

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தெரிவித்த கருத்தை ராகுல் காந்தி சுட்டுரையில் (டுவிட்டர்) திரித்துப் பதிவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் பாஜக எம்.பி. பூபேந்திர யாதவ் உரிமைமீறல் நோட்டீஸ் அளித்தார்.
இந்த உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து பரிசீலித்து வருவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வியாழக்கிழமை மாநிலங்களவை கூடியதும், அரசமைப்புச் சட்டம் குறித்தும், மதச்சார்பின்மை குறித்தும் மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியபோது, இந்த விவகாரம் குறித்து மக்களவையில் ஹெக்டே விளக்கமளித்து மன்னிப்புக் கேட்டுவிட்டார் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் விஜய் கோயல் விளக்கமளித்தார்.
எனினும், காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து, ஹெக்டே பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தினர்.
இதனிடையே, பாஜக எம்.பி. பூபேந்திர யாதவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார். மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் அளிக்கப்பட்ட அந்த நோட்டீஸில், 'மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தெரிவித்த கருத்தை ராகுல் காந்தி உள்நோக்கத்துடன், திட்டமிட்டு திரித்து சுட்டுரையில் வெளியிட்டுள்ளார். அருண் ஜேட்லியின் பெயரைக் கெடுக்கும் வகையில் இந்த செயலில் ராகுல் ஈடுபட்டுள்ளார்' என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் தகவல் தெரிவித்த வெங்கய்ய நாயுடு, 'பூபேந்திர யாதவ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸ் எனது பரிசீலனையில் உள்ளது. அவையில் நடைபெறும் விவாதங்கள் குறித்து அவைக்கு வெளியே விமர்சிப்பது அவை நடவடிக்கைகளுக்கும், நமது ஜனநாயக நடைமுறைக்கும் உகந்ததல்ல' என்றார்.
முன்னதாக, குஜராத் தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, பிரதமர் மோடி விமர்சித்தது குறித்து மக்களவையில் அருண் ஜேட்லி விளக்கமளித்தார்.
இது தொடர்பாக சுட்டுரையில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், 'பிரதமர் மோடி என்ன பேச வேண்டும் என்று நினைத்தாரோ அதனைப் பேசவில்லை. எதைப் பேசினாரோ, அதனைத்தான் பேச வேண்டுமென்றே அவர் நினைக்கவில்லை என்று தெளிவுபடுத்திய ஜேட்லிக்கு நன்றி' என்று கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.