொரு சுவை ஏற்படுகிறது. மனிதர்களால் உணரக்கூடிய அடிப்படைச் சுவைகளுக்கு மேலாக புதிதாக ஓர் சுவையாக "உமாமி'யைச் சொல்கிறார்கள். இந்தச் சுவையைக் குறிப்பிடும் வகையிலான தமிழ்ப் பதம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஒவ்வோர் உணவும் ஒவ்வொரு விதமான சுவையைக் கொண்டிருக்கின்றன. அவை மூளையின் குறிப்பிட்ட பகுதியை தூண்டுகின்றன. அந்த தூண்டலின் தன்மையைப் பொருத்து அந்தச் சுவையை நாம் உணர்கிறோம். உண்மையில் "எம்.எஸ்.ஜி.'யால் சுவையை அதிகரிக்க முடியாது. ஆனால், மூளை தூண்டப்படும் அளவை அது அதிகரிக்கும். இதனால், "எம்.எஸ்.ஜி' சேர்த்த உணவுகள் அதிக ருசியுள்ளவை போல நம்மை உணர வைக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
காலங்காலமாக நாம் கறிவேப்பிலையைப் பயன்படுத்துவதுபோல சீனர்கள் கடற்பாசிகளை உணவில் சேர்த்து வந்தார்கள். கடற்பாசி சேர்க்கப்பட்ட உணவானது அபாரமான ருசியை வழங்கியதாகக் கருதினார்கள். கடற்பாசியிலிருந்து தனிச் சுவை கிடைக்க "குளுட்டாமேட்' என்ற வேதிப்பொருள்தான் காரணம் என்பதை கிகுனே இகடே என்ற ஜப்பானிய மருத்துவ நிபுணர் 1908-இல் கண்டறிந்தார். அதனுடன் சில உப்புகளைச் சேர்த்து "மோனோ சோடியம் குளுட்டாமேட்' என்ற சுவையூட்டியைக் கண்டறிந்தார்.
அதை உலகளாவிய வியாபாரமாக்க அவர் தொடங்கிய நிறுவனம்தான் "அஜினோமோட்டோ'. இதை "சுவையின் சாரம்' எனத் தமிழ்ப்படுத்தலாம். இன்று 26 நாடுகளில் "அஜினோமோட்டோ' தொழிற்சாலைகள் உள்ளன. ஏறத்தாழ 28,000 பேர் இவற்றில் வேலை செய்கிறார்கள். ஆண்டுதோறும் 1200 கோடி அமெரிக்க டாலர்களை லாபமாக ஈட்டுகிறது இந்த நிறுவனம்.
இன்று எம்.எஸ்.ஜி. என்கிற அஜினோமோட்டோ இல்லாத துரித உணவுகளே இல்லை என்கிற அளவுக்கு, எல்லாவற்றிலும் இந்தச் சுவையூட்டி நீக்கமற நிறைந்திருக்கிறது. "எம்.எஸ்.ஜி. இல்லாமல் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களால் வாழ முடியாது. அவர்களின் நாக்கு, அந்தச் சுவைக்கு அடிமையாகிவிட்டது' என்கிறார் வடகிழக்கு ஆசிய நாட்டு மக்களின் உணவுப் பழக்கத்தை ஆய்வு செய்து ஆவணப் படமாக எடுத்துள்ள மைக் கிரி பிரெüன்.
குளுட்டோமிக் அமிலமானது பல தாவரங்களில் இருந்து பெறக் கூடிய சாதாரண அமிலமாகும். ஆனால், அதை வேறு சில உப்புகளுடன் சேர்த்து மோனோ சோடியம் குளுட்டாமேட்டாகத் தயாரிக்கும் அஜினோமோட்டோ நிறுவனம், இதைத் தாவரங்களில் இருந்துதான் பெறுவதாகச் சொன்னாலும், இந்தச் சுவையூட்டிகள் சம்பந்தமாக வெளிப்படையான தரவுகள் எதுவுமே இல்லை. அவர்கள் உண்மையாக தாவரங்களில் இருந்துதான் இதைத் தயாரிக்கிறார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. காப்புரிமையைக் காரணம் காட்டி அதை மறைத்துள்ளனர். இது பலத்த சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
எம்.எஸ்.ஜி.யின் பாதிப்பை அறிய விரும்பிய விஞ்ஞானிகள் கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தனர். காலப்போக்கில் அந்த எலிகளுக்குப் பிறந்த குட்டிகளின் மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருள்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளின் உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாகக் குறையும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால், உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மூளை மட்டுமன்றி, இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளில் அழற்சியையும், ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால், காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்றுவலி குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும்.
மூளையில் "ஹைபோதாலமஸ்' என்ற பகுதிதான் பசியைத் தூண்டுகிறது. எம்.எஸ்.ஜி.யானது "ஹைபோதாலமஸ்'ûஸ அதிகமாகத் தூண்டுகிறது. இதனால் இன்சுலின், அட்ரினல் போன்ற ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கின்றன. இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதால் சிறிது நேரத்தில் மீண்டும் பசி எடுக்கும். ஒரு "மேகி' நூடுல்ஸ் உண்பவர் இன்னொரு மணி நேரத்தில் இன்னொரு "மேகி'யை உண்பதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.
எம்.எஸ்.ஜி. சேர்த்த உணவை உண்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். மூளையில் உருவாக்கப்படும் "சிரோடோனின்' என்ற வேதிப்பொருள்தான் மனிதனின் மனநிலையைத் தீர்மானிப்பதாக உள்ளது. எம்.எஸ்.ஜி.யானது மூளையில் இந்த வேதிப் பொருளின் அளவைக் குறைப்பதால், சோர்வு, மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன; தூக்கம் பறிபோகிறது. சரியான தூக்கம் இல்லாததால் மூளையில் "டோபாமின்' என்ற வேதிப்பொருளின் அளவு குறைந்து ஞாபக சக்தி குறைகிறது. அதிக அளவில் சேர்க்கப்படும் குளுட்டாமிக் அமிலத்தால் உயிரின் அடிப்படை அலகான டி.என்.ஏ. பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் சில மருத்துவர்கள். ஆனால், அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
குறிப்பிட்ட சில ஒவ்வாமை உள்ளவர்களுக்கு எம்.எஸ்.ஜி. கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு உடல் கடுமையாக வேர்க்க ஆரம்பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு சைனா உணவக நோய் (ஸ்ரீட்ண்ய்ஹ ழ்ங்ள்ற்ஹன்ழ்ஹய்ற் ள்ஹ்ய்க்ழ்ர்ம்ங்) என்று தனிப் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட எம்.எஸ்.ஜி.யின் அளவை விட அதிகமாகப் பெரியவர்கள் பயன்படுத்தும்போது சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும். படபடப்பு, உடல் தளர்ச்சி ஆகியனவும் ஏற்படும். இது காலப்போக்கில் நரம்பு மண்டலங்களைத் தாக்கி மூளையைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகள் எம்.எஸ்.ஜி.யை தடை செய்துள்ளன. அங்குள்ள உணவகங்களில் "இங்கே எம்.எஸ்.ஜி சேர்ப்பதில்லை' என்றே எழுதிவைத்திருப்பார்கள். ஆனால் நம் நாட்டிலோ எல்லா உணவுகளுக்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள். எல்லா உணவுகளுக்கும் இந்த உப்பைப் பயன்படுத்தலாமா? அது பாதுகாப்பானதா? என்ற ஆய்வுகள் இன்னமும் இங்கு முறையாகச் செய்யப்படவில்லை.
"இந்தியா உள்பட பல நாடுகள் இதைத் தடை செய்து வைத்திருந்தன. உலகமயமாக்கலின் விளைவாக இன்று இது நமது சமையலறை வரை வந்துவிட்டது. நமது பாரம்பரியத்தில் செயற்கையாக சுவையை அதிகரிக்கும் சுவையூட்டிகள் என்ற கருத்தாக்கமே இல்லை. சுவை என்பது இயல்பானது மட்டுமன்றி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான மருத்துவக் குணமுடையது. செயற்கையான, நமக்குப் பழக்கம் இல்லாத உப்புகளை நமது உடல் ஏற்றுக் கொள்ளத் திணறுவதால் ஒவ்வாமை ஏற்படும்.
"உணவில் எம்.எஸ்.ஜி. சேர்ப்பதனால் வயிற்றுப் புண்கள், வாயுக் கோளாறுகள், பசியின்மை, மந்தம், பிற உணவுகள் மீது பிடித்தம் இல்லாமல் போதல், எம்.எஸ்.ஜி. சேர்க்கப்பட்ட உணவுகளுக்கு அடிமையாவதால் மூளையின் சிந்திக்கும் திறன் குறைதல் போன்ற பல பிரச்னைகள் ஏற்படும்' என்கிறார்கள் சித்த வைத்திய நிபுணர்கள்.
சர்ச்சைகள் "மேகி'யைச் சுற்றியே உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் எம்.எஸ்.ஜி.யை "சீன உப்பு' என்ற பெயரில் சாதாரணத் தெருவோர உணவகங்களில் தொடங்கி அடுக்குமாடி உணவகங்கள் வரைக்கும் பயன்படுத்துகிறார்கள். தந்தூரி சிக்கன், நகட் எனப்படும் கோழி வறுவலை சிறுவர்கள் விரும்பி உண்கிறார்கள். அவற்றில் அபாய அளவில் எம்.எஸ்.ஜி.யைப் பயன்படுத்துகிறார்கள். அரசு அனுமதித்த எம்.எஸ்.ஜி. அளவைவிட 17 மடங்கு அதிகமாகப் பயன்படுத்தியதாக "மேகி'யை தற்போது தடை செய்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு சமையலறையையும் ஆய்வு செய்தால் எத்தனை மடங்கு அதிகமாக இதைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பழ. கருப்பையா பிரசாரம்

கள் விற்பனையை திறந்து, டாஸ்மாக்கை மூடுவோம்: சீமான்

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு காங்கிரஸ் விமா்சனம்

திருமயம் அருகே இளைஞா் கொலை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


