டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மனைவியின் அடிப்படை உரிமைகளை மீறி எந்த முஸ்லிமும் விவாகரத்து செய்ய முடியாது: அலாகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் தன் மனைவியின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அவரை விவாகரத்து செய்ய முடியாது என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம்

News image
Updated On :9 மே 2017, 8:37 pm

DIN

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் தன் மனைவியின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அவரை விவாகரத்து செய்ய முடியாது என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆக்கில் ஜமீல் என்பவர் தன் மனைவியை முத்தலாக் நடைமுறை மூலம் விவாகரத்து செய்தார். இதை எதிர்த்து அவரது மனைவி, ஆக்ரா நீதிமன்றத்தில் வரதட்சிணைத் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற ஆக்ரா நீதிமன்றம், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆக்கில் ஜமீலுக்கு சம்மன் அனுப்பியது.
இந்த உத்தரவை எதிர்த்து அவர் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில் "முத்தலாக் முறையில் விவாகரத்து செய்த பிறகு சில நாள்கள் கழித்து என் மீது ஆக்ரா நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் மீது அந்த நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் செல்லாது. அதை ரத்து செய்ய வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆக்கில் ஜமீலின் மனு, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யபிரகாஷ் கேசர்வானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதி கடந்த மாதம் 19ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
"எங்கு பெண்கள் வணங்கப்படுகிறார்களோ அங்கு கடவுளர்கள் வசிக்கின்றனர்' என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு செய்யுள் கூறுகிறது. முஸ்லிம் பெண்கள் உள்பட அனைத்து குடிமக்களுக்கும் அரசியல்சாசனம் உறுதியளித்துள்ளபடி அடிப்படை உரிமைகள் உள்ளன. அவற்றை தனிச்சட்டம் (முஸ்லிம் தனிச்சட்டம்) என்ற போர்வையில் யாரும் மீற முடியாது. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் தன் மனைவியின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அவரை விவாகரத்து செய்ய முடியாது.
தனிச்சட்டம் என்பது சட்டத்தின் அதிகாரத்தின்கீழ் செயல்படுகிறது. அது அரசியல்சாசன வரம்புக்கு உட்பட்டது. தனிச்சட்டமானது மதத்தின் வரம்புக்கு உட்பட்டது அல்ல. தனிச்சட்டத்தின் இடத்தை சட்டத்தால் எப்போதும் எடுத்துக் கொள்ள முடியும்.
எனவே, இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு (கணவர்) ஆக்ரா நீதிமன்றம் சம்மன் அனுப்பிய உத்தரவில் உயர் நீதிமன்றம் தலையிட எந்த அவசியமும் இல்லை என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார். மனுதாரரின் மனுவை அவர் தள்ளுபடி செய்தார்.
முத்தலாக் விவாகரத்து நடைமுறை தொடர்பாக நாடு முழுவதும் பெரிய அளவில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், மேற்கண்ட தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இதனிடையே, முத்தலாக் நடைமுறையின் அரசில்சாசன ரீதியாக செல்லுபடியாகும் தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் வரும் 11-ஆம் தேதி முதல் விசாரணை நடத்த உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.