இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல்: கால்வாய் அமைக்கும்பணியை தடுத்து நிறுத்தியது!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் அங்கு இந்தியா மேற்கொண்டு வரும் பாசன கால்வாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல்: கால்வாய் அமைக்கும்பணியை தடுத்து நிறுத்தியது!

லே (ஜம்மு காஷ்மீர்): இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் அங்கு இந்தியா மேற்கொண்டு வரும் பாசன கால்வாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லேயில் இருந்து கிழக்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது டெம்சோக் செக்டார். இங்கு எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கிராமங்களில் பாசன கால்வாய் அமைக்கும் பணிகள்  நடைபெற்று வருகிறது. நேற்று (புதன்கிழமை) மதியம் இந்தப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீன மக்கள் ராணுவத்தினர் 55 பேர் பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்ததும் இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர்.

இது போன்ற திட்டப்  பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால் இருதரப்பு அனுமதிக்கு பிறகுதான் நடைபெறவேண்டும் என்று அவர்கள் கூறி உள்ளனர். ஆனால் இருநாடுகள் இடையில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, பாதுகாப்பு தொடர்பான  திட்டங்கள் ஏதேனும் முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே அது தொடர்பான கட்டுமான பணித்  தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று இந்திய ராணுவத் தரப்பில்  பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

பின்னர் இரு நாட்டு ராணுவ படை அணிகளும் தத்தமது பதாகைகளை ஏந்தியவாறு அங்கேயே எதிர்-எதிரே நின்றனர். சீன ராணுவ வீரர்கள் எவரும் இந்தியாவிற்குள் நீண்ட தூரம் வராத வண்ணம் இந்திய ராணுவ மற்றும் இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் 70 பேர் ஒன்றாக சேர்ந்து அரண் அமைத்து தடுத்தனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து உடனடியாக இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பிறகு சீன ராணுவம் தனது ஆக்கிரமிப்பு போக்கை கைவிட்டு, அந்தப் பகுதியில் இருந்து பின்வாங்கிச் சென்றதாக தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com