வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ஜிஎஸ்டி உண்டா? விரிவான விளக்கம்

வாடகை மூலம் கிடைக்கும் வருமானம் ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே சமயம், வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ஜிஎஸ்டி உண்டா? விரிவான விளக்கம்


புது தில்லி: வாடகை மூலம் கிடைக்கும் வருமானம் ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே சமயம், வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுமைக்குமான ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி, ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் அடிப்படையில் வீடு, கடை, அலுவலகக் கட்டடம் போன்றவற்றை வாடகைக்கு விட்டு அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்குக் குறைவான வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.  அதே போல, வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கட்டடங்களை வணிக ரீதியான நிறுவனங்களுக்கு வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ விடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டுவோர் நிச்சயம் ஜிஎஸ்டியின் கீழ் வரி செலுத்த வேண்டியது அவசியம் என்று வருவாய்த் துறை செயலாளர் ஹாஸ்முக் அதியா தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துவோர், தாங்களாக முன் வந்து ஜிஎஸ்டி அமைப்பில் (GSTN) தங்கள் பெயரை பதிவு செய்து, வரியை செலுத்த வேண்டும்.

இதுபோன்று சுங்கம், சேவை வரி, மதிப்புக்கூட்டப்பட்ட வரி செலுத்தியவர்களின் பட்டியல்கள் ஒன்றிணைக்கப்பட்டு சுமார் 69.32 லட்சம் பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 69.32 லட்சம் பேரில் 38.51 லட்சம் பேர் தங்களது முழு விவரத்தையும் பதிவு செய்து அதற்கான சான்றுகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மீதமுள்ள 30.8 லட்சம் வரி செலுத்துவோருக்கு எஸ்எம்எஸ் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் ஜிஎஸ்டிஎன்-ல் இணையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம், ஜூன் 25ம் தேதி முதல் ஜிஎஸ்டிஎன்-ல் புதிதாக 4.5 லட்சம் பேர் இணைந்துள்ளனர். பதிவு செய்து கொண்ட வணிகர்களும், வியாபாரிகளும் தங்களது பதிவை ஆன்லைன் மூலமாகவே ரத்து செய்து கொள்ளவும் வசதி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாய்க்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு நன்மை தரும் என்றே கருதலாம். ஜிஎஸ்டி வரி விதிப்பில் வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாயை இணைத்தால் அதனால், வாடகைக்கு குடியிருப்போர்தான் பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கலாம். எப்படியானாலும் ஜிஎஸ்டியால் நிச்சயம் வீட்டு வாடகை உயராது என்று மட்டும் மக்கள் நிம்மதி கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com