

அஹமத்நகர் : மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, சிங்ணாப்பூர் சனிபகவான் கோயிலுக்குள் வரும் வெள்ளிக்கிழமை முதல் பெண்களை அனுமதிக்க, கோயில் அறக்கட்டளை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவினை, மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள சிங்கணாப்பூர் சனிபகவான் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் இன்று எடுத்துள்ளது.
கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் இன்று நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த, மிகப்பெரிய கருங்கல்லால் ஆன சனிபகவான் கோயிலின் நுழைவு வாயிலிலேயே பெண்கள் நிறுத்தப்படுவார்கள். 400 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இந்த வழக்கம், தற்போது முடிவுக்கு வருகிறது.
முன்னதாக், சிங்கணாப்பூரில் உள்ள பழைமை வாய்ந்த சனிபகவான் கோயிலுக்குள் பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் பெண்கள் அமைப்பினர் பொது நல மனு தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அமர்வு நீதிபதிகள், கோயில்களுக்குள் பெண்கள் நுழைவது அவர்களின் அடிப்படை உரிமை என்று தீர்ப்பு வழங்கினர்.
இதையடுத்து, பெண்கள் நல ஆர்வலர் திருப்தி தேசாய் தலைமையில் புணேவைச் சேர்ந்த பெண்கள் அமைப்பினர், சனிக்கிழமை காலை சனிபகவான் கோயிலுக்குச் சென்றனர்.
அப்போது, சனி பகவானை சுற்றியுள்ள புனித மேடையில் அவர்கள் ஏற முயன்றனர். அவர்களை கோயில் நிர்வாகிகளும், கிராம மக்களும் தடுத்து நிறுத்தி, அந்த மேடைக்கு பெண்கள் செல்ல முடியாத வகையில் முற்றுகையிட்டு நின்றனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயில் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.