

ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-ஆவது கூட்டம் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மேலும் சில பொருள்களுக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி கடந்த ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, மாதம்தோறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி தொடர்பாகக் கூறப்படும் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது.
இதில், கைகளால் தயாரிக்கப்படும் நாற்காலி, மேஜை உள்ளிட்ட மரச் சாமான்கள், மின்சார ஸ்விட்ச், பிளாஸ்டிக் பைப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள், கழிவறைக் கோப்பைகள், கார், பைக் சீட், அதற்கான கவர்கள், கழிவறையில் பயன்படுத்தப்படும் பிற உபகரணங்கள், ஷாம்பு உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள், எடை பார்க்கும் இயந்திரம், கம்ப்ரஸர் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி குறைக்கப்படும் என்று தெரிகிறது. இவற்றுக்கு இப்போது 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இனி 18 சதவீதத்துக்கு கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான வரி மேலும் குறைப்பட்டு வரி விகிதம் முறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
ஜிஎஸ்டி-யில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு விகிதங்களில் வரிகள் விதிக்கப்படுகின்றன. ஜிஎஸ்டி வரிவிகிதம் அமலாவதற்கு முன்பு குறு, சிறு தொழில் நிறுவனங்கள் 28 சதவீதத்துக்கும் குறைவான வரியைச் செலுத்தி வந்தன.
ஆனால் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு பெரும்பாலான குறு, சிறு தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது.
இதையடுத்து, குறு, சிறு தொழில்களை அதிகம் கொண்ட பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர் சங்கத்தினர் அண்மையில் வருவாய்த் துறை அதிகாரிகளைச் சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தனர். எனவே, அவர்கள் தயாரிக்கும் பொருள்களுக்கான வரி விகிதம் குறைக்கப்படும் என்று தெரிகிறது.
தொகுப்பு முறைத் திட்டத்தின்கீழ் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு சதவீதம் மட்டுமே வரி விதிக்க வேண்டும். குளிர்சாதன வசதி இல்லாத உணவகங்களுக்கு வரியைக் குறைக்க வேண்டும் என்று அஸ்ஸாம் நிதியமைச்சர் ஹேமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான மாநில நிதியமைச்சர்கள் குழு அளித்த பரிந்துரை ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏசி இல்லாத உணவகங்களில் இப்போது 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கு இடையே வர்த்தகம் செய்வோரையும் தொகுப்பு முறைத் திட்டத்தில் கொண்டுவரப் பரிசீலிக்கப்படும். வர்த்தகர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்தும் நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.