என் மீது தவறு இருந்தால் சிறையில் தள்ளுங்கள்: மோடிக்கு ராகுல் சவால்

என் மீது தவறு இருந்தால், சிறையில் தள்ளுங்கள் என பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தார் ராகுல் காந்தி.
என் மீது தவறு இருந்தால் சிறையில் தள்ளுங்கள்: மோடிக்கு ராகுல் சவால்
Updated on
1 min read

ஆட்சி, அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது. என் மீது தவறு இருந்தால், சிறையில் தள்ளுங்கள் என பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 98-வது பிறந்த நாள் விழா இளைஞர் காங்கிரஸ் சார்பில் புதுதில்லியில் இன்று கொண்டாடப்பட்டது.

இவ்வாவிழாவில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, ஆளும் பாரதீய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். நிறுவனமும் என் மீதும், குடும்பத்தினர் மீதும் சகதியை அள்ளி வீசுகின்றனர்.

பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் எனது பாட்டி, தந்தை, தாய் ஆகியோர் மீது குற்றம்சாட்டி வருவதை எனது இளம் வயது முதலே கண்டு வருகிறேன்.

மோடி அவர்களே ஆட்சியும், அதிகாரமும் உங்கள் கையில் இருக்கிறது. என் மீதான குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, அதில் உண்மையில் இருந்தால் என்னை சிறையில் தள்ளுங்கள் என்று சவால் விடுத்தார் ராகுல்.

ராகுல் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என பாரதீய ஜனதா கட்சியின் சுப்பிரமணிய சுவாமி குற்றம்சாட்டியிருந்த நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு பேசினார்.

நீங்கள் தற்போது எதிர்கட்சியாக இல்லை, ஆளுங்கட்சியாக இருக்கிறீர்கள் எனவே, உங்களது எடுபிடிகள் எங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை தடுத்து நிறுத்துங்கள் என்று மோடியை வலியுறுத்தினார் ராகுல்.

நிறைய பேரை கொல்லுபவர்களை விட, ஒரு சிலரை குறிவைத்து கொலை செய்யும் அமைப்புகளே ஒட்டுமொத்த சமூகத்தின் பெயரை கெடுக்கின்றன. அதுதான் ஆர்.எஸ்.எஸ். அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள செய்வதே நமது கடமை என்றார் காங்கிரஸ் துணைத் தலைவர்.

பிகார் தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில், மோடி, அமித் ஷா ஆகியோர் பிரசாரம் செய்தனர். ஆனால், நமக்கு தான் அனைத்து இடங்களிலும் வெற்றி கிடைத்தது என்று குறிப்பிட்டார் ராகுல்.

ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களுக்கும் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுவேன் என்றார் ராகுல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com