விஜய் மல்லையா எப்போதோ வெளிநாடு சென்றுவிட்டார்: அரசு பகீர் தகவல்

பல கோடி அளவுக்கு கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சிபிஐ தகவலின்படி எப்போதோ வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்
விஜய் மல்லையா எப்போதோ வெளிநாடு சென்றுவிட்டார்: அரசு பகீர் தகவல்
Updated on
1 min read

பல கோடி அளவுக்கு கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சிபிஐ தகவலின்படி எப்போதோ வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்குரைஞர் கூறியுள்ளார்.

கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, அயல்நாடு செல்வதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

அப்போது, இந்த மனு மீது 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர் இந்தியாவில் இல்லாதபட்சத்தில், நோட்டீஸை மல்லையாவின் மாநிலங்களவை உறுப்பினருக்கான மின்னஞ்சலிலும், லண்டனில் உள்ள இந்திய தூதர் மூலமாகவும் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட யுனைடெட் பிரிவெரீஸ் (யு.பி.) குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையா (தற்போது பதவி விலகியுள்ளார்), அவரது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது.

ஆனால், இந்தத் தொகை திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், மல்லையாவையும், அவரது கிங்பிஷர் நிறுவனத்தையும் வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்த தவறிய மோசடியாளர்கள் என்ற பட்டியலின்கீழ் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை அறிவித்தன.

இதைத்தொடர்ந்து, மல்லையாவுக்கு எதிராக அமலாக்கத் துறை விசாரணை, பெங்களூரு கடன் தீர்ப்பாயத்தில் வழக்கு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, அவர் வெளிநாடு செல்ல தடை கோரி 13 பொதுத்துறை வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மல்லையா வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன்தொகையை விட அதிகமாக வெளிநாடுகளில் ஏராளமான சொத்துக்கள் இருப்பதாகவும், கடந்த 2ம் தேதியே விஜய் மல்லையா வெளிநாடு சென்றுவிட்டார் என்றும் விசாரணையின் போது அரசு தலைமை வழக்குரைஞர் கூறினார்.

விசாரணையின் போது, பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது கூட, சில வங்கிகள் மீண்டும் மீண்டும் அவருக்கு கடன் அளித்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com