
மும்பை: மகாராஷ்டிராவின் நாசிக் அருகேயுள்ள மாலேகானில் 2008-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ள, பெண் துறவியான பிரக்யா சிங் தாகூருக்கு ஜாமீன் வழங்கி பாம்பே உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் அருகேயுள்ள சிறு கிராமம் மாலேகான். விசைத்தறிகள் நிறைந்து காணப்படும் இந்த ஊரில் இஸலாமியர்கள் எண்ணிக்கை அதிகம். இங்கே கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குண்டுவெடிப்பில் ஆறு பேர் மரணமடைந்தார்.
இந்தவழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த தேசிய புலனாய்வு ஆணையமானது, பெண் துறவியான பிரக்யா சிங் தாகூர் , முன்னாள் ராணுவ தளபதி பிரசாத் புரோகித் ஆகியோர் மீது குற்றம் சாட்டியது. அவர்கள் இருவரும் விசாரணைக்கு பிறகு 2009-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி இவர்கள் இருவரும் பாம்பே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் பெண் துறவியான பிரக்யா சிங் தாகூருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. இதற்காக அவர் ரூ.50000 மதிப்புள்ள பிணை உறுதிப் பத்திரம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 9 ஆண்டுகளில் அவர் பிணையில் வெளிவருவது இதுவே முதல் முறையாகும். அதே சமயம் மற்றொரு குற்றவாளியான முன்னாள் ராணுவ தளபதி பிரசாத் புரோகித் தாக்கல் செய்த மேல்முறையீட்டு ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.