நான் எந்த கட்சியையும் சார்ந்தவனல்ல: ராம்நாத் கோவிந்த்

"நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனல்ல; குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது' என்று பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நான் எந்த கட்சியையும் சார்ந்தவனல்ல: ராம்நாத் கோவிந்த்

"நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனல்ல; குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது' என்று பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

தில்லியில் வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தபிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் ஒரு மாநிலத்தின் ஆளுநராகப் பதவியேற்றபோதே, எந்தக் கட்சியையும் சாராதவனாகிவிட்டேன். குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதனை எதிர்காலத்தில் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்பேன். குடியரசுத் தலைவர் பதவியின் கண்ணியத்தைக் காப்பதன் மூலம் எதனை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.
அனைவரது ஆதரவும் வேண்டும்: குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் அனைவரும் எனக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முன்பு பல தலைசிறந்த தலைவர்கள் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்துள்ளனர். இப்பதவி சிறந்த பாரம்பரியத்தை உடையது.
நமது அரசமைப்புச் சட்டம்தான் நாட்டுக்குத் தலைமையாகவும், முதன்மையானதாகவும் இருக்கிறது. அதன் மேன்மையைப் பேணுவதும் மிகவும் முக்கியமானதாகும்.
புதிய இந்தியா உருவாகும்: நமது நாடு அனைத்து நிலைகளிலும் முன்னேறும் வகையில் எனது கடமையைச் சிறப்பாக மேற்கொள்வேன். நாட்டின் இளைஞர்களின் லட்சியக் கனவுகள் நிறைவேறும் வகையிலும், நவீன கல்வி வசதி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பணியாற்றுவேன்.
வரும் 2022-ஆம் ஆண்டு நமது 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது புதிய இந்தியாவை உருவாக்கும் நமது கனவு நனவாகும்.
மிகச்சிறந்த ஜனநாயகம்: குடியரசுத் தலைவர் முப்படைகளுக்கும் தலைவராவார். நமது நாட்டின் எல்லையைக் காக்கும் பணிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, மிகச்சிறந்த ஜனநாயக நாடாகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் எனக்கு நேரில் வந்து ஆதரவளித்த அனைத்துக் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ராம்நாத் கோவிந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com