

மத்திய அரசுக்கு புதிய அட்டர்னி ஜெனரலை நியமிப்பது தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மத்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் பாஜக ஆட்சி அமைந்தது. அதைத் தொடர்ந்து அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோத்தகி 2014 ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் வரும் 2019 ஜூன் வரை உள்ளது. எனினும், தம்மை பணியில் இருந்து விடுவிக்குமாறும் கோரி மத்திய அரசுக்கு முகுல் ரோத்தகி கோரிக்கை வைத்துள்ளார். அட்டர்னி ஜெனரல் பதவியில் இருந்து விலகியதும், தனி வழக்குரைஞராகப் பணிபுரிய அவர் விரும்புவதாக தகவலல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தனிப்பட்ட காரணங்களாக, தம்மை பணியில் இருந்து விடுவிக்குமாறு அட்டர்னி ஜெனரல் விடுத்துள்ள கோரிக்கையை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
அதை நாங்கள் மதிக்கிறோம். ரோத்தகி ஒரு மிகச்சிறந்த அரசு வழக்குரைஞராவார். அவர் மிகச்சிறந்த சேவையாற்றியுள்ளார். அடுத்த அட்டர்னி ஜெனரல் யார் என்பதை மத்திய அரசு உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.
உயர்நிலை நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான தேசிய நீதித்துறை நியமன ஆணையம் உள்ளிட்ட பல்வேறு சிக்கலான வழக்குகளில் மத்திய அரசு சார்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டுள்ளார். குஜராத்தில் கடந்த 2002-இல் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் அந்த மாநில அரசு சார்பில் அவர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார். அண்மையில், அவர் முத்தலாக் வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட உதவிகளை அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.