

உத்தரப் பிரதேச மாநிலம், உன்சாஹர் தேசிய அனல் மின் நிலையத்தில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 29-ஆக அதிகரித்துள்ளது.
மத்திய இணையமைச்சர் ஆர்.கே.சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வியாழக்கிழமை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
ரேபரேலி மாவட்டம், உன்சாஹரில் உள்ள என்டிபிசி அனல் மின் நிலையத்தின் 6-ஆவது அலகில் பாய்லர் ஒன்று புதன்கிழமை மதியம் வெடித்தது. இதையடுத்து, அந்த பாய்லரில் இருந்து சூடான திரவம் வெளியே கொட்டியது. அதில், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் சிக்கி, 20 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ரேபரேலி, லக்னெள ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராகுல் நேரில் ஆறுதல்: இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக, குஜராத் மாநிலத்துக்குப் புறப்பட்ட ராகுல் காந்தி, தனது பயணத்தை ஒத்திவைத்துவிட்டு, ரேபரேலிக்கு வியாழக்கிழமை வந்தார்.
அங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ராஜ் பப்பர் ஆகியோர் வந்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து, விபத்து நேரிட்ட என்டிபிசி அனல் மின் நிலையத்துக்குச் சென்று ராகுல் காந்தி பார்வையிட்டார். அங்கு விபத்து நிகழந்தது எப்படி என்பது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
நீதி விசாரணைக்கு கோரிக்கை: பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசுகையில், ""கட்டுமானப் பணிகள் முடிவடைவதற்கு முன்பே இந்த ஆலை திறக்கப்பட்டு விட்டதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்; இதுதொடர்பாக, உயர் நிலைக் குழு விசாரணை நடத்த வேண்டும்"" என்றார்.
குலாம் நபி ஆஸாத் கூறுகையில், ""இந்த விபத்தில் உண்மையை வெளிக்கொணர்வதற்கு சுதந்திரமான அமைப்பு மூலம் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்"" என்றார்.
அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதிக்குச் சென்று, விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நிவாரணம் ரூ.20 லட்சமாக அதிகரிப்பு: இதனிடையே, மத்திய இணையமைச்சர் ஆர்.கே.சிங், என்டிபிசி அனல் மின் நிலையத்துக்குச் சென்று, விபத்து நேரிட்ட பகுதியை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அனல் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள், மார்ச் மாதத்துக்கு முன்பே முடிவடைந்துவிட்டன. 3 மாத பரிசோதனை ஓட்டத்துக்குப் பிறகே, மின் உற்பத்தி தொடங்கியது.
மின் உற்பத்தி நிலையத்தின் வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு இவற்றில் உள்ள குறைபாடு காரணமாக, விபத்து நேரிட்டிருக்கலாம். எனவே, இரு கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம், தலா ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
துணை முதல்வர் தினேஷ் சர்மா, மாநில மின்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா ஆகியோரும் ரேபரேலிக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் சிலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை, 29-ஆக அதிகரித்தது.
என்.ஹெச்.ஆர்.சி. நோட்டீஸ்: அனல் மின் நிலைய விபத்து குறித்து விளக்கம் கேட்டு, உத்தரப் பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.ஹெச்.ஆர்.சி.) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸுக்கு 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் என்.ஹெச்.ஆர்.சி. கேட்டுக் கொண்டுள்ளது.
பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு: இதனிடையே, பிரதமர் மோடி, தனது நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
உன்சாஹர் என்டிபிசி அனல் மின் நிலையத்தில் 1,550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, 9 மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த மின் நிலையத்தில் 870 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதனிடையே, விபத்து நேரிட்ட 6-ஆவது அலகு (550 மெகா வாட்) புதன்கிழமை மாலை முதல் மூடப்படுவதாக, என்டிபிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.