தில்லி காற்று மாசு விவகாரம்: மத்திய அரசு, 3 மாநில அரசுகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் மிக கடுமையான அளவில் காற்று மாசு இருந்து வருவதைத் தொடர்ந்து, மத்திய அரசு, தில்லி, பஞ்சாப், ஹரியாணா மாநில அரசுகளுக்கு
Updated on
1 min read

தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் மிக கடுமையான அளவில் காற்று மாசு இருந்து வருவதைத் தொடர்ந்து, மத்திய அரசு, தில்லி, பஞ்சாப், ஹரியாணா மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
தில்லியில் காற்று மாசு கடுமையாக நிலவி வருகிறது. இதை உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் தடுப்பு ஆணையமே (இபிசிஏ) தெரிவித்துள்ளது. இந்தக் கடுமையான காற்று மாசுவுக்கு தில்லியின்அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நீடித்து வரும் காற்று மாசு தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், சுகாதாரம், நெடுஞ்சாலைப் போக்குவரத்து ஆகிய துறைகளின் அமைச்சங்களுக்கும், தில்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநில அரசுகளின் தலைமைச் செயலர்களுக்கும் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த மோசமான காற்று மாசு உயிருக்கும், சுகாதாரத்திற்குமான உரிமையை மீறும் வகையில் இருப்பதால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசுகள் நிலைமையைச் சமாளிக்க எடுத்துள்ள நடவடிக்கை விவரங்கள் அடங்கிய அறிக்கையை இரு வாரங்களுக்குள் ஆணையத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் மனித உரிமை ஆணையம் கூறியிருப்பதாவது: நச்சு காற்று சூழலால் பொதுமக்கள் உயிரிழப்பதை சகித்துக் கொள்ள முடியாது. தில்லி, என்சிஆர் பகுதிகளில் நிலவி வரும் காற்று மாசு சூழலை ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த மோசமான நிலையை சமாளிக்க ஆண்டு முழுவதும் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.
இச் செயலானது பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு வாசிகளின் சுகாதாரம், உயிருக்கான உரிமை மீறலுக்கு ஒப்பாகும். ஆகவே, இந்த மாசு சூழலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் உரிய மருத்துவ வசதிகளை பெறுவதற்கு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து சுகாதாரத் துறை செயலர் உரிய விவரங்களை அளிக்க வேண்டும். 
மேலும், மத்திய, மாநில அரசுகள் அளவில் உள்ள துறைகள் மூலம் உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படுவதும் அவசியமாகும். இதற்கான உரிய சுற்றுச்சூழல் விதிகளும் அமலாக்கப்பட வேண்டும். அதேபோன்று, சுற்றுச்சூழல் வல்லுநர்கள் இதுபற்றி திறன்மிக்க ஆய்வை மேற்கொள்வதும், காற்று மாசுவை தடுக்க குறுகிய கால, நீண்டகால நடவடிக்கைகள் உள்பட வல்லுநர்களின் பரிந்துரைகளை அமல்படுத்துவதும் அவசியமாகும். அதேபோன்று, முன்தடுப்பு மருத்துவப் பரிசோதனைகளும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com