அமெரிக்காவுடனான நல்லுறவை மேம்படுத்துவதே நோக்கம்: பிரதமர் மோடி
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்வதே தனது அரசு முறைப் பயணத்தின் நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்வதே தனது அரசு முறைப் பயணத்தின் நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்புடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பான கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நான்கு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி செல்லவுள்ளார். அவரது பயணத் திட்டம் சனிக்கிழமை (ஜூன் 24) தொடங்குகிறது. தில்லியில் இருந்து நேராக போர்ச்சுகல் செல்லும் அவர், அந்நாட்டு பிரதமர் அந்தோனியா கோஸ்டாவைச் சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி அங்கிருந்து அமெரிக்கா செல்லும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பயணத்தின் முக்கிய நிகழ்வாக அதிபர் டிரம்ப்பை அவர் சந்திக்கவுள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி அவரைச் சந்திப்பது இதுவே முதன்முறையாகும். எனவே, சர்வதேச அரங்கில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர், அமைச்சர்கள் மட்டுமன்றி இம்முறை அந்நாட்டு தொழிலதிபர்கள், பெரு நிறுவன அதிபர்களையும் மோடி சந்திக்கிறார். இந்தியாவில் தொழில் முதலீடு செய்யுமாறு அப்போது அவர்களுக்கு மோடி அழைப்பு விடுப்பார் எனத் தெரிகிறது.
அதுமட்டுமன்றி, அமெரிக்க வாழ் இந்தியர்களையும் சந்தித்துப் பேச பிரதமர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தனது பயணத்தின் நோக்கங்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவர் வெள்ளிக்கிழமை சில பதிவுகளை வெளியிட்டார். அதில் மோடி குறிப்பிட்டிருப்பதாவது:
சுற்றுப் பயணம் தொடர்பாக அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் அண்மையில் உரையாடினேன். எங்கள் இருவருக்கும் இடையேயான அந்த உரையாடல், இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.
இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமையும். அமெரிக்க அதிபருடன் எனது கருத்துகளை பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்வதற்கான அடித்தளத்தை அமைப்பதே எனது பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அந்தப் பதிவுகளின் வாயிலாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...