படேல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான 3 அம்ச செயல் திட்டத்தை ஹார்திக் படேல் தலைமையிலான அமைப்பிடம் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அதனைப் பரிசீலித்த பிறகு குஜராத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பது தொடர்பான முடிவை அறிவிக்கப் போவதாக படேல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலிடம் அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் புதன்கிழமை நள்ளிரவு ஆலோசனை நடத்தினர். அப்போதுதான் அந்த 3 அம்ச செயல் திட்டங்கள் காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க படேல் போராட்டக் குழுத் தலைவர் ஹார்திக் படேல் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த மாநில பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி அங்கு தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரைத் தவிர பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் அந்த மாநிலத்தில் முகாமிட்டு வருகின்றனர்.
இதற்கு நடுவே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் குஜராத்தில் பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். கடந்த 20 ஆண்டு கால பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதேவேளையில், பாஜகவோ குஜராத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறது. ஒருவேளை தேர்தலில் பாஜக பின்னடைவைச் சந்தித்தால், அது தேசிய அளவில் அக்கட்சியைப் பாதிக்கக்கூடும். எனவே, குஜராத் தேர்தலை காங்கிரஸும், பாஜகவும் அதிமுக்கியமாகக் கருதுகின்றன. படேல் சமூகத்தினரின் வாக்கு வங்கி அந்த மாநிலத்தில் குறிப்பிட்டத்தக்க அளவில் இருப்பதால் அதன் தலைவர்களின் ஆதரவைப் பெறுவதில் இரு கட்சிகளுமே தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த சூழலில், படேல் சமூக அமைப்பான பிஏஏஎஸ்-இன் தலைவர் ஹார்திக் படேல் காங்கிரஸ் தலைவர்களை அண்மையில் சந்தித்துப் பேசினார்.
அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கினால் காங்கிரஸுக்கு ஆதரவளிக்கத் தயார் என அவர் நிபந்தனை விதித்தார். இத்தகைய சூழலில்தான் அதற்கான 3 அம்ச செயல்திட்டங்களை காங்கிரஸ் அவரது அமைப்பிடம் முன்வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.