ரயில்வே துறைக்கு பயணிகள் பிரிவில் ஆண்டுதோறும் இழப்பு: மக்களவையில் அரசு தகவல்
இந்திய ரயில்வே துறைக்கு பயணிகள் பிரிவில் ஆண்டுதோறும் இழப்பு ஏற்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்திய ரயில்வே துறைக்கு பயணிகள் பிரிவில் ஆண்டுதோறும் இழப்பு ஏற்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே துறை இணையமைச்சர் ராஜேன் கோஹைன், மக்களவையில் புதன்கிழமை கூறியதாவது:
ரயில்வே துறைக்கு பயணிகள் பிரிவில் கடந்த 2014-15ஆம் நிதியாண்டில் ரூ.33,491 கோடியும், 2015-16ஆம் நிதியாண்டில் 35,918 கோடியும் இழப்பு ஏற்பட்டன. இதில், பயணிகளுக்கான கட்டணங்கள் என்ற அடிப்படையில் எவ்வளவு இழப்பு என்பது தனியாக மதிப்பிடப்படவில்லை.
இழப்பைக் குறைத்து, லாபம் ஈட்டுவதற்காக பல்வேறு மாற்று வழிகளை ரயில்வே நிர்வாகம் உருவாக்கி வருகிறது. அவை ரயில் பயணக் கட்டணத்தை மாற்றியமைப்பது (உயர்த்துவது) தொடர்புடையதாகும். லாபத்தை அதிகரிப்பதற்காக ஹம்சஃபர் மற்றும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் போன்ற புதிய ரயில்களில் மாறுபட்ட கட்டண விகிதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரயில்களிலும் இதுபோன்ற கட்டண விகிதங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 9 முதல் அறிமுகம் செய்யப்பட்டன.
இது தவிர, பண்டிகைக் காலங்கள் உள்ளிட்ட காலகட்டங்களில் ரயில்களின் தேவை அதிகரிப்பதைச் சமாளிப்பதற்காக சுவிதா மற்றும் சிறப்பு ரயில்கள் சிறப்புக் கட்டணங்களின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
ரயில்களில் உணவு வகைகள்:
இதனிடையே, ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் தரக்குறைவாக இருப்பது குறித்த கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, மக்களவையில் அளித்த பதில் வருமாறு: ரயில்வே துறைக்குச் சொந்தமான ஐஆர்சிடிசி நிறுவனம், ரயில் பயணிகளுக்குத் தேவையான உணவுகளைச் சமைத்து வழங்கும். அந்த உணவு வகைகளை பயணிகளுக்கு வழங்கும் பொறுப்பு சிறந்த விருந்தோம்பல் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.
நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களிலும் நியாயமான விலையில் சுத்தமான குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது என்று அவர் பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...