டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உச்ச நீதிமன்றம் விதித்த தண்டனையை திரும்ப பெற வலியுறுத்தி நீதிபதி கர்ணன் மனு

நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகக் கூறி தனக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்துப் பிறப்பித்துள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கொல்கத்தா

News image
Updated On :11 மே 2017, 9:22 pm

DIN

நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகக் கூறி தனக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்துப் பிறப்பித்துள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சை புகார்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு எதிராக ஊழல் புகார்களைத் தெரிவித்து தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான கர்ணன், பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு அனுப்பினார். இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து, வழக்காக பதிவு செய்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீதிபதி கர்ணன் ஏற்கவில்லை. மேலும், தன் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்ததாகக் கூறி நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை கைது செய்யும்படி மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தனிப்படை தேடுதல்: இதையடுத்து சென்னையில் தங்கியிருந்த நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா நகர காவல்துறையின் தனிப்படை தமிழகம் வந்தது. இதைத்தொடர்ந்து, ஆந்திர மாநிலத்துக்கு அவர் சென்றிருக்கலாம் என்ற தகவல் அடிப்படையில் அங்கு சென்று தேடிப்பார்த்த தனிப்படை, மீண்டும் சென்னை திரும்பியது.
இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி நீதிபதி கர்ணன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கர்ணன் மனு: நீதிபதி கர்ணன் மீதான புகாரில் அவரிடம் முறைப்படி விளக்கம் பெறாமல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாமல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் கருதுகிறார். நீதித்துறையைச் சேர்ந்த கர்ணனின் நியமனம் குடியரசு தலைவரால் மேற்கொள்ளப்பட்டது. அவரை பணியில் இருந்து நீக்கவோ, தகுதி நீக்கம் செய்யவோ நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆனால் இந்த விதிகளை உச்ச நீதிமன்றம் பின்பற்றவில்லை. நீதிபதி கர்ணன் தனது கடமையை ஜனநாயக முறையில் நிறைவேற்ற அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அளித்துள்ள புகாரை இதுவரை உச்ச நீதிமன்றமோ மத்திய அரசோ விசாரிக்கவில்லை. இது தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ள புகார்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதா அல்லது பரிசீலனையில் உள்ளதா என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை.
நேரம் கேட்டு கடிதம்: இந்நிலையில் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் பெற்றுள்ள குடியரசுத் தலைவரை சந்திக்க நீதிபதி கர்ணன் நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அவரை சந்தித்து தன் மீதான நடவடிக்கை தவறு என்பதை நிரூபிக்க அவர் வாய்ப்பு கோரவுள்ளார். ஆனால், கர்ணனின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்க பொறுப்பை வகித்து வரும் நீதிபதி கர்ணன் எங்கும் ஓடி ஒளிய மாட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.