ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஆதாரங்களை சசிகலா தாக்கல் செய்வார்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தன்னிடம் உள்ள ஆதாரங்களை சசிகலா தாக்கல் செய்வார் என்று சென்னை ஆர்.கே.நகர்


ஜன. 31 வரை மெளன விரதம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தன்னிடம் உள்ள ஆதாரங்களை சசிகலா தாக்கல் செய்வார் என்று சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் வியாழக்கிழமை சசிகலாவைச் சந்தித்தப் பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, சசிகலாவிடம் ஆசீர்வாதம் பெற்றேன். ஜெயலலிதாவின் முதல் நினைவு நாளான டிச.5 முதல் மெளன விரதம் தொடங்கியுள்ள சசிகலா, அடுத்த ஆண்டு ஜன.31-ஆம் தேதி வரை அதைத் தொடர்கிறார்.
எனவே, நாங்கள் கூறியதை அமைதியாகக் கேட்டுக் கொண்ட சசிகலா, தலையாட்டி ஒப்புதல் தெரிவித்தார். ஒருசில விஷயங்களை எழுதிக் காட்டினார். அடுத்த 15 நாள்களில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சசிகலாவிடம் சில திட்டங்களைத் தெரிவித்தபோது, அதற்கு அவர் தலையாட்டி இசைவு தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடமிருந்து சசிகலாவுக்கு அழைப்பாணை வந்துள்ளது. தன்னிடம் இருக்கும் ஆதாரங்களுடன், தனது வாக்குமூலத்தை சசிகலா எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்வார்.
ஒருவேளை நேரில் ஆஜராக உத்தரவிட்டால், சசிகலா ஆஜராவார். அதேபோல, எனக்கும் அழைப்பாணை வந்துள்ளது. எனது வாக்குமூலத்தையும் ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக தாக்கல் செய்வேன். ஆறுமுகசாமி ஆணையத்துக்கு முழு ஆதரவு அளிப்பேன்.
ஜெயலலிதா தொடர்பான காணொலிக் காட்சியை சசிகலாதான் பதிவு செய்திருந்தார். அதை சசிகலா என்னிடம் கொடுத்திருந்தார். அந்த காணொலிக் காட்சியை வெற்றிவேலிடம் அளித்திருந்தேன். எங்களையும் மீறி வெற்றிவேல் ஊடகங்களுக்கு வெளியிட்டுவிட்டாரே தவிர, அதை நான் வெளியிடவில்லை.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. கட்சியில் இருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது.
எனவே, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கட்சியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. பொதுச் செயலாளரும், தொண்டர்களும் விரும்பும் வரை நான் கட்சியில் நீடிப்பேன். எம்ஜிஆர் காலத்தில் இருந்து ஜெயலலிதாவுடன் இருந்தோம். ஜெயலலிதாதான் என்னை அரசியலுக்குக் கொண்டுவந்தார்.
சசிகலா விரும்பினால் கட்சியில் இருந்து விலகி நிற்பேன். மத்திய அரசின் மீது உள்ள பயத்தில் எங்களிடம் இருந்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பிரிந்து உள்ளனர். உண்மையான அதிமுக யார் என்பதை மக்கள் உணர்த்தி விட்டார்கள்.
சின்னம் என்பது ஒரு பொருள். தொண்டர்கள் எங்கு உள்ளனரோ, அவர்களால்தான் கட்சிக்கு உயிரோட்டம் தர முடியும். பொறுப்பான, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக நடந்து கொள்ளத் தவறிவிட்டதால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தோற்றுவிட்டது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தை கணக்குப் போட்டு மெத்தனமாக தேர்தல் பிரசாரம் செய்ததால், திமுக வெற்றி பெற முடியவில்லை.
வருமான வரித் துறை மீண்டும் சோதனை நடத்துகிறதா? என்பது தெரியவில்லை. ஏற்கெனவே வருமானவரித் துறை பூட்டி வைத்திருந்த சில அறைகளை தற்போது திறந்து சோதனையிடுவதாகக் கேள்விப்பட்டேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...