

கன்னடம், ஆங்கிலம் மூலம் தமிழ் படிக்கும் இளம் தலைமுறைகள் கர்நாடகத்தில் உருவாகியுள்ளன.
ஒருவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, கருத்தியல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு மொழி சிறந்த கருவியாகப் பயன்பட்டு வருகிறது. மனித மனங்களில் தோன்றும் சிந்தனைகள் ஏதாவது ஒரு மொழியில் வார்த்தைகளாக வெளிப்பட்டால்தான் அதைப் புரிந்துகொள்ள முடியும்.
தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையாக விளங்கும் மொழியைப் பேசக் கூடிய திறன் வாய்ந்த உயிரினமாக மனித இனம் உள்ளது. ஒலியாக வெளிப்படுவதை வார்த்தையாக்கி, வார்த்தைகளைக் கோத்து மொழியாக்கி, மொழியை எழுத்தாக வடித்த மனிதன், உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளைப் பேசியுள்ளான்.
பூமியில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து பேசிய மொழிகளைக் கணக்கெடுக்க முடியாவிட்டாலும், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மொழி தோன்றியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கால கட்டத்தில் பல லட்சக்கணக்கான மொழிகள் பேசப்பட்டிருந்தாலும், தற்போது உலகம் முழுவதும் எஞ்சியிருப்பது 6 ஆயிரம் மொழிகள் மட்டுமே. நிகழ் நூற்றாண்டின் இறுதிக்குள் 2,500 மொழிகள் அழிவைச் சந்திக்கும் என்று ஐ.நா.சபையின் யுனெஸ்கோ எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், வியாபாரமயமாக்கல், கலாசாரம், மொழி ஆதிக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த 2,500 மொழிகளும் அழியும் நிலையை நோக்கி நகர்ந்து வருவதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பேசப்படும் 1,500 மொழிகளை ஓராயிரம் பேர் மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் யுனெஸ்கோ எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளது. குறிப்பாக, எழுத்து வடிவம் இல்லாத, ஆவணப்படுத்தப்படாத மொழிகள் வேகமாக அழிந்து வருவதாகவும் யுனெஸ்கோ கூறியுள்ளது.
எழுத்து வடிவம் இல்லாதது மட்டுமல்லாமல், பேசுவதற்கு ஆள் இல்லாவிட்டால் அந்த மொழியை அழிந்த மொழியாக அறிவித்து விடுகிறார்கள். எந்தவொரு மொழியும் நிலைத்திருக்க எழுத்து மிக மிக முக்கியமாகும். எழுத்துகள் அழிந்துவிட்டால், மொழியை மறந்துவிட வேண்டியதுதான்.
ஒரு மொழி அழிவதால் அந்த மொழியில் எழுதி வைக்கப்பட்ட மூதாதையரின் அறிவு வளம், சிந்தனை வளம், பண்பாட்டுக் கூறுகள், இலக்கிய வளம் ஆகியவற்றை மனித சமூகம் தொலைத்துவிடும் நிலை ஏற்படும். அதுபோன்றதொரு நிலை தமிழ் மொழிக்கு வந்துவிடக் கூடாது என்று பலரும் விரும்புகிறார்கள்.
ஆனால், உலக அளவில் 12 கோடி மக்களால் பேசப்படும் தமிழ் மொழி, கர்நாடகத்தில் ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. கர்நாடகத்தில் 70 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆண்டாண்டு காலமாக கர்நாடகத்தில் நிலைபெற்றவர்கள், சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேறியவர்கள், சில பதின் ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிமித்தமாக குடிபெயர்ந்தவர்கள் என்று கர்நாடகத் தமிழர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
30 ஆண்டுகள் முன்னர்வரை தமிழைக் கற்று வந்த தமிழர்கள், தற்போது தங்களது குழந்தைகளுக்கு கன்னடம், இந்தி, ஆங்கிலத்தை சொல்லிக் கொடுக்கிறார்கள். எந்த மொழியைக் கற்கிறார்கள் என்பதைவிட தமிழ் மொழியைக் கற்காமல் விட்டுவிட்டார்களே என்ற கவலை தமிழ் ஆர்வலர்களை வாட்டி வதைத்து வருகிறது.
கர்நாடகத்தில், குறிப்பாக பெங்களூரில் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாத்ததில் தமிழ் கிறிஸ்தவத் தேவாலயங்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். தற்போது தமிழ் தேவாலயங்கள் உயிர்ப்போடு இயங்கி வந்தாலும், தமிழ் பேசும் மக்கள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
அதாவது, தமிழர்களாக இருந்தாலும் தமிழ் படிக்க, எழுதத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இதன் விளைவாக, பெரும்பாலான தென்னிந்திய திருச்சபை, கத்தோலிக்க தமிழ் கிறிஸ்தவத் தேவாலயங்களில் விவிலியத்தின் தேவ வசனங்களை கன்னடம், ஆங்கிலத்தில் எழுதிவைத்துக் கொண்டு படிக்கும் இளம் தலைமுறை உருவெடுத்துள்ளது.
அது மட்டுமின்றி, தமிழ்க் கீர்த்தனைகள், பாமாலைகளையும் ஆங்கிலம், கன்னடம், இந்தி மொழிகளில் எழுதிவைத்துக் கொண்டு பாடுகிறார்கள். தமிழில் ஆராதனை நடத்த வேண்டுமென்ற ஆர்வ மிகுதியால் தமிழ் விவிலியங்கள், கீர்த்தனை, பாமாலை நூல்களை ஆங்கிலம், கன்னட எழுத்துகளில் தயார் செய்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக, இளம் தலைமுறையினர் ஓரளவு தமிழில் பேசுவதாகத் திருப்தியடைந்தாலும், நீண்ட காலத்தில் தமிழ் படிக்க, எழுதத் தெரியாத தலைமுறை உருவாகி விடுவதோடு, அடுத்த தலைமுறையின் நாவிலும், ஏட்டிலும் தமிழ் எஞ்சியிருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையை மாற்றியமைக்க கிறிஸ்தவத் தேவாலயங்களில் தமிழைச் சொல்லிக் கொடுக்க பெங்களூரு தமிழ்ச் சங்கம் முன்வந்துள்ளது. இதற்கு ஒத்துழைக்க தென்னிந்திய திருச்சபையின் கர்நாடக மத்திய மண்டலமும் தயாராகி வருவதாகத் தெரிகிறது. தேவாலயங்களில் திட்டமிட்டு தமிழை வளர்க்கும் போக்கு துளிர்க்காவிட்டால், எதிர்காலத் தமிழ்ச் சந்ததியினர் நம்மைப் பழிக்கும் நிலை உருவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.