டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பலவீனமாகும் ஆம் ஆத்மி கட்சியின் அஸ்திவாரம்!

இந்தியாவில் முக்கிய அரசியல் கட்சிகளை ஆச்சரியத்திலும், வியப்பிலும் ஆழ்த்தி வேகமாக வளர்ந்த ஆம் ஆத்மி கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பூசல்களும், அக்கட்சியின் தலைமை மீது மூத்த தலைவர்கள்

News image
Updated On :7 மே 2017, 7:59 pm

DIN

இந்தியாவில் முக்கிய அரசியல் கட்சிகளை ஆச்சரியத்திலும், வியப்பிலும் ஆழ்த்தி வேகமாக வளர்ந்த ஆம் ஆத்மி கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பூசல்களும், அக்கட்சியின் தலைமை மீது மூத்த தலைவர்கள் கொண்டுள்ள அதிருப்தியும் அதன் அஸ்திவாரத்தை பலவீனமடையச் செய்வது போல உள்ளன.
தில்லியில் 2011-ஆம் ஆண்டில் அண்ணா ஹசாரே தலைமையிலான ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்து விலகி, ஆம் ஆத்மி கட்சியை அரவிந்த் கேஜரிவால் நிறுவினார். அவருக்கு உறுதுணையாக சமூக ஆர்வலர்கள் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண், அவரது தந்தை சாந்தி பூஷண், குமார் விஷ்வாஸ், ஷாஜியா இல்மி போன்றோர் இருந்தனர்.
அந்தக் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார அமைப்பான அரசியல் விவகாரங்கள் குழுவில் கோபால் ராய், குமார் விஷ்வாஸ், பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ், சஞ்சய் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
ஆம் ஆத்மி கட்சி வெற்றி: 2013-இல் தில்லி தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, முக்கிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவற்றுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது என்றால் மிகையல்ல. அந்தத் தேர்தலில் தில்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 28 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. எனினும், காங்கிரஸ் ஆதரவுடன் சிறுபான்மை அரசை அக்கட்சி அமைத்தது. அதைத் தொடர்ந்து, 49 நாள்கள் மட்டுமே ஆட்சியில் நீடித்தது.
தில்லி சட்டப்பேரவையில் ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தடுத்துவிட்டதாகக் கூறி தனது முதல்வர் பதவியை அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தார்.
'ஆட்சி அதிகாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்' என்று கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு முதல் தேர்தலிலேயே 28 இடங்களை வெற்றிப் பரிசாக அளித்த தில்லி மக்களுக்கு அவரது ராஜிநாமா முடிவு ஏமாற்றத்தை அளித்தது.
மக்களவைத் தேர்தல் பாடம்: இந்நிலையில், 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 434 இடங்களில் வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி நிறுத்தியது. ஆனால், அந்தத் தேர்தலில் 414 இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். மேலும், மக்களவைத் தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை. ஆனாலும், ஆறுதலாக பஞ்சாப் மாநிலத்தில் அந்தக் கட்சிக்கு நான்கு இடங்கள் கிடைத்தன. இதையடுத்து, 'தில்லியில் 49 நாள் ஆட்சிக்குப் பிறகு பதவியை ராஜிநாமா செய்தது தவறு. மக்களவைத் தேர்தல் முடிவு மூலம் பாடம் கற்றுக் கொண்டோம். இனி அதுபோன்ற தவறை செய்ய மாட்டோம்' என தில்லி மக்களிடம் அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்தார்.
இந்நிலையில், 2015, பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தது. அதன் பிறகுதான் அக்கட்சியில் உள்கட்சிப் பூசல்கள் தொடங்கின.
தலைவர்கள் அதிருப்தி: ஆம் ஆத்மி கட்சியின் நிதி விவரம், ஆட்சி நிர்வாகம் ஆகியவை குறித்து கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் கேள்வி எழுப்பி அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் கேஜரிவால் கட்சியில் இருந்து நீக்கினார். மேலும், ஷாஜியா இல்மி உள்ளிட்ட மேலும் சிலர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறினர். இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியின் மூளையாகச் செயல்பட்ட யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் 'ஸ்வராஜ் இந்தியா' என்ற இயக்கத்தைத் தொடங்கி பின்னர் அதை அரசியல் கட்சியாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரின் நடவடிக்கைகளை ஸ்வராஜ் இந்தியா கட்சி பகிரங்கமாக விமர்சித்து வருகிறது.
தொடர் தோல்விகள்: இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் முதல் முறையாக பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. தில்லி ரஜௌரி கார்டன் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் டெபாசிட்டை இழந்தார். தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கு கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற தேர்தலிலும் அக்கட்சி தோல்வியடைந்தது.
இதையடுத்து, தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை மீது முதல்வர் கேஜரிவால் சந்தேகம் எழுப்பினார். ஆனால், 'அதுமட்டுமே காரணமல்ல' என அக்கட்சியின் மூத்த தலைவரான குமார் விஷ்வாஸ் கூறிய கருத்தை கேஜரிவால் ஏற்கவில்லை. இந்நிலையில், குமார் விஷ்வாஸின் நெருக்கமான ஆதரவாளர்களில் ஒருவரும், தில்லி நீர்வளத் துறை அமைச்சருமான கபில் மிஸ்ரா தில்லி அமைச்சரவையில் இருந்து சனிக்கிழமை திடீரென நீக்கப்பட்டார்.
பலவீனத்துக்கு காரணம்: அதே சமயம், குமார் விஷ்வாஸை 'பாஜக - ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஏஜெண்ட்' என விமர்சித்த எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனால், முதல்வர் கேஜரிவால் மீது குமார் விஷ்வாஸும் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், கபில் மிஸ்ரா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீதும் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீதும் ஊழல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதையடுத்து, கட்சி சந்தித்து வரும் தேர்தல் தோல்வி, உள்கட்சிக் குழப்பங்கள், மூத்த தலைவர்கள் நீக்கம் போன்றவை ஆம் ஆத்மி கட்சியின் அஸ்திவாரம் பலவீனம் அடைந்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.