

கொல்கத்தா: கொல்கத்தா அருகே மலைப்பகுதியில் இருக்கும் 51 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளியை சீரமைப்பதற்கு மாநிலங்களவை உறுப்பினரான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ. 76 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
கொல்கத்தாவின் தென்மேற்கே 140 கி.மீ. தொலைவில் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ளது சுவர்ணமூயி சஸ்மால் சிக்க்ஷா நிகேதன் பள்ளி. மலைவாழ் மக்களின் குழந்தைகள் சுமார் 1000 பேர் பயிலும் இந்த பள்ளி 51 ஆண்டுகள் பழமையானது. பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதால் பள்ளிக் கட்டடங்கள் மிகவும் சேதமடைந்தன.
பள்ளியின் தலைமை ஆசிரியராக தற்போது பணியாற்றி வரும் உத்தம் குமார் மொகந்தி, பள்ளியை சீரமைப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். உள்ளூர் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யிடம் கையேந்தியும் ஒரு பலனும் கிடைக்கவில்லை.
எனினும் தனது முயற்சியில ்தளராத மொகந்தி, கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி இணையதளத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களின் தகவல்களைத் தேடினார். அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் குறித்த தகவல்கள் கிடைத்தன. உடனே, இமெயில் மூலம் டெண்டுல்கரைத் தொடர்புக் கொண்ட மொகந்தி, தனது பள்ளியின் நிலைமைக் குறித்த விரிவான தகவல்களை எடுத்துக் கூறி, பள்ளியை சீரமைக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு அதாவது ஆகஸ்ட், 7, 2014 அன்று டெண்டுல்கரிடமிருந்து பதில் வந்தது. அதில், பள்ளியை சீரமைப்பதற்கு தனது உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணம் வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
மேலும், பள்ளியை சீரமைப்பதற்குரிய திட்ட வரைவைத் தாயாரிக்குமாறும் கேட்டுக் கொண்டார். வேகமாக செயல்பட்ட மொகந்தி ரூ. 76,21,050க்கான திட்ட வரைவைத் தயார் செய்தார். இதற்கு டெண்டுல்கர் ஒப்புதல் வழங்கினார்.
இதனிடையே டெண்டுல்கர், 51 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைவாழ் மக்களின் குழந்தைகள் பயிலும் பள்ளியை சீரமைப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து, அதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைத்தார்.
டெண்டுல்கர் குறித்து கேள்வியேப்படாத கிராமத்தில் உள்ள பள்ளியை சீரமைப்பதற்கு அவர் உதவி செய்துள்ளது என்பது அவரது மனிதாபிமானத்தைக் காட்டுகிறது என மொகந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பள்ளிக் கட்டட வேலைகள் நிறைவடைந்ததும், தானே மும்பைக்கு நேரில் சென்று திறப்பு விழாவுக்கு வருமாறு டெண்டுல்கரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன் என்றார் மொகந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.