ஆதார் இல்லை என்பதற்காக ஆர்டிஐயின் கீழ் தகவல் அளிக்க மறுக்கக் கூடாது: சிஐசி

தகவல் அறியும் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தகவல் கோருபவரிடம் ஆதார் இல்லை என்பதற்காக தகவல் அளிக்க மறுப்பது விதிமீறல் என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

தகவல் அறியும் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தகவல் கோருபவரிடம் ஆதார் இல்லை என்பதற்காக தகவல் அளிக்க மறுப்பது விதிமீறல் என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனத்தின் (ஹெச்யுடிசிஓ) ஆர்டிஐ முன்னாள் அதிகாரி டி.கே.குப்தா, அந்த நிறுவனம் தொடர்பாக சில தகவல்களை கோரியவரிடம் ஆதார் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி தகவல் தர மறுத்ததற்காக அவருக்கு சிஐசி அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து சிஐசி ஆணையர் ஸ்ரீதர் ஆசார்யலு, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ஹெச்யுடிசிஓ தலைமை மேலாண் இயக்குநரின் அதிகாரப்பூர்வ இல்லத்தைப் புதுப்பிப்பதற்கு ஆன செலவும், அந்த இல்லத்தின் மின்கட்டண ரசீதுகள் உள்ளிட்ட விவரங்களை கோரி விஷ்வாஸ் பம்புர்கர் என்பவர் ஆர்டிஐயின் கீழ் கடந்த ஆண்டு விண்ணப்பித்தார்.
அதற்கு பதிலளித்த அப்போதைய ஆர்டிஐ அதிகாரி டி.கே.குப்தா, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஒன்றை முகவரி ஆவணமாக சமர்ப்பிக்குமாறு பம்புர்கருக்கு கடிதம் அனுப்பினார். 
ஆர்டிஐயின் கீழ் தகவல் கோருபவர்களுக்கு 30 தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். அதை அவர் செய்யத் தவறிவிட்டார்.
இதுதொடர்பாக பம்புர்கர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு, டி.கே.குப்தாவுக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு அடுத்து அந்தப் பொறுப்புக்கு வந்த எஸ்.கே.குப்தாவும் ஆர்டிஐ மனுக்களை அவர் கூறிய காரணங்களையே கூறி தகவல் எதுவும் தர மறுத்தது துரதிருஷ்டவசமானதாகும்.
அவ்வாறு செய்வது விதிமீறல். ஆதார் ஆவணம் அளிக்கவில்லை என்பதற்காக தகவல் தர மறுக்கக் கூடாது என்றார் ஸ்ரீதர் ஆசார்யலு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com