இந்தியா-ரஷியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து 5-ஆவது தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கவுள்ளன. இதுதொடர்பான விரிவான வடிவமைப்புத் திட்டத்தை இறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் விரைவில் கையெழுத்திடவுள்ளன.
இந்திய-ரஷிய அரசுகளுக்கு இடையே கடந்த 2007-ஆம் ஆண்டில் 5-ஆவது தலைமுறை போர் விமானத்தைத் தயாரிப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த விமானத்தின் முதல்கட்ட வடிமைப்புத் திட்டத்துக்கு, இந்தியா கடந்த 2010-ஆம் ஆண்டில் சுமார் ரூ.1,890 கோடி அளிக்க ஒப்புக் கொண்டது. எனினும், அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பல்வேறு காரணங்களுக்காக முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இதனிடையே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், இந்தத் திட்டத்துக்கு தனது ஒப்புதலை அளித்தார். இதைத் தொடர்ந்து, 5-ஆவது தலைமுறை போர் விமானம் தயாரிப்பு தொடர்பாக இந்தியாவும், ரஷியாவும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கின. அப்போது இந்தியத் தரப்பில், 5-ஆவது தலைமுறை போர் விமானத்தின் முக்கிய அம்சங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் எதிர்காலத்தில் அந்த விமானத்தை இந்தியாவால் மேம்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், 5-ஆவது தலைமுறை போர் விமான வடிவமைப்பு தொடர்பான ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான அனைத்து பணிகளும் ஏறத்தாழ முடிந்துவிட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக ரஷிய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்த இந்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விரிவான வடிவமைப்புத் தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்பட இருக்கிறது; இது மிகப்பெரிய மைல்கல்லாகும். நிகழாண்டின் 2-ஆவது பாதியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம். இந்த விமானத் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரையில், இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் சம உரிமைகள் உண்டு' என்றார்.