கர்நாடக வருமான வரி சோதனைக்கும், குஜராத் தேர்தலுக்கும் தொடர்பில்லை: நாடாளுமன்றத்தில் ஜேட்லி விளக்கம்

கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனைக்கும், குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை
கர்நாடக வருமான வரி சோதனைக்கும், குஜராத் தேர்தலுக்கும் தொடர்பில்லை: நாடாளுமன்றத்தில் ஜேட்லி விளக்கம்

கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனைக்கும், குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்தார்.
குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி தங்கள் எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்களை பெங்களூரு அருகே விடுதியில் தங்கவைத்துள்ளது. அவர்கள் பாஜகவுக்கு சென்றுவிடாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை காங்கிரஸ் எடுத்தது. இந்நிலையில், எம்எல்ஏக்களை தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக மாநில எரிசக்தித்துறை அமைச்சர் சிவக்குமாருக்கு சொந்தமான 39 இடங்களில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் கட்சியினரின் அமளியால் மாநிலங்களவை தொடர்ந்து 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலுக்குப் பின் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, அருண் ஜேட்லி இரு அவைகளிலும் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கர்நாடக மாநில அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிச் சோதனை நடத்தியதையும், குஜராத் மாநிலங்களவைத் தேர்தலையும் தொடர்புபடுத்த வேண்டிய அவசியமில்லை. கர்நாடகத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள விடுதியில் சோதனை நடத்தப்படவில்லை. எனினும், அமைச்சர் வேண்டுமென்றே அந்த விடுதிக்குச் சென்றார். பின்னர் விசாரணைக்காகவே அவர் அங்கிருந்து அழைத்துவரப்பட்டார். மேலும், அங்கு வைத்து சில முக்கிய தகவல்கள் எழுதப்பட்ட காகிதங்களை அமைச்சர் கிழித்துள்ளார். அந்த காகிதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.
முன்னதாக, மாநிலங்களவை கூடியதும் கர்நாடக அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனை குறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களை குறிவைத்துதான், வருமான வரித் துறையினர் மூலம் சோதனை நடத்தியுள்ளனர் என்றார்.
மாநிலங்களவைத் தேர்தல் நியாயமாகவும், அச்சுறுத்தல் ஏதுமின்றியும், சுதந்திரமாகவும் நடத்தப்பட வேண்டும். ஆனால், குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல் முறையாக நடத்தப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் காங்கிரஸ் எம்எல்ஏக்களைக் கடத்த அனைத்து முயற்சிகளும் நடைபெறுகிறது. இது ஜனநாயக விரோதப் போக்காகும்.
இந்த வருமான வரிச் சோதனையை ஒரு மாதத்துக்கு முன்போ அல்லது மேலும் ஒரு மாதத்துக்குப் பிறகோ நடத்த முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் இந்த விவகாரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநில காங்கிரஸ் அமைச்சரைப் பழிவாங்கும் நோக்கில்தான் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு தனது சுயநலத்துக்காக பயன்படுத்துகிறது. இது ஜனநாயக மாண்புகளை சீர்குலைக்கும் செயலாகும்.
இப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களை நீங்கள் மிரட்டுகிறீர்கள். நாளை அது உங்களுக்கே திரும்ப வரும் என்று எச்சரிக்கிறேன் என்றார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அனந்த குமார், கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகத்தான் சோதனைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
குஜராத்தில் விரைவில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி. பதவியிடங்களுக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகி பாஜகவில் சில நாள்களுக்கு முன்பு இணைந்த பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் மீண்டும் களமிறங்குகிறார்.
மொத்தம் 182 எம்எல்ஏக்கள் உள்ள குஜராத் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 57 எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால், கடந்த சில நாள்களில் 6 பேர் கட்சியில் இருந்து விலகிவிட்டனர். இதில் பலர் பாஜகவில் ஐக்கியமாயினர். இதனால், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 51-ஆக குறைந்துவிட்டது.
அகமது படேல் வெற்றி பெற 44 எம்எல்ஏக்கள் அவரை தங்கள் முதல் தேர்வாக குறிப்பிட வேண்டும். காங்கிரஸின் இப்போதைய பலத்தில் இது எளிதானதுதான். ஆனால், மேலும் பல எம்எல்ஏக்களை பாஜக இழுத்துவிடும் என்ற காரணத்தில் 44 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூரு அருகேயுள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களை தங்கள் பக்கம் இழுத்து அகமது படேலைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com