காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததால் சமாஜவாதி பலவீனமாகிவிட்டது

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால்தான் உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி பலவீனமாகிவிட்டது என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.
காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததால் சமாஜவாதி பலவீனமாகிவிட்டது

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால்தான் உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி பலவீனமாகிவிட்டது என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் முலாயம் சிங்கை ஒதுக்கிவிட்டு, கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அவரது மகன் அகிலேஷ் யாதவ், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், இக்கூட்டணி தேர்தலில் படுதோல்வியடைந்தது. இதனால், சமாஜவாதிக் கட்சி ஆட்சியை இழந்தது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டம் ஜுனேசா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தியாகி தர்மேந்திர யாதவ் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற முலாயம் சிங் யாதவ் கூறியதாவது:
காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வேண்டாமென்று அகிலேஷ் யாதவுக்கு அறிவுரை கூறினேன். ஆனால், அவர் அதனை ஏற்கவில்லை. தேர்தலில் சமாஜவாதி கட்சி தோல்வியடைந்ததற்கு மக்கள் காரணமல்ல. கட்சிதான் காரணம். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்ததால்தான் சமாஜவாதி கட்சி பலவீனமாகிவிட்டது. எனது அரசியல் வாழ்க்கையைக் கெடுத்தது காங்கிரஸ் கட்சிதான் என்றார் அவர்.
'உங்கள் தம்பி சிவபால் யாதவ் தனிக் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளாரே?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, 'இப்போதைய சூழ்நிலையில் சமாஜவாதிக் கட்சியை வலுப்படுத்த வேண்டியது அவசியம்' என்று முலாயம் சிங் யாதவ் பதிலளித்தார்.
தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்துப் பேசிய அவர், 'கருப்புப் பணத்தை மீட்டு மக்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.15 லட்சம் செலுத்துவதாக பொய்யான வாக்குறுதி அளித்து மோடி ஆட்சியைப் பிடித்துள்ளார். பொய் பேசுவதில் மோடி வல்லவர்' என்றார்.
முன்னதாக, தேர்தல் தோல்விக்கு அகிலேஷ் யாதவ்தான் காரணம் என்று முலாயம் கூறியிருந்தார். இப்போது, காங்கிரஸ் கட்சியை அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com