ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

நீதித் துறையை நகைப்புக்கு உரியதாக்கி விட்டார் கர்ணன்: உச்ச நீதிமன்றம் சாடல்

ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனின் தவறான செயல்பாடுகளால் நீதித் துறை நகைப்புக்கு உரியதாக மாறிப்போனது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொறுப்பற்ற நடவடிக்கைகளை

News image
Updated On :5 ஜூலை 2017, 8:44 pm

DIN

ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனின் தவறான செயல்பாடுகளால் நீதித் துறை நகைப்புக்கு உரியதாக மாறிப்போனது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொறுப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.
கர்ணனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின் முழு விவரம் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவிக் காலத்தின்போது சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்த கர்ணன், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அவற்றில் உச்சமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவர் சிறைத் தண்டனை விதித்தது பெரும் பரபரப்புக்கு வித்திட்டது.
இதன் தொடர்ச்சியாக அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து கர்ணன் தலைமறைவானார். இதனிடையே, கோவை அருகே தலைமறைவாக இருந்த கர்ணனை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
கொல்கத்தாவுக்கு அழைத்து வரப்பட்ட அவர், அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு எதிராகப் பிறப்பித்த தீர்ப்பின் விரிவான விவரங்கள் இணையதளப் பக்கத்தில் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டன. 80 பக்கங்கள் கொண்ட அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சக நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கர்ணன் முன்வைத்தார். முறைப்படி இந்த விவகாரத்தை அணுகாமல் தன்னிச்சையாக அவர் செயல்பட்டார். இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகும் பொறுப்பற்ற வகையில் கருத்துகளைத் தெரிவிப்பதை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை.
நீதிபதிகள் மீது அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் எதற்கும் முறையான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. வெறும் அவதூறு பரப்பும் நோக்கிலேயே அவை இருந்தன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு தனது பதவியையும், ஜாதிய அடையாளத்தையும் கர்ணன் பயன்படுத்திக் கொண்டதை உணர முடிந்தது.
அனைத்திலும் உச்சமாக, கர்ணன் மீதான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவே அவர் உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாகவே அவருக்கு மனநலப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.
அதன்படி அவரது வீட்டுக்கு மருத்துவர் குழு சென்றது. ஆனால், பரிசோதனைக்கு கர்ணன் ஒத்துழைக்கவில்லை. வெளிப்படையாகப் பார்க்கும்போது அவருக்கு மனநலக் குறைபாடு இருந்ததாக எந்தவிதமான அறிக்கையையும் மருத்துவர்கள் அளிக்கவில்லை. எனவே, மனதளவிலும், உடலளவிலும் கர்ணன் ஆரோக்கியமாக உள்ளார் என்பதை உணரமுடிகிறது.
தொடர்ந்து நீதித் துறையை கேலிப் பொருளாக்கும் வகையில் அவர் செயல்பட்டது துரதிருஷ்டவசமானது. நீதிபதி ஒருவரே இவ்வாறு செயல்படுகிறார் என்பதால் இந்த விவகாரம் உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தன.
அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்த பிறகே அவருக்கு தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.