100 தடவை பாதுகாப்பு விதிகளை மீறினார் ராகுல்: மக்களவையில் ராஜ்நாத் சிங் தகவல்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பு நடைமுறைகளை 100 தடவை மீறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் கார் மீது கல்வீச்சு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
ராகுல் காந்தியின் கார் மீது கல்வீச்சு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

காங்கிரஸ் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு


காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பு நடைமுறைகளை 100 தடவை மீறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார். இந்த விவகாரத்தால் ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை செவ்வாய்க்கிழமை கூடியதும் காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், அக்கட்சி எம்.பி.க்களும் அவையின் மையப் பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். அப்போது கார்கே பேசியதாவது:
குஜராத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்க்கச் சென்ற ராகுலின் கார் மீது கற்கள் வீசப்பட்டன. இது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய தாக்குதலாகும். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் கல் வீசுவதாகக் கூறப்படுகிறது. குஜராத்தில் எந்த காஷ்மீர் பயங்கரவாதி இருக்கிறார்? அல்லது பாஜக தொண்டர்கள் பயங்கரவாதிகளாக மாறிவிட்டார்களா? என்று கார்கே கேள்வி எழுப்பினார். அவர் இந்த விவகாரத்தை எழுப்பியபோது ராகுலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் அவையில் இல்லை. கார்கேவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் கூச்சல் எழுப்பினர். தொடர்ந்து அவர் மேலும் பேசியதாவது:
உரிய பாதுகாப்பை அளிக்க மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் தவறிவிட்டன. வெள்ள பாதிப்பு நேரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குஜராத்தில் இல்லை என்றும் அவர்கள் கர்நாடகத்தில் சிக்கியிருந்தனர் என்றும் நீங்கள் (பாஜக எம்.பி.க்கள்) கூறுகிறீர்கள். வெள்ள நேரத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எங்கே இருந்தார் என்பதையும், அவர் மீதும் கல்வீச்சு நடைபெற்றதா என்பதையும் பாஜக விளக்க வேண்டும்.
வீசப்பட்ட கல்லானது ராகுல் மீது தாக்கியிருந்தால் அவர் உயிரிழந்திருப்பார். அவரைக் கொல்ல முயற்சிகள் நடைபெற்றன. அவர் ஒரு தியாகியின் மகனாவார். எனவே நாங்கள் பயப்பட மாட்டோம். இந்தச் சம்பவத்துக்காக பாஜக மன்னிப்பு கோர வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கார்கே வலியுறுத்தினார்.
ராஜ்நாத் சிங் விளக்கம்: கார்கேவின் பேச்சுக்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: ராகுல் காந்தி ஒரு தேசியத் தலைவர். இந்த அவையின் கௌரவம் மிக்க உறுப்பினர் அவர். ராகுல் காந்தி விலைமதிக்க முடியாதவர். அவருக்கு குண்டு துளைக்காத காரும் ஜாமர் கருவியும் வழங்கப்பட்டுள்ளன.
குஜராத் சென்றிருந்தபோது ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து டயோட்டா ஃபார்ச்சூனர் காரில் பயணிப்பதற்கு அவர் தன் உதவியாளரிடம் ஒப்புக் கொண்டார். ஆனால், குண்டு துளைக்காத சிறப்பு வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்ற எஸ்பிஜி படையின் ஆலோசனையை அவர் கண்டுகொள்ளவில்லை. எனினும், டயோட்டா ஃபார்ச்சூனர் வாகனத்தையும் தனது பயிற்சி பெற்ற ஓட்டுநரைக் கொண்டு ஓட்டச் செய்த எஸ்பிஜி படை பாராட்டுக்குரியது.
எனினும், ராகுல் தனது பாதுகாப்பு விதிமுறைகளை மீறி காரில் இருந்து இறங்கினார். முன்கூட்டியே திட்டமிடப்படாத இடங்களில் அவர் வண்டியை நிறுத்தச் செய்தார். அவரது பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் 4,000 பேர் திரண்டிருந்தனர். சிலர் கருப்புக் கொடிகளுடன் வந்திருந்தனர். ராகுல் அந்த இடத்தை விட்டு விரைவாகச் சென்று விட்டார். தானேராவில் உள்ள லால் சௌக் பகுதியில் ஒரு நபர் கல்வீச்சில் ஈடுபட்டார். அந்தக் கல், காரின் பின்பக்க ஜன்னலைத் தாக்கியது. இதில் எஸ்பிஜி வீரர் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. கல் வீசிய நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாநில காவல்துறை கூடுதல் டிஜிபிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
குண்டு துளைக்காத காரை ராகுல் பயன்படுத்தியிருக்க வேண்டும். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் 121 திட்டமிட்ட மற்றும் திட்டமிடப்படாத சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். அவர் குண்டு துளைக்காத கார்களை 100 தடவை பயன்படுத்தவில்லை. இந்தப் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் அலுவலகங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டார். ஆனால் மிகவும் கடைசி நேரத்தில்தான் எஸ்பிஜி படைப்பிரிவினருக்கு தகவல் தெரிவிப்பார். இதனால் உரிய பாதுகாப்பு வழங்குவதில் அந்தப் படைப்பிரிவுக்கு பிரச்னைகள் ஏற்பட்டன.
கடந்த இரு ஆண்டுகளில் ராகுல் 6 வெளிநாட்டுப் பயணங்களை 72 நாட்களுக்கு மேற்கொண்டார். அந்தப் பயணங்களின்போது அவர் எஸ்பிஜி படைவீரர்களை தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை. இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எஸ்பிஜி சட்டத்தை மீறிய செயலாகும். இவ்வாறு இந்தியாவை விட்டு வெளியே செல்லும்போது எஸ்பிஜி படையினரை உடன் அழைத்துச் செல்லாததன் மூலம் அவர் எதை மறைக்க முயற்சிக்கிறார் என்பதை அறிய இந்த நாடும், அவையும் விரும்புகின்றன ராஜ்நாத் சிங்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் வரை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய பேசுகையில், ராகுல் காந்தியின் கார் மீது நடைபெற்ற தாக்குதலை அவை கண்டிக்க வேண்டும் என்றார்.
அவை மீண்டும் கூடியபோது ராஜ்நாத் சிங் அவைக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்தகுமார் இந்த விவகாரம் குறித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து இதர அலுவல்களை மேற்கொள்ள அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் முயற்சித்தார். எனினும், காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com